Monday, 10 November 2014

வசனம் கிடைக்காத பஞ்சகாலம்

இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்மல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - (ஆமோஸ் 8:11).

மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் - (மத்தேயு 4:4) என்று வேதம் நமக்கு கூறுகிறது. அப்படி நாம் பிழைக்கும்படியாக கர்த்தர் நமக்கு கொடுத்த கிருபையின் வார்த்தைகள் கிடைக்காத பஞ்சம் ஏற்படும்போது, அது நிச்சயமாகவே ஒவ்வொருவரையும் பாதிககும் என்பதில் சந்தேகமில்லை. நாம் ஏற்கனவே அந்த காலத்திற்குள் வந்து கொண்டிருக்கிறோம். இன்றைய நாட்களில் அவரவருக்கு விருப்பமாக தேவனுடைய வார்த்தை மாற்றப்பட்டு பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. 'ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்'           (2 தீமோத்தேயு 4:3-4)  என்று வசனம் எச்சரித்த காலத்திற்குள் நாம் வந்திருக்கிறோம். இப்போது சுத்தமான கலப்படமில்லாத கர்த்தருடைய வார்த்தையை கேட்பது மிகவும் அரிதாக இருக்கிறது.

வசனம் சொல்லுகிறது, கர்த்தரே இந்த பஞ்சத்தை அனுப்புகிறார் என்று. 'இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்'. ஏன் கர்த்தர் இதை செய்ய வேண்டும்? கர்த்தருடைய ஜனங்கள் சத்தியத்திற்கு செவி கொடுக்காதபடி, ஆரோக்கியமான உபதேசத்தை கேட்க மனதில்லாமல், தங்களுடைய இச்சைக்கேற்றபடி பிரசங்கிக்கிறவர்களை தங்களுக்கு தெரிந்து கொண்டு, கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணும்போது கர்த்தர் இந்த பஞ்சத்தை அனுப்புகிறார். கர்த்தருடைய வார்த்தை நம்மை சீர்திருத்தும், நம் பாவத்தை கண்டித்து உணர்த்தும், கடிந்து கொள்ளும், நம்மை ஒழுங்கு படுத்தும். அதனால் தான் வசனத்திற்கு இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்று பெயர். ஆனால் அதை கேட்பவர்களுக்கு அது வேதனையாகவும், தங்கள் சுகமான பாவ வழிகளில் இருந்து வெளிவர மனமில்லாமல் இருப்பதால், அதை கேட்க அவர்களுக்கு மனதில்லாமல் போகிறது. மனிதர்கள் கர்த்தருடைய வார்த்தையை கேளாதபடி அசட்டை செய்யும் போது கர்த்தர் அதை கேட்க கூடாத பஞ்சத்தை அனுப்புகிறார்.

ஒரு பஞ்சம் என்று வரும்போது, உணவை குறித்த பசியும் தாகமும் ஏற்படும். அதுப்போல கர்த்தர் வசனம் கிடைக்காத அந்த பஞ்ச காலத்தை அனுப்பும்போது அப்போதுதான் மனிதருக்கு கர்த்தருடைய வசனத்தை குறித்த பசியும் தாகமும் ஏற்படும். அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசை தொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள் (வசனம் 12). என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அப்போது வசனத்தை தேடியும் அவர்கள் கண்டடையாமற் போவார்களாம்! இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை நமக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொள்வோம். நமக்கு இப்போது வசனம் தாராளமாய் கிடைக்கும்போதே அவற்றை நமது இருதயத்தில் பதித்து வைத்து கொள்வோம். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் (சங்கீதம் 119:11) என்ற சங்கீதக்காரனை போல நாம் கர்த்தருடைய வார்த்தைகளை நம் இருதயத்தில் வைத்து வைப்போம். ஒருவேளை நாளை நமக்கு வசனம் படிக்க கூடாத நிலை ஏற்படுமென்றால் நமது நிலைமை என்னவாகும்?

யோசேப்பு பார்வோன் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை சொன்னபோது, வரப்போகும் கொடிய பஞ்சத்தை குறித்து தேவன் பார்வோனை கனவின் மூலம் எச்சரித்திருந்தார். அதே சமயம் யோசேப்புக்கு அந்த கொடிய பஞ்சத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை செய்வதற்கு நல்ல ஞானத்தையும் கொடுத்தார். அவன் பரிபூரண வருஷங்களின் விளைவை எடுத்து சேமித்து வைத்தபடியினால், பின்னர் வந்த கொடிய பஞ்சத்தில் அநேகரை அவனால் போஷிப்பிக்க முடிந்தது. அதை போலவே நீங்களும் கர்த்தருடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் வைத்து வைக்கும்போது, பஞ்ச காலத்திலும், வற்றாத நீரூற்றை போல அநேகரை போஷிக்க கூடியவர்களாக மாறுவீர்கள். வசனம் கிடைக்கும் இந்த நல்ல காலங்களிலேயே நாம் அவற்றை நம் இருதயத்தில் காத்து வைக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக!


ஆமென் அல்லேலூயா!
நன்றி: அனுதின மன்னா

No comments:

Post a Comment