Friday, 30 January 2015

சரீரமாகிய ஆலயம்

உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள். - (1கொரிந்தியர் 6:19-20).

நம்மில் அநேகர், அளவுக்கு மீறி வேலைகளை செய்து, மிகவும் சோர்ந்து, களைப்படைந்துப் போகிறோம். ஒரேயடியாக வேலை வேலை என்று அதிலேயே கவனமாக இருப்பதால் நம் சரீரத்தைக் குறித்து கவலையற்றவர்களாக காணப்படுகிறோம்.

நம்முடைய ஆவிக்குரியக் காரியங்களும், உணர்ச்சிகளுக்குரிய, சிந்தனைகளுக்குரிய காரியங்களும் நம் சரீரத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது. நம் சரீரத்தை கவனமாக பராமரிக்கத் தவறும் போது, நம் சரீரம்மாத்திரமல்ல, நம்முடைய எல்லா சிந்தனை, உணர்ச்சி, ஆவிக்குரிய வகைகளிலும், நோய்வாய்ப்பட்டுப் போகிறோம். இந்நாட்களில் தொலைக்காட்சிகளில் நம் உடல்நிலையைக் குறித்த அநேக மருந்தகளையும், உடற்பயிற்சி கருவிகளையும், குறித்த விளம்பரங்களையும் காண்கிறோம். அந்த விளம்பரங்களைப் பார்த்து, வாங்கி, சரீரத்தின் தோல் சுட்டுக் கொண்டதுதான் மிச்சம்!

நாம் சற்று யோசித்துப் பார்ப்போம், நாம் எந்த அளவு நம்முடைய சரீரத்தை கவனமாக காத்துக் கொளகிறோம் என்று? நாம் தேவையான அளவு தண்ணீரைக் குடிக்கிறோமா? வேலை வேலை என்று தண்ணீர் குடிக்கக் கூட நேரமில்லை என்றுக் கூறுகிறோமா? எத்தனையோ வியாதிகளுக்கு, தண்ணீர் குடிப்பதே மருந்தாக இருக்கிறது! ஏன், உடல் பருமனைக் குறைக்கவும் கூட தண்ணீர் அதிகமாக உதவுகிறது. சாப்பிட வேண்டிய உணவுகளை நாம சாப்பிடுகிறோமா? இல்லாவிட்டால் ஏதோ வயிற்றை நிரப்ப வேண்டும் என்று எது கிடைக்கிறதோ அதை சாப்பிட்டு வயிற்றை நிரப்புகிறோமா?

அநேகருடைய வேலை அமர்ந்தே செய்யும் வேலையாயிருக்கும். வேலை முடிந்த பிறகு நாம் ஒரு அரை மணி நேமாவது நடக்கிறோமா? அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. தேவையான அளவு தூங்குகிறோமா? ஒரு நாளைக்கு ஆறு மணியிலிருந்து ஏழு மணி நேரம் தூங்க வேண்டும். ஆனால் வேலை வேலை என்று ஓய்வெடுக்காமல், தூக்கமில்லாமல், வேலை செய்து உடல்நலத்தைக் கெடுத்துக்கொள்வதால் என்ன பயன்? அநேகர், சரியான நேரத்தில் உணவருந்த மாட்டார்கள். வேலை வேலை என்று பிஸியாக இருந்துவிட்டு, நேரம் கெட்ட வேளையில் சாப்பிடுவார்கள். வயிற்றில் அல்சர் வந்தப பிறகு மருந்து எடுத்து என்ன பயன்? சிலர் காலை வேளை எதையும் சாப்பிட மாட்டார்கள். ஆனால் இரவு வேளை உணவை விடலாம். ஆனால் காலை வேளை உணவு மிகவும் முக்கியம். அது Breaking the fast அதனால் தான் அது Break fast.

சிலர், புகைபிடித்து, அல்லது வேறு காரியங்களுக்கு தங்கள் சரீரங்களில் இடம் கொடுத்து அதை அசுசிப்படுத்துகிறார்கள். நமது சரீரம் தேவனுடைய ஆலயமாக இருப்பதால் அவற்றை நாம் கண்டிப்பாக நிறுத்தியே ஆக வேண்டும். நீங்கள் உங்களுடையவர்களல்லவென்று அறியீர்களா? கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; இயேசுகிறிஸ்து நம் மாசில்லாத இரத்தத்தை சிந்தி உங்களை மீட்டுக் கொண்டாரே, தமது, குற்றமில்லாத இரத்தத்தை கிரயமாக செலுத்தி உங்களை மீட்டுக் கொண்டாரே, பின் எப்படி அதை கெட்ட காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்?

