Tuesday, 18 November 2014

கூடவே இருக்கிற தேவன்

இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார். - (2 நாளாகமம் 13:12).

பதினொன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஹேஸ்டிங்க்ஸ் யுத்தத்தில் நார்மனியர் இங்கிலாந்தை  முற்றுகையிட்டு இருந்தனர். அந்த யுத்தத்தின்போது நார்மனியரின் தலைவனான வில்லயம் கொலை செய்யப்பட்டு விட்டான் என்ற ஒரு வதந்தி போர்க்களத்திலிருந்து  நார்மனியரின் நடுவே காட்டுத்தீ போல பரவிற்று. தங்கள் தலைவன் கொலை செய்யப்பட்டு விட்டான் என்ற செய்தியை கேட்டபோது அவர்களது கைகள் தளர்ந்து போயின. அவர்களுடைய உள்ளங்களில் சோர்வும், சோகமும் மேலிட்டன. தங்கள் தலைவனை இழந்து விட்டதால் தாங்கள் யுத்தத்தில் தோல்வியடைவது திண்ணம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டனர்.

‘யுத்தக்களத்திலிருந்து தாயகம் திரும்பி விடலாம்’ என்று தங்கள் இருதயத்தில் தீர்மானித்து விட்ட போர் வீரர்களும் இருந்தனர். இதை கேள்வியுற்ற தலைவனாகிய வில்லயம் துடித்தெழுந்தான். அவன் தன் குதிரையின் மேல் ஏறி தன் வீரர்களின் முகாம்கள் அமைந்திருந்த அனைத்து இடங்களுக்கும் விரைவாக சென்று, “நான் உயிரோடிருக்கிறேன்” என்று உரத்த சதத்ததுடன் முழங்கினார். அதை கேட்ட நார்மனியர் புத்துயிர் அடைந்தனர். அவர்களுடைய சோர்வும் சோகமும் அவர்களை விட்டகன்றன. தங்கள் கைகளை அவர்கள் மீண்டும் யுத்தத்திற்காக திடப்படுத்தினர். முடிவில் அப்போரில் அவர்கள் மகத்தான ஜெயம் பெற்று இங்கிலாந்தை கைப்பற்றினர். உலக சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பின் நடந்த சம்பவங்களை நமக்கு நினைவூட்டுகிறதல்லவா? மேலே வாசித்த சம்பவத்தில் நார்மனியர்கள் தங்கள் தலைவனை நினைத்து வருந்தி கலங்கினது போலவே இயேசுவின் சீடர்களும் கலங்கி காணப்பட்டனர்.  இரட்கர் இயேசு சிலுவையில் கொலை செய்யப்பட்டார். இனி நமது எதிர்காலம் என்னவோ? என்று வேதனையுற்றனர். ஆனால் மரணத்தை வென்று உயிரோடு எழுந்த இயேசு தன் சீடர்களுக்கு தரிசனமாகி அவர்களை தைரியப்படுத்தினார். “இதோ, உலகத்தில் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்”  என திருவுளம் பற்றினார், உயிர்த்தெழுந்த இயேசுவின் தரிசனத்திற்கு பின்பாக, பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டு, பதினோரு சீடர்களும் ஆவியில் பெலனடைந்தனர். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்காக ஒவ்வொருவரும் வைராக்கியமாய் செயல்பட்டு கிரியை செய்தனர். அதன் விளைவாக உலகமங்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு தேவனுடைய சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன.
இச்செய்தியின் மூலமாக தேவ ஆவியானவர் உங்களை அவருக்குள்ளாக தைரியப்படுத்துகிறார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக! நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று உங்களை பார்த்து இயேசுகிறிஸ்து கூறுகிறார். நான் தனிமையாய் இருக்கிறேன், எனக்கு என்று யாருமில்லை என்று தவிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். இம்மானுவேல் என்னும் இயேசு இரட்சகர் உங்களோடிருக்கிறார். நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன், நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன். -  (ஏசாயா 41:10) என்று வாக்குதத்தம் பண்ணினவர், வாக்கு மாறாதவராக உங்களுடனே கூட இருக்கிறார். தைரியப்படுங்கள், சோர்ந்து போகாதிருங்கள். உங்கள் இருதயம் கர்த்தருக்குள் பலப்படுவதாக!
ஆமென்..அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

Monday, 17 November 2014

எல்லாத் தீமைக்கும் வேர்

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். - (1 தீமோத்தேயு 6:10).

கர்த்தரின் ஊழியராகிய சாது சுந்தர்சிங் அவர்கள் உவமைகளை சொல்லி, வசனத்தை விளக்கும் தாலந்து உள்ளவர். அவர் பண ஆசையைக் குறித்து சொன்ன ஒரு உவமையை பார்ப்போம்.

