Monday, 17 November 2014

எல்லாத் தீமைக்கும் வேர்

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். - (1 தீமோத்தேயு 6:10).

கர்த்தரின் ஊழியராகிய சாது சுந்தர்சிங் அவர்கள் உவமைகளை சொல்லி, வசனத்தை விளக்கும் தாலந்து உள்ளவர். அவர் பண ஆசையைக் குறித்து சொன்ன ஒரு உவமையை பார்ப்போம்.

மூன்று பேர் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவ்விடத்திற்கு ஒரு மாலையில் சென்றனர். சிறிது நேர தேடலுக்குப் பிறகு, ஒருவன் அங்குள்ள ஒரு பள்ளத்தில் மாலை வெயிலின் வெளிச்சத்தில் ஏதோ ஒன்று மின்னுவதைக் கண்டு மற்றவர்களிடம் கூறினான். உடனே இரண்டாவது ஆள் ஒரு கல்லை எடுத்து குறிவைத்து எறிந்தான். 'கணீர்' என்ற ஒலி கேட்டது. அதற்குள்ளாக மற்றவன் ஓடிப்போய் ஒரு பெரிய உலோகப் பெட்டியை மண்ணுக்குள்ளிருந்து தூக்க ஆரம்பித்தார். பின்பு மூவரும் சேர்ந்து அப்புதையல் பெட்டியை தூக்கி எடுத்து, அதை திறந்தபோது, அதில் நிறைய தங்க நகைகளும், பொற்காசுகளும் இருப்பதைக் கண்டனர். ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அதை மறைத்து வைத்தனர்.
பின் ஒவ்வொருவரும் 'நான் தான் முதலில் அதை கண்டுபிடித்தேன். எனக்குத்தான் அதிக பங்கு வரவேண்டும்' என்று தர்க்கிக்க ஆரம்பித்தனர். ஒருவாறு சமாதானமாகி, இரவு வருமுன் சாப்பிட்டு விடலாம் என்று தீர்மானித்து, ஒருவனை ஓட்டலுக்கு அனுப்பி, 'நீ சாப்பிட்டு விட்டு, எங்களுக்கும் வாங்கிவா' என்று அனுப்பி வைத்தனர். அவன் சென்றவுடன், மற்ற இருவரும் அவன் திரும்பி வந்தவுடன் அவனை கொன்று விட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
உணவு வாங்க சென்றவன், திரும்பியதும், இருவரும் சேர்ந்து அவனை கொன்று போட்டனர். உணவை சாப்பிட்டு விட்டு, இருவரும் புதையலை பகிர்ந்து கொள்ளலாம் என்று பேசிவிட்டு, சாப்பிட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் இருவரும் மயக்கமுற்று மரத்தடியில் விழுந்தனர். மீண்டும் எழும்பவே இல்லை. காரணம் அவன், இவ்விருவர் உணவிலும் விஷம் கலந்திருந்தான். புதையல் மூன்று பிணங்களையும் பார்த்து சிரித்ததாம்.
பணமோ எல்லாவற்றிற்கும் உதவும் என்று சொல்லும் வேதம், பண ஆசையோ எல்லா தீமைக்கும் வேர் என்றும் சொல்லி நம்மை எச்சரிக்கிறது. பணமில்லாவிட்டால் நாம் ஜீவிப்பது கடினமே. ஆனால் பணமே அல்லது வசதிகளே என் வாழ்வு என்று வாழ்வோமானால் நாம் அதற்கு அடிமைகளாக மாறி விடுவோம்.
ஒரு மனிதனுக்கு பணம் சேர சேர அதில் அவன் திருப்தி அடைந்து விடுவதில்லை. இன்னும் அதிகமாக சேர்க்க வேண்டும் என்றே அவன் மனம் வாஞ்சிக்கிறது. பணம் சேர சேர, முதலில் ஒழுங்காக இருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக பாவத்தில் விழ ஆரம்பிக்கிறான். முடிவில், பாவம் அவனை மேற்கொண்டு, அதற்கு அடிமையாக மாறி விடுகிறான். 'ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்' (9ம் வசனம்) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.
நமக்கு கிடைக்கும் சம்பளத்தில் வாழ கற்றுக் கொள்வோம். மிஞ்சி ஆசைப்படாமல், நம் வரவுக்கு தக்கதாக செலவு செய்வோமானால், கடனே இல்லாமல் வாழ முடியும். நம் தேவைகள் அதிகமாகும்போது, அதற்காக எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று சிலர் குறுக்கு வழிகளை கடைபிடித்து, அதனால் வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.

'போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்' (6ம் வசனம்) என்றும் வேதம் கூறுகிறது. எதிலும் மனதிருப்தியும், மன நிறைவும் காணக்கற்றுக் கொள்வோம். மற்றவர்களை பார்த்து, நமக்கு அதுப்போல இல்லையே என்று ஏங்காமல், கர்த்தர் நம்மை வைத்திருக்கும் நிலையில் சந்தோஷப்படுவோம். நமக்கு கொடுத்திருக்கிற பொறுப்புகளில் உண்மையாக இருப்போம். கர்த்தர் நம்மை நிச்சயமாக உயர்த்துவார்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

No comments:

Post a Comment