சாப்பிட வேண்டிய அளவு சாப்பிட்டு, தூங்க வேண்டிய அளவு தூங்கி, நடக்க ணே;டிய அளவுநடந்தால், நம் உடல் நலத்தை தக்க வைத்துக் கொள்ளலாம். அகஸ்டின் ஜெபக்குமார் அண்ணன் அவர்கள், ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டி கொஞ்சம் கூட அதிகமாக சாப்பிட மாட்டார்கள். என்னதான ருசியாக இருக்கட்டும், அந்த அளவு தான். அந்த மாதிரி குறிப்பிட்ட அறவு மாத்திரம் சாப்பிட்டு, தங்கள் உடல் நலத்தைக் காத்து அநேகருக்கு பிரயோஜனமாயிருக்கும்படி, கர்ததருடைய ஊழியத்தை செய்யும்படி தங்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறர்கள். Father. Berchmans அவர்களும் அப்படித்தான். அவர் சொல்வார், இன்னும் கர்த்தருக்கு என்று ஓடியாடி உழைக்க வேண்டாமா? இப்படி சாப்பிட்டு உடல் நலத்தைக் கெடுத்தால் பிறகு எப்படி கர்த்தருக்கு ஊழியம் செயவது? என்று சொல்வார்கள்.

கர்த்தருக்கென்று பெரிய காரியங்களை சாதிக்க வேண்டுமா? உங்கள் மனநிலையும் சிந்தனைகளும் சரியாக வேலை செய்ய வேண்டாமா? உங்கள் உடல் நலத்தை பேணிக் கொள்ளுங்கள். நமது சரீரம் தேவனுடைய ஆலயமாயிருக்கிறபடியால், ஆவியானவர் வாசம் செய்யும் ஆலயமாயிருக்கிறபடியால், நாம் நம் சரீர பாண்டங்களை ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய நமது சரீரத்தினாலும் நமது ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துமபடியாக நமது சரீரங்களை சரியானபடி காத்து அவருக்கென்று சாட்சியாக இன்னும் அநேக ஆண்டுகள் வாழ்ந்து அவரை மகிமைப் படுத்துவோமாக.
ஆமென் ஆல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Saturday, 10 January 2015

மாரநாதா இயேசு.. சீக்கிரம் வரப் போகின்றார்

பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம். அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். லூக்கா 21: 26-28.

நாம் வாழும் இந்த உலகத்தில் மனிதர்கள் வாழ முடியாத நிலை விரைவில் உண்டாகும் என எல்லா மக்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுளின் உள்ளத்திலும் பயம் எழுந்துள்ளது. இதன் விளைவாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அண்டவெளியில் உள்ள பூமியைப் போல் எவ்வளவு கிரகங்கள் உள்ளன என்று ஆராயும்படியாக, கடந்த 2009ம் ஆண்டு விண்வெளி தொலை நோக்கியுடன் கூடிய ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை டெல்டா 2 ராக்கெட் மூலம் நாசா விஞ்ஞானிகள் விண்ணுக்கு அனுப்பினர். கெப்லர் விண்கலம் மூலம் அண்டவெளியில், ‘கோல்டிலாக்ஸ்’ என்ற பகுதியில் 8 புதிய கிரகங்கள் அதன் நட்சத்திரங்களை சுற்றிக் கொண்டிருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் தண்ணீர் இருக்கலாம் என்பதால், உயிர் வாழும் சூழலுக்கு வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதிலும் குறிப்பாக 2 கிரகங்கள் கிட்டத்தட்ட பூமியைப் போல் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விண்வெளியில் 8 புதிய கிரகங்கள் சுற்றிக் கொண்டிருப்பதை, நாசா விஞ்ஞானிகள் கெப்லர் விண்கலத்தின் தொலை நோக்கி மூலம் கண்டறிந்துள்ளனர். இதில் தண்ணீர் இருக்கலாம் என்பதால் உயிர்வாழும் சூழலுக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதில் 2 கிரகங்கள் கிட்டத்தட்ட பூமியைப் போல் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதற்க்கு கெப்லர் 438பி, கெப்லர் 442பி என பெயரிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் சிவப்பு நிற நட்சத்திரங்களை சுற்றிக் கொண்டிருக்கின்றன. நாம் வாழும் பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்களை எடுப்பது போல, கெப்லர் 438பி என்ற கோள் அதன் நட்சத்திரத்தை சுற்றி வர 35 நாட்களும், கெப்லர் 442பி கோள் அதன் நட்சத்திரத்தை ஒரு முறை சுற்ற 112 நாட்களும் எடுக்கின்றது. நீங்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், கெப்லர் 438பி என்ற கோளுக்கு ஒரு ஆண்டு என்பது 35 நாட்களும், கெப்லர் 442பி என்ற கோளுக்கு ஒரு ஆண்டு என்பது 112 நாட்களும் ஆகும். இந்த குறுகிய நாட்களில் தான் குளிர் காலம், வெயில் காலம், மழை காலம், பணிக் காலம் என மாறி மாறி வரும். நாசா விஞ்ஞானிகள் இங்கு உயிர் வாழும் சூழலுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறினாலும் நிச்சயமாக இங்கு மனிதர்களால் வாழ முடியாது.