மூன்று பேர் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவ்விடத்திற்கு ஒரு மாலையில் சென்றனர். சிறிது நேர தேடலுக்குப் பிறகு, ஒருவன் அங்குள்ள ஒரு பள்ளத்தில் மாலை வெயிலின் வெளிச்சத்தில் ஏதோ ஒன்று மின்னுவதைக் கண்டு மற்றவர்களிடம் கூறினான். உடனே இரண்டாவது ஆள் ஒரு கல்லை எடுத்து குறிவைத்து எறிந்தான். 'கணீர்' என்ற ஒலி கேட்டது. அதற்குள்ளாக மற்றவன் ஓடிப்போய் ஒரு பெரிய உலோகப் பெட்டியை மண்ணுக்குள்ளிருந்து தூக்க ஆரம்பித்தார். பின்பு மூவரும் சேர்ந்து அப்புதையல் பெட்டியை தூக்கி எடுத்து, அதை திறந்தபோது, அதில் நிறைய தங்க நகைகளும், பொற்காசுகளும் இருப்பதைக் கண்டனர். ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அதை மறைத்து வைத்தனர்.
பின் ஒவ்வொருவரும் 'நான் தான் முதலில் அதை கண்டுபிடித்தேன். எனக்குத்தான் அதிக பங்கு வரவேண்டும்' என்று தர்க்கிக்க ஆரம்பித்தனர். ஒருவாறு சமாதானமாகி, இரவு வருமுன் சாப்பிட்டு விடலாம் என்று தீர்மானித்து, ஒருவனை ஓட்டலுக்கு அனுப்பி, 'நீ சாப்பிட்டு விட்டு, எங்களுக்கும் வாங்கிவா' என்று அனுப்பி வைத்தனர். அவன் சென்றவுடன், மற்ற இருவரும் அவன் திரும்பி வந்தவுடன் அவனை கொன்று விட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
உணவு வாங்க சென்றவன், திரும்பியதும், இருவரும் சேர்ந்து அவனை கொன்று போட்டனர். உணவை சாப்பிட்டு விட்டு, இருவரும் புதையலை பகிர்ந்து கொள்ளலாம் என்று பேசிவிட்டு, சாப்பிட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் இருவரும் மயக்கமுற்று மரத்தடியில் விழுந்தனர். மீண்டும் எழும்பவே இல்லை. காரணம் அவன், இவ்விருவர் உணவிலும் விஷம் கலந்திருந்தான். புதையல் மூன்று பிணங்களையும் பார்த்து சிரித்ததாம்.
பணமோ எல்லாவற்றிற்கும் உதவும் என்று சொல்லும் வேதம், பண ஆசையோ எல்லா தீமைக்கும் வேர் என்றும் சொல்லி நம்மை எச்சரிக்கிறது. பணமில்லாவிட்டால் நாம் ஜீவிப்பது கடினமே. ஆனால் பணமே அல்லது வசதிகளே என் வாழ்வு என்று வாழ்வோமானால் நாம் அதற்கு அடிமைகளாக மாறி விடுவோம்.
ஒரு மனிதனுக்கு பணம் சேர சேர அதில் அவன் திருப்தி அடைந்து விடுவதில்லை. இன்னும் அதிகமாக சேர்க்க வேண்டும் என்றே அவன் மனம் வாஞ்சிக்கிறது. பணம் சேர சேர, முதலில் ஒழுங்காக இருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக பாவத்தில் விழ ஆரம்பிக்கிறான். முடிவில், பாவம் அவனை மேற்கொண்டு, அதற்கு அடிமையாக மாறி விடுகிறான். 'ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்' (9ம் வசனம்) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.
நமக்கு கிடைக்கும் சம்பளத்தில் வாழ கற்றுக் கொள்வோம். மிஞ்சி ஆசைப்படாமல், நம் வரவுக்கு தக்கதாக செலவு செய்வோமானால், கடனே இல்லாமல் வாழ முடியும். நம் தேவைகள் அதிகமாகும்போது, அதற்காக எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று சிலர் குறுக்கு வழிகளை கடைபிடித்து, அதனால் வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.

'போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்' (6ம் வசனம்) என்றும் வேதம் கூறுகிறது. எதிலும் மனதிருப்தியும், மன நிறைவும் காணக்கற்றுக் கொள்வோம். மற்றவர்களை பார்த்து, நமக்கு அதுப்போல இல்லையே என்று ஏங்காமல், கர்த்தர் நம்மை வைத்திருக்கும் நிலையில் சந்தோஷப்படுவோம். நமக்கு கொடுத்திருக்கிற பொறுப்புகளில் உண்மையாக இருப்போம். கர்த்தர் நம்மை நிச்சயமாக உயர்த்துவார்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Wednesday, 12 November 2014

மனுஷனுடைய சுயவழிகள்

மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள். - (நீதிமொழிகள் 14:12).

