Saturday, 20 September 2014

ஆயத்தத்தோடு விழித்திருக்க வேண்டும்

மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். மத்தேயு 25: 13.

யூதர்களின் திருமண நிகழ்ச்சியானது, சாயங்காலத்தில் தொடங்கி இரவு வரை நடைபெறும். மணமகன் தனது தோழர்களுடன், மணமகள் வீட்டிற்க்கு வந்து, பின்னர் மணமகளை திருமண வீட்டிற்கு அழைத்து செல்வது வழக்கம். மணமகனுடைய தோழர்கள் மணமகள் வீட்டை நெருங்கியவுடன், மணமகன் வருகின்றார் என்று முழக்கமிடுவார்கள். மணமகனை வரவேற்கும் வகையில் மணமகளும் தனது தோழிகளை வீட்டின் முன்னே நிறுத்தி வைத்திருப்பாள். இந்த நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இரவில் நடைபெறுவதால், தோழிகள் தங்கள் கைகளில் விளக்கு வைத்திருப்பார்கள். மணமகன் வரும்பொழுது விளக்கு ஏந்தி அவரை வரவேற்பார்கள். பின்னர் இந்த தோழிகள் மணமகன் மற்றும் மணமகளுடன் திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்வார்கள். இப்படித்தான் அந்த நாட்களில் யூதர்களின் திருமணம் நடந்தது.

மத்தேயு 25:1-13-ல் இயேசு இந்த திருமண நிகழ்வை உவமையாக கூறினார். விண்ணரசு, மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துக் கன்னியருக்கு ஒப்பாயிருக்கும். பத்துபேர் கையிலும் விளக்கு இருந்தது. புத்தியுள்ளவர்கள் கையிலும், புத்தியில்லாதவர்கள் கையிலும் விளக்கு இருந்தது. ஆனால்,புத்தியுள்ளவர்கள் கைகளில் விளக்கோடு இரவு முழுவதும் எரிய போதுமான அளவு எண்ணெயையும் அவர்கள் ஆயத்தமாய் வைத்திருந்தார்கள். புத்தியில்லாதவர்களும் விளக்கு வைத்திருந்தார்கள். ஆனால் இரவுமுழுவதும் எரிய போதுமான அளவு எண்ணெயை வைத்திருக்காமல் ஆயத்தமில்லாமல் இருந்தார்கள். மணவாளன் வர தாமதித்தார். பத்துபேரும் நித்திரையாயிருந்தார்கள். திடீரென்று மணவாளன் வருகிற சத்தம் கேட்டது. பத்து பேரும் தங்கள் விளக்கை ஆயத்தம் பண்ணினார்கள்,புத்தியுள்ளவர்களின் விளக்கு எரிந்து பிரகாசித்தது, புத்தியில்லாதவர்களின் விளக்கு எரிந்து அணையத்தொடங்கியது. உடனே புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களிடம், எங்கள் விளக்கு அணைகிறது, உங்கள் எண்ணெயிலே எங்களுக்கு கொஞ்சம் இரவல் கொடுங்கள் என்றுக் கேட்டார்கள். உடனே புத்தியுள்ளவர்கள் ஞானமாய் சொல்லுகிறார்கள்: “…எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்“ (மத்.25:9). மணவாளன் வந்தார்; புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள் மணவாளனோடு கலியாண வீட்டிற்குள் பிரவேசித்தார்கள். உடனே கதவு அடைக்கப்பட்டது. புத்தியில்லாதவர்கள் பிற்பாடு வந்து கதவைத் தட்டுகிறார்கள். இவர்கள் மற்ற கன்னிகைகளோடு ஆயத்தத்தோடு வந்திருந்தால் அந்த வீட்டிற்குள்ளே நுழையக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும். மணவாளனுக்கு இவர்களைப்பற்றி தெரியாது. மணவாட்டிக்குத் தான் இவர்களைப் பற்றி தெரியும். ஆகவே மணவாளன் தானே கதவை திறந்து சொல்லுகிறார்: “நான் உங்களை அறியேன்“ என்று.