இந்த கிரகங்களில் உயிர்வாழும் சூழல் இருக்கவேண்டும் என்றால், பூமி பெறும் சூரிய ஒளி அளவுக்கு சமமாக அதன் நட்சத்திரங்களில் இருந்து அந்த கோள்கள ஒளியைப் பெற வேண்டும். அதிக ஒளியை பெற்றால் அதில் உள்ள தண்ணீர் ஆவியாகிவிடும். குறைந்த ஒளியை பெற்றால், தண்ணீர் ஐஸ்கட்டியாக மாறிவிடும். கெப்லர் 438பி கோள், பூமியை விட 40 சதவீத ஒளியை கூடுதலாக பெறுகிறது. கெப்லர் 442பி கோள், பூமியைவிட 66 சதவீத ஒளியை கூடுதலாக பெறுகிறது. ஆகவே நிச்சயமாக இங்கு மனிதர்களால் வாழவே முடியாது.

வேத வசனம் சொல்கின்றது மனிதன் பூமியின்மேல் வருகின்ற ஆபத்துகளான கொள்ளை நோய்கள், அனு ஆயுதங்கள், அதிரவைக்கும் தீவிரவாதம் என எல்லாவற்றயும் பார்த்து பயந்து, எப்படியாவது பூமியைப்போன்ற வேறொரு கிரகத்தை கண்டுபிடித்து அங்கு சென்று பயமின்றி சந்தோஷமாய் வாழ ஆசைப்படுகின்றான் மனிதன். ஆனால் இன்னும் அதற்கான வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் “பரலோகம்” என்ற கிரகத்தை கண்டுபிடித்துவிட்டார்கள். அங்கே "நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்" ஏசாயா 35:10. மாரநாதா இயேசு.. சீக்கிரம் வரப் போகின்றார்.
ஆமென்..அல்லேலூயா

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Thursday, 8 January 2015

பரிதபிக்கப்படதக்கவர்கள்

இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். - (1 கொரிந்தியர் 15:19).

ஒரு கிறிஸ்த தம்பதியினருக்கு அநேக வருடங்கள் கழித்து, ஒரு மகள் பிறந்தாள். பக்தியிலும், அன்பிலும், அரவணைப்பிலும் வளர்க்கப்பட்டாள். அவளது ஐந்தாவது பிறந்த நாளுக்கு அவளுடைய அப்பா ஒரு அழகிய பொம்மை ஒன்றை வாங்கி கொடுத்தார். பார்ப்பதற்கு அசல் குழந்தையைப் போலவே காணப்பட்ட அந்த பொம்மைதான் படுக்கும்போது அவளுக்கு துணை.

ஒரு நாள்  இரவு படுக்கும்போது பொம்மையைத் தேடினாள். காணவில்லை. அப்போது தான் மதியானம் மாடி அறையில் விளையாடி விட்டு அதை அங்கேயே விட்டு வந்தது நினைவிற்கு வந்தது. உடனே அம்மாவிடம் சென்று. 'அம்மா மாடியில் என் பொம்மை இருக்கிறது. அதை எடுத்துக் தாருங்கள்' என்று அழுதாள். சமையலறையில் வேலையிருந்த அம்மா, 'எனக்கு வேலையாயிருக்குமா, நீ இயேசப்பாவை துணைக்கு கூப்பிட்டுக் கோயேன்' என்றார்கள்.