பிளான்க் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது. மலையேறுவோர் அதில் பாதுகாப்புடன் ஏறுவதற்கு உதவியாக வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இளைஞன் ஒருவன் அம்மலையின் சிகரங்களை சென்றடைய வேண்டுமென்று சவாலுடன் ஒரு வழிகாட்டியின் துணையோடு புறப்பட்டான். தன் சாதனையில் வெற்றி கண்டவனாக மலை சிகரங்களை அடைந்தான். இளைஞனின் வீரச்செயலால் அவனது கிராமம் முழுவதும் குதூகலமடைந்தது. அவனது வெற்றியை அறிவிக்கும் வண்ணம் அம்மலையோரத்தில் ஒரு கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்தது. அவ்விளைஞனோ தன் கிராமத்தை நோக்கி கீழே இறங்கிக் கொணடிருந்தான். இந்நேரத்தில் அந்த வழிகாட்டி தனக்கு அவசியமில்லை என அவனுக்கு தோன்றிற்று. சுயாதீனமாய் செல்ல விரும்பிய அவன் தன் விருப்பத்தை வழிகாட்டியிடம் தெரிவித்தான். வழிகாட்டியோ “இது பனிப்பாறைகள் நிறைந்த இடம், பழக்கமற்ற நீங்கள் தனியாக வருவது பாதுகாப்பற்றது”  என எச்சரித்தார். ஆனால் வாலிபனோ தான் சுயாதீனமாக விடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். வழிகாட்டியும் வேறுவழியில்லாமல் சம்மதித்தார்.

ஜாலியாக பாட்டு பாடி கொண்டே கீழே இறங்கிய அவன் கவனக்குறைவாக சரிவான பனிக்கட்டி பாறைகளில் கால்களை வைக்கவும், அதனால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சறுக்கி வந்து கொண்டிருந்தான். இப்போது கயிற்று பிணைப்பும் இல்லை, வழிகாட்டியின் உதவியும் இல்லை. ஒரு சில மணி நேரத்தில் பனி பாறையின் மீது அவ்வாலிபனின் உடல் உயிரற்று கிடந்தது. வெற்றியோசை முழங்கிய கிராமம் இப்போது துயரத்தில் மூழ்கியது. கிராம மக்களின் சந்தோஷத்திற்கு காரணமானவனே துக்கத்திற்கும் காரணமானான்.

இவ்வாலிபன் சிகரத்தை தொட காரணமென்ன? முதலாவது அவனது விடா முயற்சி, அடுத்து வழிகாட்டியின் ஆலோசனை. வெற்றியடைய பிறரது உதவியை நாடிய அவன் வெற்றிக்கு பின் பிறரது கண்காணிப்பையும் ஆலோசனையையும் விரும்பவில்லை. வழிகாட்டியாடு இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுபட்டது. முடிவு என்ன ஒரு பரிதாபம்!

நமது வாழ்விலும் நமக்கு இறுதிவரை வழிகாட்டி அவசியம். பரிசுத்த ஆவியானவரும், ஒரு நல்ல ஆவிக்குரிய சபையின் போதகரின் ஆலோசனைகளும் நம்மை ஒவ்வொரு நாளும் சிறந்த வழிகாட்டியாக இருந்து நடத்துகின்றனர். பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒவ்வொரு நாளும்  போதித்து நடத்துகின்றார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” - (சங்கீதம் 32:8) என்று அருமையான ஆலோசனையை நமக்கு கூறி அனுதினமும் நம்மை அதிசயமாய் நடத்துகின்றார். ஒவ்வொரு வாரமும் சபைக்கு சென்று ஆவிக்குரிய போதகர் மூலமாய நமக்கு தேவன் ஆலோசனை தருகின்றார்.

சிலர் ஆவியானவரும் எனக்கு வேண்டாம், ஆவிக்குரிய சபையும் எனக்கு வேண்டாம் என்று விதண்டாவாதம் செய்து கொண்டு, தங்களுடைய சுயவழிகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள் என்ற வேதம் நம்மை எச்சரிக்கின்றது. ஆரம்பத்தில் கர்த்தரை பிடித்து கொண்டதால் கிடைத்த வெற்றி, என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று சுயத்தை நம்பி செயலாற்றும்போது, தோல்வியாகவே முடிகிறது. உலகத்திற்குரிய வாழ்விலும் ஆவிக்குரிய வாழ்விலும் நாம் பெறும் ஒவ்வொரு வெற்றியும் கர்த்தரால் மாத்திரமே வந்தது என்று அவரையே சார்ந்து, கடைசிவரை நம்முடைய வாழ்வின் வழிகாட்டியாக அவரே இருக்கும்போது நாம் செய்யும் எல்லா காரியங்களும் வெற்றியாகவே முடியும் என்பதில் சந்தேகமேயில்லை!