இயேசு கிறிஸ்து இதை ஏன் மக்களுக்கு உவமையாக சொன்னார் என்று சற்று தியானிப்போம். இயேசு தான் ஆகாயத்தில் வந்து தனது மனமகளாகிய சபையை தன்னோடு கூட அழைத்துச் செல்ல போகின்ற முக்கியமான நிகழ்வை எளிதான உவமை மூலம் மக்களுக்கு வெளிப்படுத்தினார். இது திருச்சபையின் விசுவாசிகளுக்காக இயேசு சொன்ன முக்கியமான உவமையாகும். இந்த உவமையில் வரும் பத்து கன்னிகைகளில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்கள், ஐந்துபேர் புத்தியில்லாதவர்கள். இந்த உவமையை நீங்கள் எளிதாக புரிந்துகொள்ள அடைப்புக்குறிக்குள் அதன் விளக்கம் கொடுப்பட்டுள்ளது. பரலோகத்தில் திருமணம் ஒன்று நடைபெற உள்ளது. மாப்பிள்ளையான மணமகன் (இயேசு), தனது மணமகளை (சபையை) சந்தித்து, திருமணவீட்டிற்கு (பரலோகத்திற்கு) அழைத்துச் செல்லுவதற்காக வந்துகொண்டு இருக்கிறார். அந்த திருமணத்தில் பங்குபெற அழைக்கப்பட்டிருந்த மணமகளுடைய தோழிகளான பத்து கன்னிகைகள் (திருச்சபையின் விசுவாசிகள்), மணமகனின் (இயேசுவின்) வருகையை எதிர்கொண்டு காத்திருக்கிறார்கள். மணமகன் வரும்பொழுது தோழிகளின் கைகளில் கொடுக்கப்பட்ட விளக்குகள் எரிந்து கொண்டிருக்க வேண்டும். அபொழுது அவர்கள் பரலோகமாகிய திருமண வீட்டிற்கு, மனமகளாகிய சபையுடன் அழைத்து செல்லப்படுவார்கள். பின்னர் திருமணவீட்டின் கதவுகள் அதாவது பரலோகத்தின் கதவுகள் அடைக்கப்படும்.

இந்த பத்துபேருமே பரலோகத்தில் நடைபெற இருக்கும் திருமணத்திற்கு செல்ல மணவாளன் இயேசுவுக்காய் காத்திருக்கும் திருச்சபை விசுவாசிகள். "ஆட்டுக்குட்டியான்வரின் கலியாணத்திற்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று வெளிபடுத்தின விஷேசம் 19:9-ல் வாசிக்கின்றோம். ஒவ்வொரு திருச்சபை விசுவாசியும் பேருபெற்றவர்கள் என்ற தேவதூதர்களே தேவனுக்கு முன்பாக பரலோகத்தில் சாட்சி கொடுக்கின்றார்கள். ஆனால் மணமகன் இயேசு சொல்கின்றார், திருமணத்திற்கு“அழைக்கப்பட்டவர்கள்அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோசிலர்” (மத்தேயு 20:16) என்று. எல்லா திருச்சபை விசுவாசிகளும் அழைக்கப்படிருந்தாலும், எல்லோரும் திருமண விட்டிற்க்குள் அதாவது பரலோகத்திர்க்குள் நுழையப்போவது இல்லை என்று கூறுகின்றார்.

ஆகவே தான் “விழிப்பாயிருங்கள்; ஏனெனில் நான் வரும் வேளையோ நாளோ உங்களுக்கு தெரியாது”  என்று இயேசு கூறினார். நோவா தனது குடும்பத்தினருடன் பேழைக்குள் சென்றவுடன் தேவன் கதவைப் பூட்டின்னார். அதே போல இயேசுவின் இரகசிய வருகைக்கு பின்னர், அதாவது மணவாட்டி சபை எடுத்துகொள்ளபட்ட பின்னர், இயேசு கிறிஸ்துவை அறிந்த, அவருடைய வருகையை எதிர்நோக்கி ஆயத்தத்தோடு இல்லாத அநேகர் கதவை திறக்க சொல்லி மன்றாடுவார்கள்.. அப்பொழுது இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “உறுதியாக உங்களுக்கு சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது” என்பார். இதை வாசிக்கின்ற திருச்சபை விசுவாசிகளாகிய நீங்கள், மணமகன் இயேசுவை சந்திக்க ஆயத்தமாக இல்லையென்றால், “இயேசு, உங்களை அவருக்கு தெரியாது” என்று சொல்லிவிடுவார். மணமகனாகிய இயேசு கிறிஸ்த்துவின் வருகைக்குரிய எல்லா அடையாளங்களும் இப்பொழுது நடந்துகொண்டு இருக்கிறது. ஆகவே நாம் அவரை சந்திக்கும்படி ஆயத்தத்தோடு விழித்திருக்கவேண்டும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:

Post a Comment