உடனே அவள் மாடிப்படிகட்டுக்கு முன் நின்று கண்களை மூடி, 'இயேசப்பா எனக்கு மாடிக்கு போக பயமா இருக்கு. நீங்க என் கூட வாங்க' என்று ஜெபித்து விட்டு, மடமடவென மேலே ஏறிச் சென்று பொம்மையை எடுத்துக் கொண்டு இறங்கினாள்.

கடைசிப்படிக்கு வந்ததும், மீண்டும் கண்களை மூடி, 'இயேசுப்பா என் கூட வந்ததற்கு மிகவும் நன்றி. இப்ப நீங்க போகலாம்' என்று ஜெபித்து விட்டு வேகமாக வந்து பொம்மையோடு படுத்துக் கொண்டாள். இதை கவனித்த தாய் 'என் மகளுக்கு நான் வேத சத்தியத்தை சரியாய் கற்றுக் கொடுக்கவில்லையே' என மனம் வருந்தினார்கள்.

இன்றும் அநேக கிறிஸ்தவர்கள் இச்சிறுப்பிள்ளையைப் போலவே காணப்படுகிறோம். நம்முடைய தேவையில், ஆபத்தில், குறைவில், வியாதியில், நெருக்கடியில், கடனில் கண்ணீரில் அவரை தேடுகிறோம்.   உதவி செய்யுமாறு அழைக்கிறோம். ஆனால் அவற்றிலிருந்து விடுவிக்கப்பட்டவுடன், நன்றி கூறிவிட்டு அவரை மறந்து விடுகிறோம்.    'இனி நீர் தேவையில்லை, நானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்'என சொல்வதைப் போல.

ஆனால் ஒரு கிறிஸ்தவன் வேதத்தின் மூலம் தேவனுடைய வாஞ்சையை அறிந்துக் கொள்ள முடியும் என்பதையும், ஒவ்வொரு நிமிடமும் அவரோடு உறவு கொள்ள முடியும் என்பதையும், ஒவ்வொரு நிமிடமும் அவரோடு ஐக்கியப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அநேக கிறிஸ்தவர்கள் அறியவில்லை என்பதே உண்மை.

நம் தேவன் நம்மை நேசிக்கிறவர். நாமும் அவரை நேசிக்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறவர். அவரோடு நாம் ஐக்கியப்படும்போது, அவரோடு ஒவ்வொரு நிமிடமும் தொடர்பு வைத்திருக்கும்போது நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையும் அழகாக வெளிப்படுத்துவார். நமக்கு சிறந்த ஆலோசனை சொல்லி நடத்துவார். வேதத்தின் மூலம் தம்முடைய சித்தத்தை வெளிப்படுத்துவார்.

'இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்' என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. எனக்கு இது வேண்டும் அது வேண்டும் என்று உலக காரியங்களுக்காக மாத்திரம் நாம் தேவனை தேடி, ஆவிக்குரிய உலகில், ஆவிக்குரிய தேவைகளை தேடாமல் போவோமானால், மற்ற எல்லாரைப் பார்க்கிலும் நாமே பரிதபிக்கப்படத் தக்கவர்கள்.

ஏனென்றால், இந்த உலகம் நிரந்தரமானது அல்ல, நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது. அங்கு நித்திய நித்தியமாய் வாழ்கின்ற வாழ்வைக் குறித்து தேடாமல், நிரந்தரமல்லாத காரியங்களுக்காக நாம் தேவனை தேடி, நித்திய வாழ்வை கோட்டை விட்டால், அதைவிட பரிதாபமான நிலை வேறு எதுவுமில்லை.

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும் - (மத்தேயு 6:33).
ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Wednesday, 7 January 2015

எல்லாம் புதிதாயின

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).

ஒரு மனிதர் மிகவும் நன்றாக திட்டமிட்டு, எல்லா புதிய வசதிகளோடும் ஒரு அழகிய வீட்டைக் கட்டினார். அந்த வீட்டைப் பார்த்தவர்கள் அதை பாராட்டாமல் போக முடியாது. அந்த அளவு அழகாக இருந்தது அந்த வீடு.