ஆமென் அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

Monday, 10 November 2014

வசனம் கிடைக்காத பஞ்சகாலம்

இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்மல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - (ஆமோஸ் 8:11).

மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் - (மத்தேயு 4:4) என்று வேதம் நமக்கு கூறுகிறது. அப்படி நாம் பிழைக்கும்படியாக கர்த்தர் நமக்கு கொடுத்த கிருபையின் வார்த்தைகள் கிடைக்காத பஞ்சம் ஏற்படும்போது, அது நிச்சயமாகவே ஒவ்வொருவரையும் பாதிககும் என்பதில் சந்தேகமில்லை. நாம் ஏற்கனவே அந்த காலத்திற்குள் வந்து கொண்டிருக்கிறோம். இன்றைய நாட்களில் அவரவருக்கு விருப்பமாக தேவனுடைய வார்த்தை மாற்றப்பட்டு பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. 'ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்'           (2 தீமோத்தேயு 4:3-4)  என்று வசனம் எச்சரித்த காலத்திற்குள் நாம் வந்திருக்கிறோம். இப்போது சுத்தமான கலப்படமில்லாத கர்த்தருடைய வார்த்தையை கேட்பது மிகவும் அரிதாக இருக்கிறது.

வசனம் சொல்லுகிறது, கர்த்தரே இந்த பஞ்சத்தை அனுப்புகிறார் என்று. 'இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்'. ஏன் கர்த்தர் இதை செய்ய வேண்டும்? கர்த்தருடைய ஜனங்கள் சத்தியத்திற்கு செவி கொடுக்காதபடி, ஆரோக்கியமான உபதேசத்தை கேட்க மனதில்லாமல், தங்களுடைய இச்சைக்கேற்றபடி பிரசங்கிக்கிறவர்களை தங்களுக்கு தெரிந்து கொண்டு, கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணும்போது கர்த்தர் இந்த பஞ்சத்தை அனுப்புகிறார். கர்த்தருடைய வார்த்தை நம்மை சீர்திருத்தும், நம் பாவத்தை கண்டித்து உணர்த்தும், கடிந்து கொள்ளும், நம்மை ஒழுங்கு படுத்தும். அதனால் தான் வசனத்திற்கு இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்று பெயர். ஆனால் அதை கேட்பவர்களுக்கு அது வேதனையாகவும், தங்கள் சுகமான பாவ வழிகளில் இருந்து வெளிவர மனமில்லாமல் இருப்பதால், அதை கேட்க அவர்களுக்கு மனதில்லாமல் போகிறது. மனிதர்கள் கர்த்தருடைய வார்த்தையை கேளாதபடி அசட்டை செய்யும் போது கர்த்தர் அதை கேட்க கூடாத பஞ்சத்தை அனுப்புகிறார்.

ஒரு பஞ்சம் என்று வரும்போது, உணவை குறித்த பசியும் தாகமும் ஏற்படும். அதுப்போல கர்த்தர் வசனம் கிடைக்காத அந்த பஞ்ச காலத்தை அனுப்பும்போது அப்போதுதான் மனிதருக்கு கர்த்தருடைய வசனத்தை குறித்த பசியும் தாகமும் ஏற்படும். அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசை தொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள் (வசனம் 12). என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அப்போது வசனத்தை தேடியும் அவர்கள் கண்டடையாமற் போவார்களாம்! இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை நமக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொள்வோம். நமக்கு இப்போது வசனம் தாராளமாய் கிடைக்கும்போதே அவற்றை நமது இருதயத்தில் பதித்து வைத்து கொள்வோம். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் (சங்கீதம் 119:11) என்ற சங்கீதக்காரனை போல நாம் கர்த்தருடைய வார்த்தைகளை நம் இருதயத்தில் வைத்து வைப்போம். ஒருவேளை நாளை நமக்கு வசனம் படிக்க கூடாத நிலை ஏற்படுமென்றால் நமது நிலைமை என்னவாகும்?

யோசேப்பு பார்வோன் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை சொன்னபோது, வரப்போகும் கொடிய பஞ்சத்தை குறித்து தேவன் பார்வோனை கனவின் மூலம் எச்சரித்திருந்தார். அதே சமயம் யோசேப்புக்கு அந்த கொடிய பஞ்சத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை செய்வதற்கு நல்ல ஞானத்தையும் கொடுத்தார். அவன் பரிபூரண வருஷங்களின் விளைவை எடுத்து சேமித்து வைத்தபடியினால், பின்னர் வந்த கொடிய பஞ்சத்தில் அநேகரை அவனால் போஷிப்பிக்க முடிந்தது. அதை போலவே நீங்களும் கர்த்தருடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் வைத்து வைக்கும்போது, பஞ்ச காலத்திலும், வற்றாத நீரூற்றை போல அநேகரை போஷிக்க கூடியவர்களாக மாறுவீர்கள். வசனம் கிடைக்கும் இந்த நல்ல காலங்களிலேயே நாம் அவற்றை நம் இருதயத்தில் காத்து வைக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக!


