Wednesday, 12 November 2014

மனுஷனுடைய சுயவழிகள்

மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள். - (நீதிமொழிகள் 14:12).

பிளான்க் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது. மலையேறுவோர் அதில் பாதுகாப்புடன் ஏறுவதற்கு உதவியாக வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இளைஞன் ஒருவன் அம்மலையின் சிகரங்களை சென்றடைய வேண்டுமென்று சவாலுடன் ஒரு வழிகாட்டியின் துணையோடு புறப்பட்டான். தன் சாதனையில் வெற்றி கண்டவனாக மலை சிகரங்களை அடைந்தான். இளைஞனின் வீரச்செயலால் அவனது கிராமம் முழுவதும் குதூகலமடைந்தது. அவனது வெற்றியை அறிவிக்கும் வண்ணம் அம்மலையோரத்தில் ஒரு கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்தது. அவ்விளைஞனோ தன் கிராமத்தை நோக்கி கீழே இறங்கிக் கொணடிருந்தான். இந்நேரத்தில் அந்த வழிகாட்டி தனக்கு அவசியமில்லை என அவனுக்கு தோன்றிற்று. சுயாதீனமாய் செல்ல விரும்பிய அவன் தன் விருப்பத்தை வழிகாட்டியிடம் தெரிவித்தான். வழிகாட்டியோ “இது பனிப்பாறைகள் நிறைந்த இடம், பழக்கமற்ற நீங்கள் தனியாக வருவது பாதுகாப்பற்றது”  என எச்சரித்தார். ஆனால் வாலிபனோ தான் சுயாதீனமாக விடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். வழிகாட்டியும் வேறுவழியில்லாமல் சம்மதித்தார்.

ஜாலியாக பாட்டு பாடி கொண்டே கீழே இறங்கிய அவன் கவனக்குறைவாக சரிவான பனிக்கட்டி பாறைகளில் கால்களை வைக்கவும், அதனால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சறுக்கி வந்து கொண்டிருந்தான். இப்போது கயிற்று பிணைப்பும் இல்லை, வழிகாட்டியின் உதவியும் இல்லை. ஒரு சில மணி நேரத்தில் பனி பாறையின் மீது அவ்வாலிபனின் உடல் உயிரற்று கிடந்தது. வெற்றியோசை முழங்கிய கிராமம் இப்போது துயரத்தில் மூழ்கியது. கிராம மக்களின் சந்தோஷத்திற்கு காரணமானவனே துக்கத்திற்கும் காரணமானான்.

இவ்வாலிபன் சிகரத்தை தொட காரணமென்ன? முதலாவது அவனது விடா முயற்சி, அடுத்து வழிகாட்டியின் ஆலோசனை. வெற்றியடைய பிறரது உதவியை நாடிய அவன் வெற்றிக்கு பின் பிறரது கண்காணிப்பையும் ஆலோசனையையும் விரும்பவில்லை. வழிகாட்டியாடு இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுபட்டது. முடிவு என்ன ஒரு பரிதாபம்!

நமது வாழ்விலும் நமக்கு இறுதிவரை வழிகாட்டி அவசியம். பரிசுத்த ஆவியானவரும், ஒரு நல்ல ஆவிக்குரிய சபையின் போதகரின் ஆலோசனைகளும் நம்மை ஒவ்வொரு நாளும் சிறந்த வழிகாட்டியாக இருந்து நடத்துகின்றனர். பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒவ்வொரு நாளும்  போதித்து நடத்துகின்றார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” - (சங்கீதம் 32:8) என்று அருமையான ஆலோசனையை நமக்கு கூறி அனுதினமும் நம்மை அதிசயமாய் நடத்துகின்றார். ஒவ்வொரு வாரமும் சபைக்கு சென்று ஆவிக்குரிய போதகர் மூலமாய நமக்கு தேவன் ஆலோசனை தருகின்றார்.

சிலர் ஆவியானவரும் எனக்கு வேண்டாம், ஆவிக்குரிய சபையும் எனக்கு வேண்டாம் என்று விதண்டாவாதம் செய்து கொண்டு, தங்களுடைய சுயவழிகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள் என்ற வேதம் நம்மை எச்சரிக்கின்றது. ஆரம்பத்தில் கர்த்தரை பிடித்து கொண்டதால் கிடைத்த வெற்றி, என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று சுயத்தை நம்பி செயலாற்றும்போது, தோல்வியாகவே முடிகிறது. உலகத்திற்குரிய வாழ்விலும் ஆவிக்குரிய வாழ்விலும் நாம் பெறும் ஒவ்வொரு வெற்றியும் கர்த்தரால் மாத்திரமே வந்தது என்று அவரையே சார்ந்து, கடைசிவரை நம்முடைய வாழ்வின் வழிகாட்டியாக அவரே இருக்கும்போது நாம் செய்யும் எல்லா காரியங்களும் வெற்றியாகவே முடியும் என்பதில் சந்தேகமேயில்லை!

ஆமென் அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

No comments:

Post a Comment