Tuesday, 28 October 2014

ஆவியின் கனியோ அன்பு...பாகம் 2

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. -(கலாத்தியர் 5:22-23).
முதலாம் சுளை அன்பு:


அன்பு என்ற சொல்லுக்கு நான்கு சொற்கள் கிரேக்க மொழியிலே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பிலியோ என்பது சிநேகிதருக்குள் காண்பிக்கப்படும் அன்பு. ஈரோஸ் என்பது கணவன் மனைவியிடைய காண்பிக்கப்படும் அன்பு. ஸ்டார்க்கே என்பது குடும்பத்தில் உறவினர்கள் மத்தியில் காண்பிக்கப்படும் அன்பு. அகப்பே என்பது தெய்வீக அன்பு என்பதாகும். கர்த்தர் நம்மிடத்தில் வெளிப்படுத்தியது அகப்பே அன்பாகும்.

தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் நமக்கு கூறுகிறது. அந்த அன்பினாலேதான் 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' (யோவான் 3:16) என்று அவருடைய அளவில்லாத அன்பை காண்கிறோம்.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:8). கிறிஸ்து நம் மேல் வைத்த அன்பினாலே தம் ஜீவனையும் பாராமல், பாடுகளையும் வேதனையையும் சகித்து, சிலுவையிலே நமக்காக மரித்தார். மீண்டும் உயிர்த்து, நமக்காக ஒரு வீட்டை பரலோகத்தில் ஆயத்தம் செய்ய போயிருக்கிறார். நம்மை அழைத்துச் செல்ல மீண்டும் வருவார். ஆமென்.
ஆவியானவரின் கனியாகிய அன்பு இப்படி பிதா, குமாரன், பரிசுத்தஆவியானவராகிய திரியேக தேவன் நம்மேல் அன்பு வைத்திருக்கும்போது, நாமும் அவர் மேல் அன்புக்கூர கடனாளிகளாயிருக்கிறோம். அவரிடத்தில் இருந்து பெற்ற அன்பை மற்றவர்களுக்கு காண்பிக்கும்போது, மற்ற அன்புகளைவிட தெய்வீக அன்பை காண்பிக்கும்போது தேவன் அங்கு மகிமைப்படுகிறார்.

கார்லும், ஈடித்தும் கணவன் மனைவியாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு பிள்ளையில்லை. ஆனால் இருவரும் ஒருவரிலொருவர் அன்பு நிறைந்தவர்களாக, 23 வருடங்களாக குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். கார்ல் அரசாங்கத்தில் வேலையில் இருந்தபடியால், அவருக்கு வேறு இடத்திற்கு சென்று அலுவலை முடித்து வரும் நிலைமை இருந்து வந்தது.

ஒருமுறை அவருக்கு ஜப்பானில் உள்ள ஒக்கினாவா என்னுமிடத்தில் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதினால் அங்கு சென்ற அவரிடம் இருந்து கடிதம் வருவது திடீரென்று குறைந்தது. முன்பெல்லாம் வேறு இடம் சென்றால் அடிக்கடி கடிதம் எழுதுபவர், இப்போது குறைத்துக் கொண்டாரே, ஒருவேளை வேலைப்பளு அதிகமாயிருக்கும் என்று ஈடித் நினைத்துக் கொண்டார்கள்.

ஒருநாள் அவரிடமிருந்து கடிதம் வந்தது, 'நம் திருமண வாழ்வு முடிந்து விட்டது' என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அவர் அங்கு ஐக்கோ என்னும் பத்தொன்பதே வயது நிரம்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வந்தது. பெரிய இடியைப் போன்று இந்த செய்தி வந்தபோதும், ஈடித் கர்த்தரை விசுவாசிக்கிற சகோதரியாக இருந்தபடியால், அவர்கள் மேல் கோபப்படாமல், பரிதாபப்பட்டார்கள். எப்போதும் தன்னையே சார்ந்து ஜீவிக்கிற தன் கணவன் இப்போது என்ன செய்வார் என்று.

கார்லிடமிருந்து அவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்ததாக கடிதம் வந்தது. இந்த சகோதரி அந்த பிள்ளைகளுக்கு பரிசுகள் வாங்கி அனுப்பினார்கள். சிறிது நாட்கள் கழித்து அவர்களுக்கு கடிதம் வந்தது, நுரையீரல் கேன்சரினால் கார்ல் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், பணம் கட்டுவதற்கு இல்லாமல் அவதிப்படுவதாகவும் வந்த செய்தியைக் கேட்டு, பணத்தையும் அனுப்பி வைத்தார்கள்.

சிகிச்சை பலனளிக்காமல் கார்ல் இறந்தப்பின் ஈடித் ஐக்கோவின் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைப்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கச் சொல்லி ஐக்கோவிற்கு கடிதம் எழுதினார்கள். ஐக்கோவிற்கு கஷ்டமாயிருந்தாலும், பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து, அனுப்பி வைத்தாள். இந்த பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தபோது, ஈடித் தனக்கு வயதாகிக் கொண்டே போவதால், பிள்ளைகளை கவனிப்பதற்கு அவர்களின் தாய் இருந்தால் நலமாக இருக்கும் என்று நினைத்தார்கள். இவர்களின் அற்புதமான மன்னிப்பின் கதையை செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தபடியால், அது அரசாங்கம் வரை தெரிவிக்கப்பட்டு, ஜப்பானிலிருந்து அமெரிக்கா வர முடியாதிருந்த ஐக்கோவிற்காக விசேஷித்த முறையில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு, ஐக்கோ அமெரிக்கா வந்து சேர்ந்தாள்.

விமான நிலையம் வந்து சேர்ந்த ஐக்கோவை 'நீதான் என் திருமண வாழ்வை நாசமடைய வைத்துவிட்டாய். நீ என்னுடைய வாழ்க்கை, என் சுகம், என் சம்பாத்தியம் எல்லாவற்றையும் நாசப்படுத்தி விட்டாய்' என்று கோபப்பட காரணங்கள் இருந்தாலும், எந்தவித கோபமும் கொள்ளாமல், அந்த பெண்ணை கட்டி அணைத்து முத்தமிட்டு, ஏற்றுக் கொண்டார்கள். அந்தப்பெண் அவர்களின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

நிபந்தனை அற்ற அன்பின் உதாரணமாக இந்த உண்மை சம்பவம் காணப்படுகிறது. கிறிஸ்து நம்மீது அன்பு வைக்க, நமக்காக ஜீவனை கொடுக்க எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை. தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ள எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாமும் எந்த நிபந்தனையும் இல்லாதவர்களாக அவருடைய அன்பை மற்றவர்களுக்கு செலுத்தவேண்டும் என்பது அவருடைய எதிர்ப்பார்ப்பு. அப்படிப்பட்ட கனியை நாம் தரவேண்டும் என்றுதானே அவர் நம்மை ஏற்படுத்தினார்?

எந்த சூழ்நிலையிலும், எந்த பிரச்சனை நேரத்திலும், எந்த அமைதியற்ற இடத்திலும் நிபந்தனை அற்ற அன்பை வெளிப்படுத்துவோமா? அப்படியான அன்பை நாம் வெளிப்படுத்தும்போது, நம்மை காண்பவர்கள் நம்மில் கிறிஸ்துவை காண்பார்கள். அப்படிப்பட்டதான அன்பில் வளர தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக!

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

No comments:

Post a Comment