Friday, 31 October 2014

ஆவியின் கனியோ.. நீடிய பொறுமை

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5: 22-23).

நான்காவது சுளை…….நீடிய பொறுமை:

நாம் அவசர உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே உடனுக்குடன் நடைபெற வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஏதாவது கொஞ்சம் தாமதித்தால் உடனே எத்தனை முறுமுறுப்புகள், எத்தனை முக கோணல்கள்!

சமீபத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வைத்தியரை பார்க்க வேண்டி இருந்தது. மூன்று மணி நேரம் காக்க வைத்து விட்டார்கள். மூன்று மணி நேரத்திற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. அங்கிருந்த நர்ஸிடம், 'என்ன உங்க டாக்டர் ஒரு பேஷண்டை இத்தனை நேரம் பார்க்கிறார்? எத்தனை நேரம் காத்திருப்பது? பேப்பரை கிழித்துப் போட்டு நாங்கள் போகப் போகிறோம்' என்று சூடாக சொன்னபோது, அந்த நர்ஸ் 'இப்ப டாக்டர் உங்களை பார்ப்பார்' என்று சொல்லி, அழைத்துப் போனார்கள். அந்த டாக்டரை பார்த்தவுடன், அவர் பேசினதைக் கேட்டவுடன், ஏன் அப்படி கத்தினோம் என்று தோன்றியது. அத்தனை மெதுவாக, பொறுமையாக அந்த டாக்டர் பேசினார். நல்ல நண்பராக மாறினார்.

நம்மால் எதற்கும் பொறுமையாக காத்திருக்க முடிவதில்லை. டிராபிக் ஜாமில் வண்டியை ஓட்டும்போது, சிக்னலில் எத்தனை நேரம் காத்திருப்பது என்று முனகல்களும், முறுமுறுக்காமலும் நாம் இருப்பதில்லை. வீட்டில் சாப்பாடு கொஞ்சம் லேட்டானால் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை. பொறுமை என்பதை இக்காலத்தில் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.

நம்முடைய தேவனின் தெய்வீக குணாதிசயங்களில் ஒன்றாக நீடிய பொறுமை விளங்குகிறது. பாவிகளாயிருக்கையில் நம்மேல் அவர் பொறுமையுள்ளவராக இருந்தாரே! உலகம் சென்றுக் கொண்டிருக்கிற பாதையை நோக்கினால், எத்தனை அக்கிரமங்கள், என்ன பயங்கரமான செயல்கள்! நம்மால் அதைப் பார்த்து,  பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எத்தனையோ முறை சொல்கிறோம், ஏன் ஆண்டவர் இவர்களை எல்லாம் விட்டு வைத்திருக்கிறார் என்று! ஆனால் அவையெல்லாவற்றையும் காண்கின்ற தேவன் அப்படி அக்கிரமம் செய்கிறவர்களையும் அழித்து விடாதபடி பொறுமையாயிருக்கிறாரே! அது நீடியப் பொறுமையல்லவா!

'தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்' (2 பேதுரு 3:9) என்று வேதம் கூறுகிறது. தேவன் அத்தனை பொறுமையுள்ளவராயிருந்தார் என்றால் நாம் எத்தனை பொறுமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்!

வேதத்தில் பொறுமையாயிருந்த ஆதி விசுவாசிகள் பலரைக் காண முடியும்! மோசே, ஆபிரகாம், யோசேப்பு, யோபு என்று பட்டியலை அடுக்கிக் கொண்டே போக முடியும்.. அவர்கள் பொறுமையாய் இருந்ததைப் போல புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடைய தேவைகளில், தேவன் ஏன் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கவில்லை என்று பொறுமையை இழந்துப் போகாமல், அவருடைய நேரத்திற்காக நீடிய பொறுமையோடு காத்திருக்க பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 'கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்' (சங்கீதம் 40:1) என்று நாமும் சொல்ல முடியும்.

எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க ஆவியானவரின் பெலன் தேவை. அவர் கொடுக்கிற நீடிய பொறுமையாகிய கனியின் சுளை நம் வாழ்வில் இருக்கும்போது 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்கிற பழமொழியின்படி வெற்றி மேல் வெற்றி நம்மை வந்தடையும் என்பதி;ல் சந்தேகமேயில்லை.

'நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே' (யாக்கோபு 5:8) ஆமென் அல்லேலூயா!
நன்றி-அனுதின மன்னா

No comments:

Post a Comment