Wednesday, 7 January 2015

எல்லாம் புதிதாயின

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. - (2 கொரிந்தியர் 5:17).

ஒரு மனிதர் மிகவும் நன்றாக திட்டமிட்டு, எல்லா புதிய வசதிகளோடும் ஒரு அழகிய வீட்டைக் கட்டினார். அந்த வீட்டைப் பார்த்தவர்கள் அதை பாராட்டாமல் போக முடியாது. அந்த அளவு அழகாக இருந்தது அந்த வீடு.

அப்படிக் கட்டினவர் அந்த வீட்டின் உள்ளே எல்லாமே மாடர்ன் டெக்னாலஜியிலே அலங்கரிக்கப்பட்டிருந்தாலும், உள்ளே நுழைந்ததுமே பார்த்து முகத்தை சுளிக்கும் வகையில் ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. அது ஏன் வைக்கப்பட்டிருந்தது என்றுக் கேட்டபோது, அது என் பழைய வாலிப நாட்களில் நான் வாங்கினது, பழைய நினைவுகளை நான் மறக்காமல் இருக்கும்படியாக இந்தப் படம் இங்கு மாட்டப்பட்டுள்ளது என்று கூறினார். அவருக்கு ஒருவேளை அது பிரயோஜனமாக இருக்கலாம், ஆனால் மற்றவர்களுக்கு அது அருவருப்பாக இருந்தது.
.
இத்தனை அழகிய வீட்டிற்கு இந்த படம் தேவையில்லாதது என்று பலர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. அதனால் அந்த வீட்டின் அழகும் சௌந்தர்யமும் கெட்டுப் போயிற்று.

பிரியமானவர்களே ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின என்று வேதம் கூறுகிறது. ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருந்தால், அவனது பழைய நிலைமையும், பழைய வாழ்க்கையும் பழைய சுபாவங்களும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். இன்னும் அவன் பழையதையே நினைத்துக் கொண்டிருந்தால் ஒருபோதும் அவன் கிறிஸ்துவுக்குள்ளாக புதிய சிருஷ்டியாக மாற முடியாது.

நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியும் தன் நாவையும், தன் செயல்களையும், தன் கிரியைகளையும் கிறிஸ்துவுக்கு ஒப்பாக மாற்றாவிட்டால், அல்லது அவற்றை விட்டுவிட்டு புதிய மனிதனாக, மனுஷியாக மாறாவிட்டால், அவர்கள் பெற்ற இரட்சிப்பு வீணானதாக இருக்கும்.

இயேசுகிறிஸ்து அற்புதம் செய்த கானாவூர் கல்யாணத்தில் அவர் பழைய திராட்ச இரசம் முடியும் வரை காத்திருந்தார். ஏனெனில் அது மனித முயற்சியாக இருந்தது. அதுமுடிந்தபோது, வெறும் தண்ணீரை அவர் ருசி நிறைந்த திராட்சஇரசமாக மாற்றினார். இது தேவனுடைய முயற்சி. தேவனுடைய முயற்சி எப்போதும் எதிலும் சிறந்ததாகவே இருக்கும். மற்றவர்கள் வந்து, 'இந்த திராட்சரசத்தை முதலிலேயே தராமல் எங்கு வைத்திருந்தீர்கள்' என்று கேட்கும் அளவிற்கு அந்த தண்ணீர் சுவையுள்ள இரசமாக மாறியது.

பழைய காரியங்களும், சுபாவங்களும் நம் வாழ்வில் நிறைந்திருக்கும் வரை அதனால் எந்த பலனும் இல்லை, மற்றவர்களுக்கு இடையூறாகத்தான் இருப்போம். ஆனால் என்று நம்மை கர்த்தர் மாற்றும்படியாக ஒப்புக்கொடுத்து, அவருடைய வார்த்தைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்கிறோமோ, அப்போது நம் வாழ்வு சுவை நிறைந்ததாக, மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ளதாக மாறி விடுகிறது. அல்லேலூயா!

சகேயு என்னும் ஆயக்காரர் வேதத்தில் மக்களிடம் அநியாயமாக வரிப்பணத்தை வாங்கிக் கொண்டிருந்தார். ஆனால் இயேசு அவரை என்று சந்தித்தாரோ அன்றே அவருடைய வாழ்க்கை மாறிற்று. பழைய குணங்கள் மாறியது. கர்த்தர் கேட்காமலேயே  'சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான்' (லூக்கா 19:8). இதுதான் புதுசிருஷ்டியாக மாறுதல்! இதுதான் உண்மையான மனம் திரும்புதல்! அதைக் கண்ட  'இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது' என்று கூறினார்.

பிரியமானவர்களே, நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்றால் நம் வாழ்க்கை கர்த்தருக்கு பிரியமானதாக, புதியதான இருதயமாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். இன்னும் பழைய சுபாவங்களையும், பழக்க வழக்கங்களையும், பாரம்பரியங்களையும் கோபங்களையும், பாவங்களையும் நம்மிலே வைத்துக் கொண்டு நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்று சொன்னால் அது வீண். கிறிஸ்து நமக்குள் இருக்கும்படியாக, புதிய சிருஷ்டியாக நம்மை கர்;த்தருக்கு ஒப்புக் கொடுப்போம். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின என்ற வார்த்தையின்படி நம் வாழ்வில் பழைய தேவையற்ற காரியங்கள் ஒழிந்துப் போகட்டும், எல்லாம் புதிதாக மாறட்டும்! கர்த்தருக்கு மகிமைத்தரும் காரியங்கள் நிரம்பட்டும்!
ஆமென் அல்லேலூயா!

நன்றி- அனுதின மன்னா

No comments:

Post a Comment