ஆமென் அல்லேலூயா!
நன்றி: அனுதின மன்னா

Friday, 7 November 2014

ஆவியின் கனியோ... விசுவாசம்

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23).

ஏழாம் சுளை......... விசுவாசம்:

ஆவியின் கனியாகிய விசுவாசம் என்பது 'எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தா  சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'; (மாற்கு 11:23) என்று இந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கிற விசுவாசம் அல்ல. ஆவியின் கனியாகிய விசுவாசம் என்பதற்கு உண்மை, நேர்மை, உத்தமம் என்பது பொருளாகும்.

ஒரு எஜமானுக்கு ஒரு வேலைக்காரன் விசுவாசமுள்ளவனாக இருந்தால், அவன் நேர்மையாக, உண்மையாக, தன் செயல்கள் எல்லாவற்றிலும் தன் எஜமானுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் கொண்டு வராதவனாக இருப்பான்.

ஒரு உண்மையுள்ள கணவனுக்கு நல்ல மனைவி விசுவாசமுள்ளவளாக இருப்பாள், நல்ல மனைவிக்கு ஒரு உண்மையுள்ள கணவன் விசுவாசமுள்ளவனாக இருப்பான்.

வேதத்தில் தேவன் எத்தனை உண்மையுள்ளவராயிருக்கிறார் என்றுப் பார்க்கிறோம். 'வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே' (எபிரேயர் 10:23), 'தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்' (1 கொரிந்தியர் 1:9) 'மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்' (1 கொரிந்தியர் 10:13) என்று நம் தேவன் எத்தனை உண்மையுள்ளவர் என்று வேதத்தில் பார்க்கிறோம். அந்த வார்த்தைகளின்படியே அவர் இந்நாள் பரியந்தம் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.

தேவன் உண்மையுள்ளவராக இருப்பதால் இந்த நாள் பரியந்தம் நம்மை நடத்தி வருகிறார், நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருப்பதால்தான் எந்த போராட்டங்கள், பாடுகள், துன்பங்கள் வந்தாலும் கூடவே இருந்து தாங்கிக் கொள்ளவும், எல்லா பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கவும் வல்லவராக இருக்கிறார்.

நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருக்கிறதுப் போல நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? கர்த்தர் நம்மை நம்பிக் கொடுத்திருக்கிற வேலைகளில், பொறுப்புகளில், குடும்பங்களில், சபைகளில், சமுதாயத்தில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? எத்தனை குறைவுள்ளவர்களாக காணப்படுகிறோம்?

அநேக ஊழியர்கள் தேவன் அவர்களை நம்பிக் கொடுத்த சிறிய ஊழியத்தில் உண்மையுள்ளவர்களாக இருந்தபடியால், தேவன் அவர்களை அநேகத்திற்கு அதிகாரிகளாக மாற்றி, அவர்களை நம்பி தமது பணியினை ஒப்படைத்தார். சிறிய காரியத்திலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது நிச்சயமாகவே தேவன் நம்மை நம்பி பெரிய காரியங்களை ஒப்படைப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் (நீதிமொழிகள் 28:20) என்று வேதம் கூறுகிறதல்லவா?

'என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்' (எண்ணாகமம் 12:7) என்று தேவனே நம்மைப் போல ஒரு மனிதனைக் குறித்து சாட்சி கொடுக்கிறார் என்றால் அவர் எத்தனை உண்மையுள்ளவராக இருந்திருக்க வேண்டும்? தேவன் நம்மைக் குறித்து அப்படிப்பட்ட சாட்சிக் கொடுப்பாரா?

'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற வாசகத்தை தனது தாரக மந்திரமாக கொண்டு திரு. உ. சகாயம் I.A.S. அவர்கள் தன் வேலையில் உண்மையாக இருந்தபடியால், தான் வேலை செய்த 23 வருடங்களில் 24 முறை இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் மனம் உடைந்துப் போகவில்லை, தொடர்ந்து அநீதிக்கு எதிராக போராடினார். திருட்டுத்தனமாக மணல் கொள்ளை அடிப்பதை கண்டு, அதற்கு எதிராக அவர் செயல்பட்டார். அதில் ஈடுபட்டிருந்தவர்கள் சும்மாவா இருந்திருப்பார்கள்? கொலை மிரட்டல் விட்டாலும் தன் வேலையை உண்மையாய் செய்வேன் என்று தொடர்ந்து எதிராக போரிட்டதால், தற்போது, அவரையே விசேஷித்த ஆபிசராக கோர்ட் நியமனம் செய்திருக்கிறது. அவர் தன் தேவனுக்கு முன்பாக தன் உண்மையை காத்துக் கொண்டார். கர்த்தரின் வருகையின் நாளில், 'அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்' எனறு கர்த்தர் அவரை கனப்படுத்துவார் (மத்தேயு 25:23).