அப்படிக் கட்டினவர் அந்த வீட்டின் உள்ளே எல்லாமே மாடர்ன் டெக்னாலஜியிலே அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், உள்ளே நுழைந்ததுமே பார்த்து முகத்தை சுளிக்கும் வகையில் ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. அது ஏன் வைக்கப்பட்டிருந்தது என்றுக் கேட்டபோது, அது என் பழைய வாலிப நாட்களில் நான் வாங்கினது, பழைய நினைவுகளை நான் மறக்காமல் இருக்கும்படியாக இந்தப் படம் இங்கு மாட்டப்பட்டுள்ளது என்று கூறினார். அவருக்கு ஒருவேளை அது பிரயோஜனமாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு அது அருவருப்பாக இருந்தது.
.
இத்தனை அழகிய வீட்டிற்கு இந்த படம் தேவையில்லாதது என்று பலர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் அந்த வீட்டின் அழகும் சௌந்தர்யமும் கெட்டுப் போயிற்று.

பிரியமானவர்களே ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின என்று வேதம் கூறுகிறது. ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருந்தால், அவனது பழைய நிலைமையும், பழைய வாழ்க்கையும் பழைய சுபாவங்களும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இன்னும் அவன் பழையதையே நினைத்துக் கொண்டிருந்தால் ஒருபோதும் அவன் கிறிஸ்துவுக்குள்ளாக புதிய சிருஷ்டியாக மாற முடியாது.

நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியும் தன் நாவையும், தன் செயல்களையும், தன் கிரியைகளையும் கிறிஸ்துவுக்கு ஒப்பாக மாற்றாவிட்டால், அல்லது அவற்றை விட்டுவிட்டு புதிய மனிதனாக, மனுஷியாக மாறாவிட்டால், அவர்கள் பெற்ற இரட்சிப்பு வீணானதாக இருக்கும்.

இயேசுகிறிஸ்து அற்புதம் செய்த கானாவூர் கல்யாணத்தில் அவர் பழைய திராட்ச இரசம் முடியும் வரை காத்திருந்தார். ஏனெனில் அது மனித முயற்சியாக இருந்தது. அதுமுடிந்தபோது, வெறும் தண்ணீரை அவர் ருசி நிறைந்த திராட்சஇரசமாக மாற்றினார். இது தேவனுடைய முயற்சி. தேவனுடைய முயற்சி எப்போதும் எதிலும் சிறந்ததாகவே இருக்கும். மற்றவர்கள் வந்து, 'இந்த திராட்சரசத்தை முதலிலேயே தராமல் எங்கு வைத்திருந்தீர்கள்' என்று கேட்கும் அளவிற்கு அந்த தண்ணீர் சுவையுள்ள இரசமாக மாறியது.

பழைய காரியங்களும், சுபாவங்களும் நம் வாழ்வில் நிறைந்திருக்கும் வரை அதனால் எந்த பலனும் இல்லை, மற்றவர்களுக்கு இடையூறாகத்தான் இருப்போம். ஆனால் என்று நம்மை கர்த்தர் மாற்றும்படியாக ஒப்புக்கொடுத்து, அவருடைய வார்த்தைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்கிறோமோ, அப்போது நம் வாழ்வு சுவை நிறைந்ததாக, மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ளதாக மாறி விடுகிறது. அல்லேலூயா!

சகேயு என்னும் ஆயக்காரர் வேதத்தில் மக்களிடம் அநியாயமாக வரிப்பணத்தை வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் இயேசு அவரை என்று சந்தித்தாரோ அன்றே அவருடைய வாழ்க்கை மாறிற்று. பழைய குணங்கள் மாறியது. கர்த்தர் கேட்காமலேயே  'சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்' (லூக்கா 19:8). இதுதான் புதுசிருஷ்டியாக மாறுதல்! இதுதான் உண்மையான மனம் திரும்புதல்! அதைக் கண்ட  'இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது' என்று கூறினார்.

பிரியமானவர்களே, நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றால் நம் வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமானதாக, புதியதான இருதயமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். இன்னும் பழைய சுபாவங்களையும், பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும் கோபங்களையும், பாவங்களையும் நம்மிலே வைத்துக் கொண்டு நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று சொன்னால் அது வீண். கிறிஸ்து நமக்குள் இருக்கும்படியாக, புதிய சிருஷ்டியாக நம்மை கர்;த்தருக்கு ஒப்புக் கொடுப்போம். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின என்ற வார்த்தையின்படி நம் வாழ்வில் பழைய தேவையற்ற காரியங்கள் ஒழிந்துப் போகட்டும், எல்லாம் புதிதாக மாறட்டும்! கர்த்தருக்கு மகிமைத்தரும் காரியங்கள் நிரம்பட்டும்!
ஆமென் அல்லேலூயா!

நன்றி- அனுதின மன்னா