எத்தனைப் பேர் நமக்கு எதிராக வந்தாலும், நமக்கு விரோதமாக போராடினாலும், நாம் நம் உண்மையில் நிலைத்திருப்போம். ஆவியின் கனியாகிய விசுவாசத்தை காத்துக் கொள்வோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். அவர் அளிக்கும் பலன் அவரோடேக் கூட வருகிறது.

ஆமென் அல்லேலூயா!
நன்றி: அனுதின மன்னா

Tuesday, 4 November 2014

ஆவியின் கனியோ... நற்குணம்

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. -(கலாத்தியர் 5:22-23)


ஆறாம் சுளை .....நற்குணம்:

நாம் அனைவரும் ஆலயத்திலும், வீட்டிலும் பாடும் பாடல்கள் கர்த்தர் நல்லவர் என்று சொல்லும், அர்த்தம் கொள்ளும் பாடல்களையே! நம் கர்த்தர் அத்தனை நல்லவர்! அவரை ஆயிரம் முறை அப்பா நீர் நல்லவர், நல்லவர் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலும் திகட்டாது. அவர் அத்தனை நல்லவர்!

நற்குணம் கொண்ட ஒரு மனிதனையோ, மனுஷியையோ அனைவரும் நேசிப்பார்கள். கேட்டால் சொல்வார்கள், 'அவரு ரொம்ப நல்லவருங்க' என்று. இயற்கையிலேயே நற்குணம் கொண்டவர்கள் இருப்பார்கள். ஆனால் ஆவியின் கனியாகிய நற்குணத்தை கொண்டவர்களோ, எல்லா நற்குணத்திற்கும் மேம்பட்டவர்களாக கிறிஸ்துவையே வெளிப்படுத்திக் காட்டுகிறவர்களாக இருப்பார்கள்.

கர்த்தரை பின்பற்றுகிறவர்களாகிய நம்மை பார்த்து மற்றவர்கள் இவர் நல்லவர், இவர்கள் நல்லவர்கள் என்று சொல்லமுடியுமா? நம் கிரியைகள் மற்றவர்களுக்கு நன்மை தரத்தக்கதாக, மற்றவர்கள் பாராட்டும்படியாக, மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதா?

'..முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்ளூ கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாதுளூ  கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது' (மத்தேயு 7:16-18) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆம், நல்ல மரத்தால்தான் நல்ல கனியை கொடுக்க முடியும். கெட்ட மரங்களோ கெட்ட கனியைத்தான் கொடுக்கும்.

நம்முடைய வேலையிடங்களில், நம்மைச் சுற்றியிருக்கிற இடங்களில், நல்ல மரங்களைப் போன்றவர்களும் இருக்கலாம், கெட்ட மரங்களைப் போன்றவர்களும் இருக்கலாம். கெட்ட மரங்களைப் போன்றவர்களிடம் நாம் நல்ல கனியை எதிர்ப்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்களின் சுபாவமே அப்படிப்பட்டது. அவர்கள் கெட்டகனியைத்தான் தருவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறாரே!

கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களும், அவர்களுடைய இரண்டு பிள்ளைகளையும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டபோது, அவர்களின் துணைவியார் கர்த்தரோடு இருந்தபடியால், அவர்களிடத்தில் ஆவியின் கனியாகிய நற்குணம் வெளிப்பட்டது. அவர்கள் உடனே அவர்களை கொன்றவர்களை சபிக்கவில்லை, அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று போர்க்கொடி ஏற்றவில்லை, மாறாக அவர்களை மன்னித்தார்கள். நல்ல மரத்திலிருந்து நல்ல கனியே கிடைக்கும். கெட்ட கனியை எதிர்ப்பார்க்க முடியாது.
ஈராக்கிலும், சிரியாவிலும் நடக்கும் கொடுமைகளை பார்க்கும்போது, ஒரு சகோதரி கதறுகிறாள், 'என்னை 32 முறை மதிய நேரத்திற்குள் கற்பழித்திருக்கிறார்கள், தயவுசெய்து குண்டு வீசி எங்களைக் கொன்று போடுங்கள், நாங்கள் உயிரோடு இருப்பதைப் பார்க்கிலும் சாவது எங்களுக்கு மேல்' என்று கதறுகிறாள். கெட்ட மரத்திலிருந்து கெட்ட கனியே வரும், நல்ல கனியை எதிர்ப்பார்க்கவே முடியாது.

வேதத்தில் எத்தனையோப் பேர் நற்குணசாலிகளாக இருந்திருக்கிறார்கள். யோசேப்பு, மோசே, ரூத், தாவீது என்று சொல்லிக் கொண்டே போகலாம். அவர்கள் தாங்கள் தாங்கள் நாட்டப்பட்ட இடத்திலே நற்குணசாலிகளாக விளங்கினார்கள்.

'பெரோயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்' (அப்போஸ்தலர் 17:11) என்று வேதம் கூறுகிறது. வேதத்தை ஆராய்ந்து, 'ஓ, வசனத்தில் இப்படி இருக்கிறது, அதன்படி நான் நடக்க வேண்டும்' என்று அவர்கள் தினந்தோறும் வேதத்தையும் தங்களையும் ஆராய்ந்து பார்த்தபடியால் நற்குணசாலிகளாக விளங்கினார்கள் என்றுப் பார்க்கிறோம். தினமும் வேதத்தை வாசித்து, அதன்படி நம்மை மாற்றிக் கொள்வோமானால் நாமும் நற்குணசாலிகளாக விளங்குவோம் என்பதில் சந்தேகமேயில்லை!

நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு நாம் நன்மை செய்வதன் மூலம், கைமாறு கருதாமல் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம், தீமைக்கு தீமை சரிகட்டாமல், மற்றவர்களோடு நம்முடைய நன்மைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், நியாயமாக காரியங்களை செய்வதன் மூலம், மற்றவர்களுக்காக ஜெபிப்பதன் மூலம், நல்ல வார்த்தைகளையே பேசுவதன் மூலம் நம்மிடத்தில் உள்ள ஆவியின் கனியாகிய நற்குணத்தை வெளிப்படுத்த முடியும்.

'சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள'... (கொலோசேயர் 1:10)தேவன் தாமே கிருபை செய்வாராக!

ஆமென் அல்லேலூயா!
நன்றி அனுதின மன்னா

Monday, 3 November 2014

ஆவியின் கனியோ.. தயவு

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23).

ஐந்தாவது சுளை........ தயவு:

'எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது' (யோபு-10:12) என்று பார்க்கிறோம். ஆம், நம் தேவன் நமக்கு ஜீவனைத் தந்ததோடு மாத்திரமல்ல, தயவையும் பாராட்டி இந்த புதிய நவம்பர் மாதத்தில் காலடி எடுத்து வைக்க கிருபை பாராட்டியிருக்கிறார். அவருடைய தயவும் இரக்கமும் இல்லாதிருந்தால் நாம் எப்படி இருந்திருப்போமா தெரியாது. ஆனால் அவர் நம் மேல் வைத்த தயவினால் இந்நாள் வரை ஜீவனோடு சுகத்தோடு நாம் நல்ல நாட்களை காண்கிறோம்.

ராபர்ட் டி வின்சென்ஜோ என்னும் கால்பந்து ஆட்டக்காரர், ஒரு முறை விளையாடிவிட்டு, வெளியே வந்தபோது, ஒரு பெண் அவரிடம் வந்து தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு, தன் இரண்டு வயது மகன் மிகவும் சீரியஸாக உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், அவனுடைய சிகிச்சைக்கு பணத்தேவை அதிகம் இருப்பதாகவும் கூறினாள். அதைக் கேட்ட அவர் உடனே தன் பையில் இருந்த செக் புத்தகத்தை எடுத்து ஒரு கணிசமான பணத்தை எழுதி அந்த பெண்ணிடம் கொடுத்து, உன் பிள்ளையை காப்பாற்று என்று சொல்லிக் கொடுத்தார்.

ஒரு வாரம் கழித்து, அவருடைய நண்பர்கள், அவரிடம் வந்து, 'நீ என்னமோ பணத்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தாயாமே? அவளுக்கு பிள்ளை ஒன்றும் இல்லை, ஏன் அவளுக்கு இன்னும் கலியாணமே ஆகவில்லை, அவள் உன்னை நன்கு ஏமாற்றி விட்டாள்' என்று கூறினர். அதைக்கேட்ட அந்த வீரர், 'உண்மையிலேயே பிள்ளை யாரும் சீரியஸாக இல்லையா?' என்றுக் கேட்டார். மற்றவர்கள் ஆம் என்று கூறியதும், 'அப்பா, இந்த வாரத்தில் நான் கேட்ட சிறந்த செய்தி இதுதான்' என்று கூறினாராம். அவருக்கு பணம் பெரியதாக தெரியவில்லை, ஒரு உயிர் சுகமாயிருக்கிறது என்ற செய்தியே பெரிதாக இருந்தது.

மற்றவர்களுக்கு நம்மால் இயன்றதை, அவர்களிடம் திரும்பவும் உதவி பெறுவோம் என்ற கைமாறு கருதாமல் செய்யும் உதவியே தயவு ஆகும்.  உதவி என்று யாரும் கேட்டு வந்தால் அநேகருக்கு முகம் வேறு மாதிரி மாறி விடுகிறது. இந்த ஆளுக்கு வேறு வேலையில்லை, சும்மா உதவி தேவை என்று வந்து விடுகிறான் என்று முகத்தை சுளிக்கிறோம்.

தயவு பாராட்டுவதற்கு முதல் உதாரணம் நம் தேவன்தான். அவர் தயவு பாராட்டுவதால்தான் பாவிகளாயிருந்தாலும், நம்மை நீதிமான்களாக்கி, நம்மை பரலோக இராஜ்யத்திற்கு சுதந்தரவாளிகளாக மாற்றியிருக்கிறார்.

வேதத்தில் எத்தனையோப் பேர் மற்றவர்களுக்கு தயவு பாராட்டி இருப்பதைக் காணலாம். யோசேப்பு தன்னை அநியாயமாய் அந்நியரிடம் விற்ற தன் அண்ணன்மார்களின் மேல் கோபம் கொள்ளாமல், அவர்கள் மேல் தயவுக்காட்டி, பஞ்சக்காலத்தில் அவர்களை ஆதரித்தார்.

தாவீது இராஜா தன் உயிரை பறிக்க தன்னை துரத்தி வந்த சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தை அரண்மனையில் தன்னோடு இருக்க வைத்து, உணவுகொடுத்து, தயவு பாராட்டினாரே. பழைய ஏற்பாட்டு விசுவாசியானாலும், அவரிடம் ஆவியின் கனி வெளிப்பட்டதே!

பிரியமானவர்களே, இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருந்தும், நாம் மற்றவர்களிடம் எப்படி தயவு காண்பிக்கிறோம்? யார் யார் மற்றவர்களுக்கு தயவு காண்பித்தார்களோ, அவர்களுக்கும் தயவு கிடைத்தது.  நாம் மற்றவர்களுக்கு தயவு செய்தால், நம்முடைய தேவையில் நமக்கு தயவு கிடைக்கும். நம்மிடத்தில் தயை வேண்டி வரும் உதவியற்றவர்களுக்கு நாம் உதவி செய்கிறோமா?

ஆப்ரிக்காவில் உசாமுசுலு மட்வா என்னும் மனிதர், தன் சிறுவயது மகனை வயிற்றுப்போக்கினால் ஆஸ்பத்திரி கொண்டு சென்றும், மரித்துப் போனபடியினால், மரித்த குழந்தையை ஒரு சபையின் போதகரிடம் அடக்கம் செய்யும்படி கேட்டபோது, அந்த போதகர், அந்த மனிதர் தன் சபையின் உறுப்பினரில்லை என்பதால் அடக்கம் செய்ய மறுத்து விட்டார்.

பின்னர் அதே மனிதர் கிறிஸ்தவம் ஏன் ஆப்ரிக்காவில் தோற்றுப் போனது என்று ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படுகிற நம்மிடம் இருக்க வேண்டிய தயவு எங்கே போயிற்று? கிறிஸ்து நம் சொந்த இரத்தத்தை கொடுத்து சம்பாதித்த சபையில் ஆவியானவரின் கனி காணப்படவில்லை என்றால், அவருடைய பரிசுத்த இரத்தத்தை நாம் எந்த அளவு மதிக்கிறோம் என்பது விளங்குமல்லவா?

கர்த்தரை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்கிறவர்கள், ஆவியானவரின் கனியாகிய தயவை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறோமா? நாம் இந்த உலகில் வாழ்வதற்கு மற்றவர்களின் தயவு நமக்கு தேவையாயிருக்கிறது. குழந்தைகளாயிருந்தபோது பெற்றோரின் தயவு, பெரியவர்களானதும் வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் தயவு, வயதானவுடன் பிள்ளைகளின் தயவு என்று தயவு இல்லாமல் நம் வாழ்க்கை இல்லை. நாம் மற்றவர்களின் தயவை பெறும்போது, நாமும் தயவு காண்பிக்க வேண்டுமே!

'ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்' (எபே-4:32) என்ற வசனத்தின்படி ஒருவருக்கொருவர் தயவாயிருப்போம். நம்மிடம் தயவு கேட்டுவரும் ஒவ்வொருவருக்கும் உதவிகள் செய்வோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா