Wednesday, 31 December 2014

கனியுள்ள ஜீவியம்

அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். - (லூக்கா 13:8-9).



இந்த வருடத்தின் ஆரம்பத்தை காண செய்த நம் அன்பின் தேவன் இந்த வருடத்தின் முடிவையும் காண செய்த அவரது மட்டில்லாத கிருபைக்காக அவரை முழு இருதயத்தோடும் ஸ்தோத்தரிப்போம். எத்தனையோ வாலிபர்கள், சிறுவயதுடையோர், நம்மை காட்டிலும் பலவான்களாக இருந்த அநேகர் நம்மோடு இந்த நாட்களை காணவில்லை. ஆனால் தேவன் நமக்கு அந்த கிருபையை பாராட்டி, நம்மை போஷித்து, பராமரித்து, பாதுகாத்து இந்நாள் வரை நம்மை நடத்தி வந்த அவருடைய கிருபைகளுக்காக அவரை துதிப்போமா?

நாளைக்கு நாம் இந்த வருடத்தை கடந்த வருடம் என்று சொல்ல போகிறோம். இந்த வருடம் நம்மில் அநேகருக்கு ஒரு வேளை ஆசீர்வாதம் நிறைந்த வருடமாக இருந்திருக்கலாம், தேவன் நமக்கு நிறைவாய் கொடுத்த வருடமாக இருந்திருக்கலாம், ஒரு சிலருக்கு இந்த வருடம் தங்கள் உயிருக்குயிரானவர்களை இழக்க கொடுத்த வருடமாக இருந்திருக்கலாம், அல்லது எத்தனையோ காரியங்களை இழந்த வருடமாக இருந்திருக்கலாம். ஆனால் நம்மை இதுவரைக்கும் வழி நடத்தி வந்து, நமக்கு ஆறுதலையும் தேறுதலையும் கொடுத்து, அரவணைத்து வந்தவர் நம் இரக்கங்களின் தேவனல்லவோ!

நம் உலக காரியங்களில் நம்மை ஆசீர்வதித்த நம் தேவனுக்கு எத்தனை உண்மையாக நாம் ஆவிக்குரிய காரியங்களில் இருந்தோம் என்றால் அது மிகவும் குறைவாகத்தான் இருக்கும். நமக்கு நேரம் போதாது என்பதே நாம் எப்போதும் கூறும் மன்னிப்பின் காரியமாக இருக்கிறது. நாம் இன்னும் ஆவிக்குரிய காரியங்களில் நம் கவனத்தை அதிகமாக திருப்புவதில்லை, நாம் அவருக்குரிய நேரத்தை அவருக்கு கொடுக்கவில்லை என்பதே உண்மையாகும்.

இயேசுகிறிஸ்து ஒரு உவமையை சொல்கிறார், 'அப்பொழுது   அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்: அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா,  இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்' (லூக்கா 13:6-9). இந்த இடத்தில் ஒரு அத்திமரம் திராட்ச தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது, அது கனியை கொடுக்கும் என்றுதான் அந்த மரம் அங்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். அது பெரிய மரமானபோது, மூன்று வருஷங்கள் கழித்து, எஜமான் வந்து அதில் கனியை தேடினான். ஆனால் அதில் ஒரு கனியையும்  அவன் காணவில்லை. அவனுக்கு கோபம் வந்து, 'இந்த மரம் திராட்ச தோட்டத்தில் வைக்கப்பட்டு இருந்தும் கனியை கொடுக்கவில்லையே, இதை ஏன் இங்கு வைக்கவேண்டும், இதை வெட்டி போட்டால் இது இருக்கும் நிலமாவது நமக்கு கிடைக்கும், சும்மா இடத்தை அடைத்து கொண்டு இருக்கிறது' என்று கூறுகிறான். அதற்கு தோட்டக்காரன் சொன்ன பதில், 'ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம்' என்று சொன்னான்.

ஆம், தேவனுடைய கிருபையின்படி, நமக்கு அவர் இன்னும் ஒரு வருடத்தையும் கூட்டி கொடுத்து, நமக்கு அவருடைய வார்த்தைகளை கிருபையாக சொல்லி கொடுத்து, வசனத்தின் மூலம் நம்மோடு பேசி, நாம் எப்படியாவது அவருக்கு கனி கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய வாஞ்சையை நிறைவேற்றுவோமா? வருகிற வருடத்தில் அவர் நமக்கு எருபோட்டு, தண்ணீர் பாய்ச்சி நம்மை வளர்க்கும் போது, எஜமான் வந்து கனியை நம்மிடத்தில் தேடும்போது நாம் அவருக்கு விருப்பமான கனியை கொடுக்கத்தக்கதாக கனியுள்ள வாழ்க்கையை வாழ்வோமா?

'ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது' (யோவான் 15:5) என்று இயேசுகிறிஸ்து சொன்னாரே, அவரில் நிலைத்திருந்து மிகுந்த கனிகளை கொடுக்கும் வாழ்க்கையை வாழும்படியாக நாம் புது வருடத்தில் புது தீர்மானத்தை எடுப்போமா? நமக்கு வாழ்வு கொடுத்த தேவனுக்கு புதிய வருடத்தில் அவருக்கு நம்மால் இயன்ற கனியுள்ள வாழ்க்கை வாழ அவருக்கு அர்ப்பணிப்போம்.

சென்ற வருடத்தில் கனியற்ற வாழ்வை வாழ்ந்த நம்மில் அநேகருக்கு இந்த புதிய வருடத்தில் கனியுள்ள வாழ்க்கை வாழும்படி தேவன் நம்மை கொத்தி எருபோட்டு, தண்ணீர் பாய்ச்சும்படி நம்மை விட்டு கொடுப்போம். அப்போது அவரில் நிலைத்திருந்து புதிய வருடத்தில் அதிக கனிகளை கொடுக்க தேவன் நமக்கு கிருபை செய்வார்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி - அனுதின மன்னா

Tuesday, 18 November 2014

கூடவே இருக்கிற தேவன்

இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார். - (2 நாளாகமம் 13:12).

பதினொன்றாம் நூற்றாண்டில் நடைபெற்ற ஹேஸ்டிங்க்ஸ் யுத்தத்தில் நார்மனியர் இங்கிலாந்தை  முற்றுகையிட்டு இருந்தனர். அந்த யுத்தத்தின்போது நார்மனியரின் தலைவனான வில்லயம் கொலை செய்யப்பட்டு விட்டான் என்ற ஒரு வதந்தி போர்க்களத்திலிருந்து  நார்மனியரின் நடுவே காட்டுத்தீ போல பரவிற்று. தங்கள் தலைவன் கொலை செய்யப்பட்டு விட்டான் என்ற செய்தியை கேட்டபோது அவர்களது கைகள் தளர்ந்து போயின. அவர்களுடைய உள்ளங்களில் சோர்வும், சோகமும் மேலிட்டன. தங்கள் தலைவனை இழந்து விட்டதால் தாங்கள் யுத்தத்தில் தோல்வியடைவது திண்ணம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்து விட்டனர்.

‘யுத்தக்களத்திலிருந்து தாயகம் திரும்பி விடலாம்’ என்று தங்கள் இருதயத்தில் தீர்மானித்து விட்ட போர் வீரர்களும் இருந்தனர். இதை கேள்வியுற்ற தலைவனாகிய வில்லயம் துடித்தெழுந்தான். அவன் தன் குதிரையின் மேல் ஏறி தன் வீரர்களின் முகாம்கள் அமைந்திருந்த அனைத்து இடங்களுக்கும் விரைவாக சென்று, “நான் உயிரோடிருக்கிறேன்” என்று உரத்த சதத்ததுடன் முழங்கினார். அதை கேட்ட நார்மனியர் புத்துயிர் அடைந்தனர். அவர்களுடைய சோர்வும் சோகமும் அவர்களை விட்டகன்றன. தங்கள் கைகளை அவர்கள் மீண்டும் யுத்தத்திற்காக திடப்படுத்தினர். முடிவில் அப்போரில் அவர்கள் மகத்தான ஜெயம் பெற்று இங்கிலாந்தை கைப்பற்றினர். உலக சரித்திரத்தில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் கர்த்தராகிய இயேசு உயிர்த்தெழுந்த பின் நடந்த சம்பவங்களை நமக்கு நினைவூட்டுகிறதல்லவா? மேலே வாசித்த சம்பவத்தில் நார்மனியர்கள் தங்கள் தலைவனை நினைத்து வருந்தி கலங்கினது போலவே இயேசுவின் சீடர்களும் கலங்கி காணப்பட்டனர்.  இரட்கர் இயேசு சிலுவையில் கொலை செய்யப்பட்டார். இனி நமது எதிர்காலம் என்னவோ? என்று வேதனையுற்றனர். ஆனால் மரணத்தை வென்று உயிரோடு எழுந்த இயேசு தன் சீடர்களுக்கு தரிசனமாகி அவர்களை தைரியப்படுத்தினார். “இதோ, உலகத்தில் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்”  என திருவுளம் பற்றினார், உயிர்த்தெழுந்த இயேசுவின் தரிசனத்திற்கு பின்பாக, பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டு, பதினோரு சீடர்களும் ஆவியில் பெலனடைந்தனர். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்காக ஒவ்வொருவரும் வைராக்கியமாய் செயல்பட்டு கிரியை செய்தனர். அதன் விளைவாக உலகமங்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டு தேவனுடைய சபைகள் ஸ்தாபிக்கப்பட்டன.
இச்செய்தியின் மூலமாக தேவ ஆவியானவர் உங்களை அவருக்குள்ளாக தைரியப்படுத்துகிறார். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக! நான் உங்களை திக்கற்றவர்களாய் விடேன் என்று உங்களை பார்த்து இயேசுகிறிஸ்து கூறுகிறார். நான் தனிமையாய் இருக்கிறேன், எனக்கு என்று யாருமில்லை என்று தவிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். இம்மானுவேல் என்னும் இயேசு இரட்சகர் உங்களோடிருக்கிறார். நீ பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன், திகையாதே நான் உன் தேவன், நான் உன்னை பலப்படுத்தி உனக்கு சகாயம் பண்ணுவேன். -  (ஏசாயா 41:10) என்று வாக்குதத்தம் பண்ணினவர், வாக்கு மாறாதவராக உங்களுடனே கூட இருக்கிறார். தைரியப்படுங்கள், சோர்ந்து போகாதிருங்கள். உங்கள் இருதயம் கர்த்தருக்குள் பலப்படுவதாக!
ஆமென்..அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

Monday, 17 November 2014

எல்லாத் தீமைக்கும் வேர்

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். - (1 தீமோத்தேயு 6:10).

கர்த்தரின் ஊழியராகிய சாது சுந்தர்சிங் அவர்கள் உவமைகளை சொல்லி, வசனத்தை விளக்கும் தாலந்து உள்ளவர். அவர் பண ஆசையைக் குறித்து சொன்ன ஒரு உவமையை பார்ப்போம்.

மூன்று பேர் புதையல் இருக்கும் இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவ்விடத்திற்கு ஒரு மாலையில் சென்றனர். சிறிது நேர தேடலுக்குப் பிறகு, ஒருவன் அங்குள்ள ஒரு பள்ளத்தில் மாலை வெயிலின் வெளிச்சத்தில் ஏதோ ஒன்று மின்னுவதைக் கண்டு மற்றவர்களிடம் கூறினான். உடனே இரண்டாவது ஆள் ஒரு கல்லை எடுத்து குறிவைத்து எறிந்தான். 'கணீர்' என்ற ஒலி கேட்டது. அதற்குள்ளாக மற்றவன் ஓடிப்போய் ஒரு பெரிய உலோகப் பெட்டியை மண்ணுக்குள்ளிருந்து தூக்க ஆரம்பித்தார். பின்பு மூவரும் சேர்ந்து அப்புதையல் பெட்டியை தூக்கி எடுத்து, அதை திறந்தபோது, அதில் நிறைய தங்க நகைகளும், பொற்காசுகளும் இருப்பதைக் கண்டனர். ஆள்நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அதை மறைத்து வைத்தனர்.
பின் ஒவ்வொருவரும் 'நான் தான் முதலில் அதை கண்டுபிடித்தேன். எனக்குத்தான் அதிக பங்கு வரவேண்டும்' என்று தர்க்கிக்க ஆரம்பித்தனர். ஒருவாறு சமாதானமாகி, இரவு வருமுன் சாப்பிட்டு விடலாம் என்று தீர்மானித்து, ஒருவனை ஓட்டலுக்கு அனுப்பி, 'நீ சாப்பிட்டு விட்டு, எங்களுக்கும் வாங்கிவா' என்று அனுப்பி வைத்தனர். அவன் சென்றவுடன், மற்ற இருவரும் அவன் திரும்பி வந்தவுடன் அவனை கொன்று விட வேண்டும் என்று தீர்மானித்தனர்.
உணவு வாங்க சென்றவன், திரும்பியதும், இருவரும் சேர்ந்து அவனை கொன்று போட்டனர். உணவை சாப்பிட்டு விட்டு, இருவரும் புதையலை பகிர்ந்து கொள்ளலாம் என்று பேசிவிட்டு, சாப்பிட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் இருவரும் மயக்கமுற்று மரத்தடியில் விழுந்தனர். மீண்டும் எழும்பவே இல்லை. காரணம் அவன், இவ்விருவர் உணவிலும் விஷம் கலந்திருந்தான். புதையல் மூன்று பிணங்களையும் பார்த்து சிரித்ததாம்.
பணமோ எல்லாவற்றிற்கும் உதவும் என்று சொல்லும் வேதம், பண ஆசையோ எல்லா தீமைக்கும் வேர் என்றும் சொல்லி நம்மை எச்சரிக்கிறது. பணமில்லாவிட்டால் நாம் ஜீவிப்பது கடினமே. ஆனால் பணமே அல்லது வசதிகளே என் வாழ்வு என்று வாழ்வோமானால் நாம் அதற்கு அடிமைகளாக மாறி விடுவோம்.
ஒரு மனிதனுக்கு பணம் சேர சேர அதில் அவன் திருப்தி அடைந்து விடுவதில்லை. இன்னும் அதிகமாக சேர்க்க வேண்டும் என்றே அவன் மனம் வாஞ்சிக்கிறது. பணம் சேர சேர, முதலில் ஒழுங்காக இருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக பாவத்தில் விழ ஆரம்பிக்கிறான். முடிவில், பாவம் அவனை மேற்கொண்டு, அதற்கு அடிமையாக மாறி விடுகிறான். 'ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள்' (9ம் வசனம்) என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.
நமக்கு கிடைக்கும் சம்பளத்தில் வாழ கற்றுக் கொள்வோம். மிஞ்சி ஆசைப்படாமல், நம் வரவுக்கு தக்கதாக செலவு செய்வோமானால், கடனே இல்லாமல் வாழ முடியும். நம் தேவைகள் அதிகமாகும்போது, அதற்காக எப்படியாவது பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று சிலர் குறுக்கு வழிகளை கடைபிடித்து, அதனால் வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்.

'போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்' (6ம் வசனம்) என்றும் வேதம் கூறுகிறது. எதிலும் மனதிருப்தியும், மன நிறைவும் காணக்கற்றுக் கொள்வோம். மற்றவர்களை பார்த்து, நமக்கு அதுப்போல இல்லையே என்று ஏங்காமல், கர்த்தர் நம்மை வைத்திருக்கும் நிலையில் சந்தோஷப்படுவோம். நமக்கு கொடுத்திருக்கிற பொறுப்புகளில் உண்மையாக இருப்போம். கர்த்தர் நம்மை நிச்சயமாக உயர்த்துவார்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Wednesday, 12 November 2014

மனுஷனுடைய சுயவழிகள்

மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள். - (நீதிமொழிகள் 14:12).

பிளான்க் மலை உயர்ந்த சிகரங்களுள்ளது. மலையேறுவோர் அதில் பாதுகாப்புடன் ஏறுவதற்கு உதவியாக வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இளைஞன் ஒருவன் அம்மலையின் சிகரங்களை சென்றடைய வேண்டுமென்று சவாலுடன் ஒரு வழிகாட்டியின் துணையோடு புறப்பட்டான். தன் சாதனையில் வெற்றி கண்டவனாக மலை சிகரங்களை அடைந்தான். இளைஞனின் வீரச்செயலால் அவனது கிராமம் முழுவதும் குதூகலமடைந்தது. அவனது வெற்றியை அறிவிக்கும் வண்ணம் அம்மலையோரத்தில் ஒரு கொடி ஏற்றப்பட்டு பறந்து கொண்டிருந்தது. அவ்விளைஞனோ தன் கிராமத்தை நோக்கி கீழே இறங்கிக் கொணடிருந்தான். இந்நேரத்தில் அந்த வழிகாட்டி தனக்கு அவசியமில்லை என அவனுக்கு தோன்றிற்று. சுயாதீனமாய் செல்ல விரும்பிய அவன் தன் விருப்பத்தை வழிகாட்டியிடம் தெரிவித்தான். வழிகாட்டியோ “இது பனிப்பாறைகள் நிறைந்த இடம், பழக்கமற்ற நீங்கள் தனியாக வருவது பாதுகாப்பற்றது”  என எச்சரித்தார். ஆனால் வாலிபனோ தான் சுயாதீனமாக விடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். வழிகாட்டியும் வேறுவழியில்லாமல் சம்மதித்தார்.

ஜாலியாக பாட்டு பாடி கொண்டே கீழே இறங்கிய அவன் கவனக்குறைவாக சரிவான பனிக்கட்டி பாறைகளில் கால்களை வைக்கவும், அதனால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் சறுக்கி வந்து கொண்டிருந்தான். இப்போது கயிற்று பிணைப்பும் இல்லை, வழிகாட்டியின் உதவியும் இல்லை. ஒரு சில மணி நேரத்தில் பனி பாறையின் மீது அவ்வாலிபனின் உடல் உயிரற்று கிடந்தது. வெற்றியோசை முழங்கிய கிராமம் இப்போது துயரத்தில் மூழ்கியது. கிராம மக்களின் சந்தோஷத்திற்கு காரணமானவனே துக்கத்திற்கும் காரணமானான்.

இவ்வாலிபன் சிகரத்தை தொட காரணமென்ன? முதலாவது அவனது விடா முயற்சி, அடுத்து வழிகாட்டியின் ஆலோசனை. வெற்றியடைய பிறரது உதவியை நாடிய அவன் வெற்றிக்கு பின் பிறரது கண்காணிப்பையும் ஆலோசனையையும் விரும்பவில்லை. வழிகாட்டியாடு இணைக்கப்பட்டிருந்த கயிறு அறுபட்டது. முடிவு என்ன ஒரு பரிதாபம்!

நமது வாழ்விலும் நமக்கு இறுதிவரை வழிகாட்டி அவசியம். பரிசுத்த ஆவியானவரும், ஒரு நல்ல ஆவிக்குரிய சபையின் போதகரின் ஆலோசனைகளும் நம்மை ஒவ்வொரு நாளும் சிறந்த வழிகாட்டியாக இருந்து நடத்துகின்றனர். பரிசுத்த ஆவியானவர் நம்மை ஒவ்வொரு நாளும்  போதித்து நடத்துகின்றார். “நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” - (சங்கீதம் 32:8) என்று அருமையான ஆலோசனையை நமக்கு கூறி அனுதினமும் நம்மை அதிசயமாய் நடத்துகின்றார். ஒவ்வொரு வாரமும் சபைக்கு சென்று ஆவிக்குரிய போதகர் மூலமாய நமக்கு தேவன் ஆலோசனை தருகின்றார்.

சிலர் ஆவியானவரும் எனக்கு வேண்டாம், ஆவிக்குரிய சபையும் எனக்கு வேண்டாம் என்று விதண்டாவாதம் செய்து கொண்டு, தங்களுடைய சுயவழிகளில் நடந்து கொண்டிருக்கிறார்கள். மனுஷனுக்குத் செம்மையாய்த் தோன்றுகிறவழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள் என்ற வேதம் நம்மை எச்சரிக்கின்றது. ஆரம்பத்தில் கர்த்தரை பிடித்து கொண்டதால் கிடைத்த வெற்றி, என்னால் எல்லாம் செய்ய முடியும் என்று சுயத்தை நம்பி செயலாற்றும்போது, தோல்வியாகவே முடிகிறது. உலகத்திற்குரிய வாழ்விலும் ஆவிக்குரிய வாழ்விலும் நாம் பெறும் ஒவ்வொரு வெற்றியும் கர்த்தரால் மாத்திரமே வந்தது என்று அவரையே சார்ந்து, கடைசிவரை நம்முடைய வாழ்வின் வழிகாட்டியாக அவரே இருக்கும்போது நாம் செய்யும் எல்லா காரியங்களும் வெற்றியாகவே முடியும் என்பதில் சந்தேகமேயில்லை!

ஆமென் அல்லேலூயா
நன்றி- அனுதின மன்னா

Monday, 10 November 2014

வசனம் கிடைக்காத பஞ்சகாலம்

இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்மல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். - (ஆமோஸ் 8:11).

மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் - (மத்தேயு 4:4) என்று வேதம் நமக்கு கூறுகிறது. அப்படி நாம் பிழைக்கும்படியாக கர்த்தர் நமக்கு கொடுத்த கிருபையின் வார்த்தைகள் கிடைக்காத பஞ்சம் ஏற்படும்போது, அது நிச்சயமாகவே ஒவ்வொருவரையும் பாதிககும் என்பதில் சந்தேகமில்லை. நாம் ஏற்கனவே அந்த காலத்திற்குள் வந்து கொண்டிருக்கிறோம். இன்றைய நாட்களில் அவரவருக்கு விருப்பமாக தேவனுடைய வார்த்தை மாற்றப்பட்டு பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. 'ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு. சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்'           (2 தீமோத்தேயு 4:3-4)  என்று வசனம் எச்சரித்த காலத்திற்குள் நாம் வந்திருக்கிறோம். இப்போது சுத்தமான கலப்படமில்லாத கர்த்தருடைய வார்த்தையை கேட்பது மிகவும் அரிதாக இருக்கிறது.

வசனம் சொல்லுகிறது, கர்த்தரே இந்த பஞ்சத்தை அனுப்புகிறார் என்று. 'இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்'. ஏன் கர்த்தர் இதை செய்ய வேண்டும்? கர்த்தருடைய ஜனங்கள் சத்தியத்திற்கு செவி கொடுக்காதபடி, ஆரோக்கியமான உபதேசத்தை கேட்க மனதில்லாமல், தங்களுடைய இச்சைக்கேற்றபடி பிரசங்கிக்கிறவர்களை தங்களுக்கு தெரிந்து கொண்டு, கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணும்போது கர்த்தர் இந்த பஞ்சத்தை அனுப்புகிறார். கர்த்தருடைய வார்த்தை நம்மை சீர்திருத்தும், நம் பாவத்தை கண்டித்து உணர்த்தும், கடிந்து கொள்ளும், நம்மை ஒழுங்கு படுத்தும். அதனால் தான் வசனத்திற்கு இருபுறமும் கருக்குள்ள பட்டயம் என்று பெயர். ஆனால் அதை கேட்பவர்களுக்கு அது வேதனையாகவும், தங்கள் சுகமான பாவ வழிகளில் இருந்து வெளிவர மனமில்லாமல் இருப்பதால், அதை கேட்க அவர்களுக்கு மனதில்லாமல் போகிறது. மனிதர்கள் கர்த்தருடைய வார்த்தையை கேளாதபடி அசட்டை செய்யும் போது கர்த்தர் அதை கேட்க கூடாத பஞ்சத்தை அனுப்புகிறார்.

ஒரு பஞ்சம் என்று வரும்போது, உணவை குறித்த பசியும் தாகமும் ஏற்படும். அதுப்போல கர்த்தர் வசனம் கிடைக்காத அந்த பஞ்ச காலத்தை அனுப்பும்போது அப்போதுதான் மனிதருக்கு கர்த்தருடைய வசனத்தை குறித்த பசியும் தாகமும் ஏற்படும். அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசை தொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள் (வசனம் 12). என்ன ஒரு பரிதாபமான நிலைமை! அப்போது வசனத்தை தேடியும் அவர்கள் கண்டடையாமற் போவார்களாம்! இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை நமக்கு ஒரு எச்சரிக்கையாக எடுத்து கொள்வோம். நமக்கு இப்போது வசனம் தாராளமாய் கிடைக்கும்போதே அவற்றை நமது இருதயத்தில் பதித்து வைத்து கொள்வோம். நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன் (சங்கீதம் 119:11) என்ற சங்கீதக்காரனை போல நாம் கர்த்தருடைய வார்த்தைகளை நம் இருதயத்தில் வைத்து வைப்போம். ஒருவேளை நாளை நமக்கு வசனம் படிக்க கூடாத நிலை ஏற்படுமென்றால் நமது நிலைமை என்னவாகும்?

யோசேப்பு பார்வோன் கண்ட சொப்பனத்தின் அர்த்தத்தை சொன்னபோது, வரப்போகும் கொடிய பஞ்சத்தை குறித்து தேவன் பார்வோனை கனவின் மூலம் எச்சரித்திருந்தார். அதே சமயம் யோசேப்புக்கு அந்த கொடிய பஞ்சத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை செய்வதற்கு நல்ல ஞானத்தையும் கொடுத்தார். அவன் பரிபூரண வருஷங்களின் விளைவை எடுத்து சேமித்து வைத்தபடியினால், பின்னர் வந்த கொடிய பஞ்சத்தில் அநேகரை அவனால் போஷிப்பிக்க முடிந்தது. அதை போலவே நீங்களும் கர்த்தருடைய வார்த்தையை உங்கள் இருதயத்தில் வைத்து வைக்கும்போது, பஞ்ச காலத்திலும், வற்றாத நீரூற்றை போல அநேகரை போஷிக்க கூடியவர்களாக மாறுவீர்கள். வசனம் கிடைக்கும் இந்த நல்ல காலங்களிலேயே நாம் அவற்றை நம் இருதயத்தில் காத்து வைக்க தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக!


ஆமென் அல்லேலூயா!
நன்றி: அனுதின மன்னா

Friday, 7 November 2014

ஆவியின் கனியோ... விசுவாசம்

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23).

ஏழாம் சுளை......... விசுவாசம்:

ஆவியின் கனியாகிய விசுவாசம் என்பது 'எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தா  சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'; (மாற்கு 11:23) என்று இந்த இடத்தில் சொல்லப்பட்டிருக்கிற விசுவாசம் அல்ல. ஆவியின் கனியாகிய விசுவாசம் என்பதற்கு உண்மை, நேர்மை, உத்தமம் என்பது பொருளாகும்.

ஒரு எஜமானுக்கு ஒரு வேலைக்காரன் விசுவாசமுள்ளவனாக இருந்தால், அவன் நேர்மையாக, உண்மையாக, தன் செயல்கள் எல்லாவற்றிலும் தன் எஜமானுக்கு எந்த விதத்திலும் நஷ்டம் கொண்டு வராதவனாக இருப்பான்.

ஒரு உண்மையுள்ள கணவனுக்கு நல்ல மனைவி விசுவாசமுள்ளவளாக இருப்பாள், நல்ல மனைவிக்கு ஒரு உண்மையுள்ள கணவன் விசுவாசமுள்ளவனாக இருப்பான்.

வேதத்தில் தேவன் எத்தனை உண்மையுள்ளவராயிருக்கிறார் என்றுப் பார்க்கிறோம். 'வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே' (எபிரேயர் 10:23), 'தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்' (1 கொரிந்தியர் 1:9) 'மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்' (1 கொரிந்தியர் 10:13) என்று நம் தேவன் எத்தனை உண்மையுள்ளவர் என்று வேதத்தில் பார்க்கிறோம். அந்த வார்த்தைகளின்படியே அவர் இந்நாள் பரியந்தம் உண்மையுள்ளவராகவே இருக்கிறார்.

தேவன் உண்மையுள்ளவராக இருப்பதால் இந்த நாள் பரியந்தம் நம்மை நடத்தி வருகிறார், நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருப்பதால்தான் எந்த போராட்டங்கள், பாடுகள், துன்பங்கள் வந்தாலும் கூடவே இருந்து தாங்கிக் கொள்ளவும், எல்லா பிரச்சனைகளிலிருந்து விடுவிக்கவும் வல்லவராக இருக்கிறார்.

நம்மை அழைத்தவர் உண்மையுள்ளவராக இருக்கிறதுப் போல நாம் அவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? கர்த்தர் நம்மை நம்பிக் கொடுத்திருக்கிற வேலைகளில், பொறுப்புகளில், குடும்பங்களில், சபைகளில், சமுதாயத்தில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கிறோமா? எத்தனை குறைவுள்ளவர்களாக காணப்படுகிறோம்?

அநேக ஊழியர்கள் தேவன் அவர்களை நம்பிக் கொடுத்த சிறிய ஊழியத்தில் உண்மையுள்ளவர்களாக இருந்தபடியால், தேவன் அவர்களை அநேகத்திற்கு அதிகாரிகளாக மாற்றி, அவர்களை நம்பி தமது பணியினை ஒப்படைத்தார். சிறிய காரியத்திலும் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கும்போது நிச்சயமாகவே தேவன் நம்மை நம்பி பெரிய காரியங்களை ஒப்படைப்பார் என்பதில் சந்தேகமேயில்லை. உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான் (நீதிமொழிகள் 28:20) என்று வேதம் கூறுகிறதல்லவா?

'என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன்' (எண்ணாகமம் 12:7) என்று தேவனே நம்மைப் போல ஒரு மனிதனைக் குறித்து சாட்சி கொடுக்கிறார் என்றால் அவர் எத்தனை உண்மையுள்ளவராக இருந்திருக்க வேண்டும்? தேவன் நம்மைக் குறித்து அப்படிப்பட்ட சாட்சிக் கொடுப்பாரா?

'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற வாசகத்தை தனது தாரக மந்திரமாக கொண்டு திரு. உ. சகாயம் I.A.S. அவர்கள் தன் வேலையில் உண்மையாக இருந்தபடியால், தான் வேலை செய்த 23 வருடங்களில் 24 முறை இடமாற்றம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர் மனம் உடைந்துப் போகவில்லை, தொடர்ந்து அநீதிக்கு எதிராக போராடினார். திருட்டுத்தனமாக மணல் கொள்ளை அடிப்பதை கண்டு, அதற்கு எதிராக அவர் செயல்பட்டார். அதில் ஈடுபட்டிருந்தவர்கள் சும்மாவா இருந்திருப்பார்கள்? கொலை மிரட்டல் விட்டாலும் தன் வேலையை உண்மையாய் செய்வேன் என்று தொடர்ந்து எதிராக போரிட்டதால், தற்போது, அவரையே விசேஷித்த ஆபிசராக கோர்ட் நியமனம் செய்திருக்கிறது. அவர் தன் தேவனுக்கு முன்பாக தன் உண்மையை காத்துக் கொண்டார். கர்த்தரின் வருகையின் நாளில், 'அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்' எனறு கர்த்தர் அவரை கனப்படுத்துவார் (மத்தேயு 25:23).

எத்தனைப் பேர் நமக்கு எதிராக வந்தாலும், நமக்கு விரோதமாக போராடினாலும், நாம் நம் உண்மையில் நிலைத்திருப்போம். ஆவியின் கனியாகிய விசுவாசத்தை காத்துக் கொள்வோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார். அவர் அளிக்கும் பலன் அவரோடேக் கூட வருகிறது.

ஆமென் அல்லேலூயா!
நன்றி: அனுதின மன்னா

Tuesday, 4 November 2014

ஆவியின் கனியோ... நற்குணம்

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. -(கலாத்தியர் 5:22-23)


ஆறாம் சுளை .....நற்குணம்:

நாம் அனைவரும் ஆலயத்திலும், வீட்டிலும் பாடும் பாடல்கள் கர்த்தர் நல்லவர் என்று சொல்லும், அர்த்தம் கொள்ளும் பாடல்களையே! நம் கர்த்தர் அத்தனை நல்லவர்! அவரை ஆயிரம் முறை அப்பா நீர் நல்லவர், நல்லவர் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலும் திகட்டாது. அவர் அத்தனை நல்லவர்!

நற்குணம் கொண்ட ஒரு மனிதனையோ, மனுஷியையோ அனைவரும் நேசிப்பார்கள். கேட்டால் சொல்வார்கள், 'அவரு ரொம்ப நல்லவருங்க' என்று. இயற்கையிலேயே நற்குணம் கொண்டவர்கள் இருப்பார்கள். ஆனால் ஆவியின் கனியாகிய நற்குணத்தை கொண்டவர்களோ, எல்லா நற்குணத்திற்கும் மேம்பட்டவர்களாக கிறிஸ்துவையே வெளிப்படுத்திக் காட்டுகிறவர்களாக இருப்பார்கள்.

கர்த்தரை பின்பற்றுகிறவர்களாகிய நம்மை பார்த்து மற்றவர்கள் இவர் நல்லவர், இவர்கள் நல்லவர்கள் என்று சொல்லமுடியுமா? நம் கிரியைகள் மற்றவர்களுக்கு நன்மை தரத்தக்கதாக, மற்றவர்கள் பாராட்டும்படியாக, மற்றவர்களுக்கு பிரயோஜனமுள்ளதாக இருக்கிறதா?

'..முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்ளூ கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாதுளூ  கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது' (மத்தேயு 7:16-18) என்று இயேசுகிறிஸ்து கூறினார். ஆம், நல்ல மரத்தால்தான் நல்ல கனியை கொடுக்க முடியும். கெட்ட மரங்களோ கெட்ட கனியைத்தான் கொடுக்கும்.

நம்முடைய வேலையிடங்களில், நம்மைச் சுற்றியிருக்கிற இடங்களில், நல்ல மரங்களைப் போன்றவர்களும் இருக்கலாம், கெட்ட மரங்களைப் போன்றவர்களும் இருக்கலாம். கெட்ட மரங்களைப் போன்றவர்களிடம் நாம் நல்ல கனியை எதிர்ப்பார்க்க முடியாது. ஏனெனில் அவர்களின் சுபாவமே அப்படிப்பட்டது. அவர்கள் கெட்டகனியைத்தான் தருவார்கள் என்று இயேசுகிறிஸ்து கூறியிருக்கிறாரே!

கிரகாம் ஸ்டெயின்ஸ் அவர்களும், அவர்களுடைய இரண்டு பிள்ளைகளையும் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டபோது, அவர்களின் துணைவியார் கர்த்தரோடு இருந்தபடியால், அவர்களிடத்தில் ஆவியின் கனியாகிய நற்குணம் வெளிப்பட்டது. அவர்கள் உடனே அவர்களை கொன்றவர்களை சபிக்கவில்லை, அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று போர்க்கொடி ஏற்றவில்லை, மாறாக அவர்களை மன்னித்தார்கள். நல்ல மரத்திலிருந்து நல்ல கனியே கிடைக்கும். கெட்ட கனியை எதிர்ப்பார்க்க முடியாது.
ஈராக்கிலும், சிரியாவிலும் நடக்கும் கொடுமைகளை பார்க்கும்போது, ஒரு சகோதரி கதறுகிறாள், 'என்னை 32 முறை மதிய நேரத்திற்குள் கற்பழித்திருக்கிறார்கள், தயவுசெய்து குண்டு வீசி எங்களைக் கொன்று போடுங்கள், நாங்கள் உயிரோடு இருப்பதைப் பார்க்கிலும் சாவது எங்களுக்கு மேல்' என்று கதறுகிறாள். கெட்ட மரத்திலிருந்து கெட்ட கனியே வரும், நல்ல கனியை எதிர்ப்பார்க்கவே முடியாது.

வேதத்தில் எத்தனையோப் பேர் நற்குணசாலிகளாக இருந்திருக்கிறார்கள். யோசேப்பு, மோசே, ரூத், தாவீது என்று சொல்லிக் கொண்டே போகலாம். அவர்கள் தாங்கள் தாங்கள் நாட்டப்பட்ட இடத்திலே நற்குணசாலிகளாக விளங்கினார்கள்.

'பெரோயா பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்' (அப்போஸ்தலர் 17:11) என்று வேதம் கூறுகிறது. வேதத்தை ஆராய்ந்து, 'ஓ, வசனத்தில் இப்படி இருக்கிறது, அதன்படி நான் நடக்க வேண்டும்' என்று அவர்கள் தினந்தோறும் வேதத்தையும் தங்களையும் ஆராய்ந்து பார்த்தபடியால் நற்குணசாலிகளாக விளங்கினார்கள் என்றுப் பார்க்கிறோம். தினமும் வேதத்தை வாசித்து, அதன்படி நம்மை மாற்றிக் கொள்வோமானால் நாமும் நற்குணசாலிகளாக விளங்குவோம் என்பதில் சந்தேகமேயில்லை!

நமக்கு தீமை செய்கிறவர்களுக்கு நாம் நன்மை செய்வதன் மூலம், கைமாறு கருதாமல் மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம், தீமைக்கு தீமை சரிகட்டாமல், மற்றவர்களோடு நம்முடைய நன்மைகளை பகிர்ந்து கொள்வதன் மூலம், நியாயமாக காரியங்களை செய்வதன் மூலம், மற்றவர்களுக்காக ஜெபிப்பதன் மூலம், நல்ல வார்த்தைகளையே பேசுவதன் மூலம் நம்மிடத்தில் உள்ள ஆவியின் கனியாகிய நற்குணத்தை வெளிப்படுத்த முடியும்.

'சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ள'... (கொலோசேயர் 1:10)தேவன் தாமே கிருபை செய்வாராக!

ஆமென் அல்லேலூயா!
நன்றி அனுதின மன்னா

Monday, 3 November 2014

ஆவியின் கனியோ.. தயவு

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23).

ஐந்தாவது சுளை........ தயவு:

'எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது' (யோபு-10:12) என்று பார்க்கிறோம். ஆம், நம் தேவன் நமக்கு ஜீவனைத் தந்ததோடு மாத்திரமல்ல, தயவையும் பாராட்டி இந்த புதிய நவம்பர் மாதத்தில் காலடி எடுத்து வைக்க கிருபை பாராட்டியிருக்கிறார். அவருடைய தயவும் இரக்கமும் இல்லாதிருந்தால் நாம் எப்படி இருந்திருப்போமா தெரியாது. ஆனால் அவர் நம் மேல் வைத்த தயவினால் இந்நாள் வரை ஜீவனோடு சுகத்தோடு நாம் நல்ல நாட்களை காண்கிறோம்.

ராபர்ட் டி வின்சென்ஜோ என்னும் கால்பந்து ஆட்டக்காரர், ஒரு முறை விளையாடிவிட்டு, வெளியே வந்தபோது, ஒரு பெண் அவரிடம் வந்து தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு, தன் இரண்டு வயது மகன் மிகவும் சீரியஸாக உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், அவனுடைய சிகிச்சைக்கு பணத்தேவை அதிகம் இருப்பதாகவும் கூறினாள். அதைக் கேட்ட அவர் உடனே தன் பையில் இருந்த செக் புத்தகத்தை எடுத்து ஒரு கணிசமான பணத்தை எழுதி அந்த பெண்ணிடம் கொடுத்து, உன் பிள்ளையை காப்பாற்று என்று சொல்லிக் கொடுத்தார்.

ஒரு வாரம் கழித்து, அவருடைய நண்பர்கள், அவரிடம் வந்து, 'நீ என்னமோ பணத்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தாயாமே? அவளுக்கு பிள்ளை ஒன்றும் இல்லை, ஏன் அவளுக்கு இன்னும் கலியாணமே ஆகவில்லை, அவள் உன்னை நன்கு ஏமாற்றி விட்டாள்' என்று கூறினர். அதைக்கேட்ட அந்த வீரர், 'உண்மையிலேயே பிள்ளை யாரும் சீரியஸாக இல்லையா?' என்றுக் கேட்டார். மற்றவர்கள் ஆம் என்று கூறியதும், 'அப்பா, இந்த வாரத்தில் நான் கேட்ட சிறந்த செய்தி இதுதான்' என்று கூறினாராம். அவருக்கு பணம் பெரியதாக தெரியவில்லை, ஒரு உயிர் சுகமாயிருக்கிறது என்ற செய்தியே பெரிதாக இருந்தது.

மற்றவர்களுக்கு நம்மால் இயன்றதை, அவர்களிடம் திரும்பவும் உதவி பெறுவோம் என்ற கைமாறு கருதாமல் செய்யும் உதவியே தயவு ஆகும்.  உதவி என்று யாரும் கேட்டு வந்தால் அநேகருக்கு முகம் வேறு மாதிரி மாறி விடுகிறது. இந்த ஆளுக்கு வேறு வேலையில்லை, சும்மா உதவி தேவை என்று வந்து விடுகிறான் என்று முகத்தை சுளிக்கிறோம்.

தயவு பாராட்டுவதற்கு முதல் உதாரணம் நம் தேவன்தான். அவர் தயவு பாராட்டுவதால்தான் பாவிகளாயிருந்தாலும், நம்மை நீதிமான்களாக்கி, நம்மை பரலோக இராஜ்யத்திற்கு சுதந்தரவாளிகளாக மாற்றியிருக்கிறார்.

வேதத்தில் எத்தனையோப் பேர் மற்றவர்களுக்கு தயவு பாராட்டி இருப்பதைக் காணலாம். யோசேப்பு தன்னை அநியாயமாய் அந்நியரிடம் விற்ற தன் அண்ணன்மார்களின் மேல் கோபம் கொள்ளாமல், அவர்கள் மேல் தயவுக்காட்டி, பஞ்சக்காலத்தில் அவர்களை ஆதரித்தார்.

தாவீது இராஜா தன் உயிரை பறிக்க தன்னை துரத்தி வந்த சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தை அரண்மனையில் தன்னோடு இருக்க வைத்து, உணவுகொடுத்து, தயவு பாராட்டினாரே. பழைய ஏற்பாட்டு விசுவாசியானாலும், அவரிடம் ஆவியின் கனி வெளிப்பட்டதே!

பிரியமானவர்களே, இப்படி எத்தனையோ உதாரணங்கள் இருந்தும், நாம் மற்றவர்களிடம் எப்படி தயவு காண்பிக்கிறோம்? யார் யார் மற்றவர்களுக்கு தயவு காண்பித்தார்களோ, அவர்களுக்கும் தயவு கிடைத்தது.  நாம் மற்றவர்களுக்கு தயவு செய்தால், நம்முடைய தேவையில் நமக்கு தயவு கிடைக்கும். நம்மிடத்தில் தயை வேண்டி வரும் உதவியற்றவர்களுக்கு நாம் உதவி செய்கிறோமா?

ஆப்ரிக்காவில் உசாமுசுலு மட்வா என்னும் மனிதர், தன் சிறுவயது மகனை வயிற்றுப்போக்கினால் ஆஸ்பத்திரி கொண்டு சென்றும், மரித்துப் போனபடியினால், மரித்த குழந்தையை ஒரு சபையின் போதகரிடம் அடக்கம் செய்யும்படி கேட்டபோது, அந்த போதகர், அந்த மனிதர் தன் சபையின் உறுப்பினரில்லை என்பதால் அடக்கம் செய்ய மறுத்து விட்டார்.

பின்னர் அதே மனிதர் கிறிஸ்தவம் ஏன் ஆப்ரிக்காவில் தோற்றுப் போனது என்று ஒரு புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். கிறிஸ்தவர்கள் என்று சொல்லப்படுகிற நம்மிடம் இருக்க வேண்டிய தயவு எங்கே போயிற்று? கிறிஸ்து நம் சொந்த இரத்தத்தை கொடுத்து சம்பாதித்த சபையில் ஆவியானவரின் கனி காணப்படவில்லை என்றால், அவருடைய பரிசுத்த இரத்தத்தை நாம் எந்த அளவு மதிக்கிறோம் என்பது விளங்குமல்லவா?

கர்த்தரை ஏற்றுக் கொண்டேன் என்று சொல்கிறவர்கள், ஆவியானவரின் கனியாகிய தயவை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துகிறோமா? நாம் இந்த உலகில் வாழ்வதற்கு மற்றவர்களின் தயவு நமக்கு தேவையாயிருக்கிறது. குழந்தைகளாயிருந்தபோது பெற்றோரின் தயவு, பெரியவர்களானதும் வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் தயவு, வயதானவுடன் பிள்ளைகளின் தயவு என்று தயவு இல்லாமல் நம் வாழ்க்கை இல்லை. நாம் மற்றவர்களின் தயவை பெறும்போது, நாமும் தயவு காண்பிக்க வேண்டுமே!

'ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்' (எபே-4:32) என்ற வசனத்தின்படி ஒருவருக்கொருவர் தயவாயிருப்போம். நம்மிடம் தயவு கேட்டுவரும் ஒவ்வொருவருக்கும் உதவிகள் செய்வோம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Friday, 31 October 2014

ஆவியின் கனியோ.. நீடிய பொறுமை

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5: 22-23).

நான்காவது சுளை…….நீடிய பொறுமை:

நாம் அவசர உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே உடனுக்குடன் நடைபெற வேண்டும் என்கிற எதிர்ப்பார்ப்போடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். ஏதாவது கொஞ்சம் தாமதித்தால் உடனே எத்தனை முறுமுறுப்புகள், எத்தனை முக கோணல்கள்!

சமீபத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் வைத்தியரை பார்க்க வேண்டி இருந்தது. மூன்று மணி நேரம் காக்க வைத்து விட்டார்கள். மூன்று மணி நேரத்திற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. அங்கிருந்த நர்ஸிடம், 'என்ன உங்க டாக்டர் ஒரு பேஷண்டை இத்தனை நேரம் பார்க்கிறார்? எத்தனை நேரம் காத்திருப்பது? பேப்பரை கிழித்துப் போட்டு நாங்கள் போகப் போகிறோம்' என்று சூடாக சொன்னபோது, அந்த நர்ஸ் 'இப்ப டாக்டர் உங்களை பார்ப்பார்' என்று சொல்லி, அழைத்துப் போனார்கள். அந்த டாக்டரை பார்த்தவுடன், அவர் பேசினதைக் கேட்டவுடன், ஏன் அப்படி கத்தினோம் என்று தோன்றியது. அத்தனை மெதுவாக, பொறுமையாக அந்த டாக்டர் பேசினார். நல்ல நண்பராக மாறினார்.

நம்மால் எதற்கும் பொறுமையாக காத்திருக்க முடிவதில்லை. டிராபிக் ஜாமில் வண்டியை ஓட்டும்போது, சிக்னலில் எத்தனை நேரம் காத்திருப்பது என்று முனகல்களும், முறுமுறுக்காமலும் நாம் இருப்பதில்லை. வீட்டில் சாப்பாடு கொஞ்சம் லேட்டானால் நம்மால் சும்மா இருக்க முடிவதில்லை. பொறுமை என்பதை இக்காலத்தில் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துக் கொண்டிருக்கிறான் என்பதே உண்மை.

நம்முடைய தேவனின் தெய்வீக குணாதிசயங்களில் ஒன்றாக நீடிய பொறுமை விளங்குகிறது. பாவிகளாயிருக்கையில் நம்மேல் அவர் பொறுமையுள்ளவராக இருந்தாரே! உலகம் சென்றுக் கொண்டிருக்கிற பாதையை நோக்கினால், எத்தனை அக்கிரமங்கள், என்ன பயங்கரமான செயல்கள்! நம்மால் அதைப் பார்த்து,  பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. எத்தனையோ முறை சொல்கிறோம், ஏன் ஆண்டவர் இவர்களை எல்லாம் விட்டு வைத்திருக்கிறார் என்று! ஆனால் அவையெல்லாவற்றையும் காண்கின்ற தேவன் அப்படி அக்கிரமம் செய்கிறவர்களையும் அழித்து விடாதபடி பொறுமையாயிருக்கிறாரே! அது நீடியப் பொறுமையல்லவா!

'தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்' (2 பேதுரு 3:9) என்று வேதம் கூறுகிறது. தேவன் அத்தனை பொறுமையுள்ளவராயிருந்தார் என்றால் நாம் எத்தனை பொறுமையுள்ளவர்களாக இருக்க வேண்டும்!

வேதத்தில் பொறுமையாயிருந்த ஆதி விசுவாசிகள் பலரைக் காண முடியும்! மோசே, ஆபிரகாம், யோசேப்பு, யோபு என்று பட்டியலை அடுக்கிக் கொண்டே போக முடியும்.. அவர்கள் பொறுமையாய் இருந்ததைப் போல புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

நம்முடைய தேவைகளில், தேவன் ஏன் என் ஜெபத்திற்கு பதில் கொடுக்கவில்லை என்று பொறுமையை இழந்துப் போகாமல், அவருடைய நேரத்திற்காக நீடிய பொறுமையோடு காத்திருக்க பழகிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் 'கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்' (சங்கீதம் 40:1) என்று நாமும் சொல்ல முடியும்.

எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக இருக்க ஆவியானவரின் பெலன் தேவை. அவர் கொடுக்கிற நீடிய பொறுமையாகிய கனியின் சுளை நம் வாழ்வில் இருக்கும்போது 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்கிற பழமொழியின்படி வெற்றி மேல் வெற்றி நம்மை வந்தடையும் என்பதி;ல் சந்தேகமேயில்லை.

'நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே' (யாக்கோபு 5:8) ஆமென் அல்லேலூயா!
நன்றி-அனுதின மன்னா

Wednesday, 29 October 2014

ஆவியின் கனியோ.. சந்தோஷம் பாகம்-3

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. - (கலாத்தியர் 5:22-23)

இரண்டாம் சுளை சந்தோஷம்:

சந்தோஷம் என்றதும், நம் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்திருப்பதை நாம் நினைக்கிறோம். உலகத்தில் சந்தோஷம் தருபவை எத்தனையோ இருக்கின்றன. பூக்களை பார்க்கும்போது, சிறு குழந்தைகள் நடப்பதை, பேசுவதை பார்க்கும்போது, சூரிய உதயத்தையும், முழு நிலாவையும் பார்க்கும்போது என்று நம் மனம் பூரிப்படைகிறது. நம் பிள்ளைகள் நல்ல மார்க் வாங்கி வரும்போது ஒரு சந்தோஷம், நாம் செய்த ஒரு காரியத்தை மற்றவர்கள் பாராட்டும்போது ஒரு சந்தோஷம் என்று சொல்லிக் கொண்டே போகலாம்... ஆனால் எதுவும் நிரந்தரமானது இல்லை.

இத்தனை சந்தோஷங்கள் இருந்தும் வாழ்க்கை சில வேளைகளில் நமக்கு தருவது, வெறுமையும், விரக்தியும், கவலையும், கண்ணீரும்தான். உலகத்திலேயே எப்போதும் சந்தோஷமாயிருக்கிற மனிதன் ஒருவனும் இல்லை. ஒருவேளை மனநிலை சரியில்லாதிருந்தால் அவன் அந்த நிலைமையில் இருக்கக் கூடும்.

வேதத்திலும் நாம் சந்தோஷத்தைக் குறித்து அநேக வார்த்தைகள் இருப்பதைக் காணலாம். மகிழ்ச்சி, சந்தோஷம், ஆனந்தம், களிகூருதல் என்று நான்கு வார்த்தைகள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 'நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்' (சங்கீதம் 68:3). நீதிமான்கள்தான் இந்த நான்கு வகையான சந்தோஷமும் அடைவார்கள் என்று வேதம் கூறுகிறது.

'கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்' (பிலிப்பியர் 4:4) என்று பவுல் அப்போஸ்தலன் கூறுகிறார். அவர் எந்த நிலையிலிருந்து அப்படி கூறுகிறார் என்றால் எல்லாம் நன்றாக, மனரம்மியமாக இருந்தபோதல்ல, சிறையில் இருந்துக் கொண்டுதான் இந்த கடிதத்தை அவர் எழுதினார். அவர் சிறையில் இருந்தபோதும், அவர் மனம் சோர்ந்துப் போய் உட்கார்ந்து விடவில்லை, 'பாருங்கள் நான் கர்த்தருக்காக பாடுகள் பட்டுக் கொண்டிருக்கிறேன். சிறையில் வாடிக் கொண்டிருக்கிறேன்' என்று முறுமுறுத்துக் கொண்டு கடிதத்தை எழுதவில்லை, மாறாக வெளியில் இருக்கும் மற்றவர்களை சிறையில் இருந்துக் கொண்டே உற்சாகப்படுத்தினார். கர்த்தருக்குள் எப்போதும் சந்தோஷமாக இருங்கள் என்று உற்சாகப்படுத்தினார். என்ன ஒரு அற்புதமான கர்த்தருடைய அப்போஸ்தலன் அவர்!

பிரியமானவர்களே, நம் வாழ்வில் துக்கமான, துயரமான, தாங்க முடியாத பாரங்கள் அழுத்தும்போது, கண்ணீர் வடிப்பதும், இதிலிருந்து என்னை விடுவிப்பவர் யார் என்று கதறுவதும் சாதாரண மனிதனுடைய நிலைமையாகும். ஆனால் கர்த்தருக்குள் இருப்பவர்கள் அவர் கொடுக்கிற, ஆவியானவரால் உண்டாகிற சந்தோஷத்தால் நிறைந்தவர்களாக, எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும், அவற்றை தாங்கக்கூடிய, அவற்றால் சோர்ந்துப் போய் விடாமல், கர்த்தர் மேல் விசுவாசம் வைத்து, சந்தோஷமாக இருக்க முடியும்.

அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து, அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப்பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்' (அப்போஸ்தலர் 16:23-25). இந்த வசனங்களை பார்க்கும்போது, பவுலும் சீலாவும் பிசாசு பிடித்திருந்த ஒரு பெண்ணை சுகப்படுத்தினதால் அவள் மூலம் அவளுடைய எஜமானர்களுக்கு கிடைத்த வருமானம் போய் விட்டது என்று, அவர்கள், பவுல், சீலாவின்மேல் பொய்யாய் குற்றம் சாட்டி, அநேக அடிகளை அடித்து, சிறையில் அதுவும் உள்ளே இருக்கும் இருண்ட இடத்தில் காவலில் வைத்து, கால்களை தொழுமரத்தில் கட்டி வைத்திருந்தார்கள்.

இந்த நிலையிலும், அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள் என்று வேதம் கூறுகிறது. யார் பாடலை பாட முடியும்? சோகமாய், உலகத்தை வெறுத்தவர்கள் யாரும் எனக்கில்லை என்று அழுது வடிந்து பாடுவார்கள். இல்லையென்றால் சந்தோஷமாய் இருப்பவர்கள் பாடுவார்கள். பவுலும் சீலாவும் அழுது வடிகிற பாடலை அல்ல, தேவனை துதித்துப் பாடினார்கள் என்று பார்க்கிறோம். அப்படியென்றால் ஆவியானவர் கொடுக்கிற, எந்த சூழ்நிலையிலும் மாறாத சந்தோஷத்தினால் நிறைந்தவர்களாக அவர்கள் உள்ளம் நிறைந்திருந்தபடியால் அவர்கள் தேவனை துதித்துப் பாடினார்கள். அல்லேலூயா!

நம்மைப் போல மனிதனாக இருந்த பவுலினால் பயங்கரமான சூழ்நிலையிலும் சந்தோஷமாயிருக்க முடியுமென்றால், அவருக்குள் இருந்த ஆவியானவர் அவரை தேற்றி, திடப்படுத்தி, சந்தோஷத்தினால் நிறைத்திருந்தார். நாமும் நம் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள், போராட்டங்களில் சோர்ந்துப் போகாமல், சந்தோஷமாய் அவற்றை சந்தித்து, கர்த்தருக்குள் களிகூருவோமா! ஆவியின் இரண்டாம் சுளையாகிய சந்தோஷத்தினால் நாம் எப்போதும் நிரம்பியிருப்போமா? 'நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்தசந்தோஷமடைவார்கள்'

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Tuesday, 28 October 2014

ஆவியின் கனியோ அன்பு...பாகம் 2

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. -(கலாத்தியர் 5:22-23).
முதலாம் சுளை அன்பு:


அன்பு என்ற சொல்லுக்கு நான்கு சொற்கள் கிரேக்க மொழியிலே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பிலியோ என்பது சிநேகிதருக்குள் காண்பிக்கப்படும் அன்பு. ஈரோஸ் என்பது கணவன் மனைவியிடைய காண்பிக்கப்படும் அன்பு. ஸ்டார்க்கே என்பது குடும்பத்தில் உறவினர்கள் மத்தியில் காண்பிக்கப்படும் அன்பு. அகப்பே என்பது தெய்வீக அன்பு என்பதாகும். கர்த்தர் நம்மிடத்தில் வெளிப்படுத்தியது அகப்பே அன்பாகும்.

தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று வேதம் நமக்கு கூறுகிறது. அந்த அன்பினாலேதான் 'தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்' (யோவான் 3:16) என்று அவருடைய அளவில்லாத அன்பை காண்கிறோம்.

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:8). கிறிஸ்து நம் மேல் வைத்த அன்பினாலே தம் ஜீவனையும் பாராமல், பாடுகளையும் வேதனையையும் சகித்து, சிலுவையிலே நமக்காக மரித்தார். மீண்டும் உயிர்த்து, நமக்காக ஒரு வீட்டை பரலோகத்தில் ஆயத்தம் செய்ய போயிருக்கிறார். நம்மை அழைத்துச் செல்ல மீண்டும் வருவார். ஆமென்.
ஆவியானவரின் கனியாகிய அன்பு இப்படி பிதா, குமாரன், பரிசுத்தஆவியானவராகிய திரியேக தேவன் நம்மேல் அன்பு வைத்திருக்கும்போது, நாமும் அவர் மேல் அன்புக்கூர கடனாளிகளாயிருக்கிறோம். அவரிடத்தில் இருந்து பெற்ற அன்பை மற்றவர்களுக்கு காண்பிக்கும்போது, மற்ற அன்புகளைவிட தெய்வீக அன்பை காண்பிக்கும்போது தேவன் அங்கு மகிமைப்படுகிறார்.

கார்லும், ஈடித்தும் கணவன் மனைவியாக அமெரிக்காவில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு பிள்ளையில்லை. ஆனால் இருவரும் ஒருவரிலொருவர் அன்பு நிறைந்தவர்களாக, 23 வருடங்களாக குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். கார்ல் அரசாங்கத்தில் வேலையில் இருந்தபடியால், அவருக்கு வேறு இடத்திற்கு சென்று அலுவலை முடித்து வரும் நிலைமை இருந்து வந்தது.

ஒருமுறை அவருக்கு ஜப்பானில் உள்ள ஒக்கினாவா என்னுமிடத்தில் போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதினால் அங்கு சென்ற அவரிடம் இருந்து கடிதம் வருவது திடீரென்று குறைந்தது. முன்பெல்லாம் வேறு இடம் சென்றால் அடிக்கடி கடிதம் எழுதுபவர், இப்போது குறைத்துக் கொண்டாரே, ஒருவேளை வேலைப்பளு அதிகமாயிருக்கும் என்று ஈடித் நினைத்துக் கொண்டார்கள்.

ஒருநாள் அவரிடமிருந்து கடிதம் வந்தது, 'நம் திருமண வாழ்வு முடிந்து விட்டது' என்று அதில் எழுதப்பட்டிருந்தது. அவர் அங்கு ஐக்கோ என்னும் பத்தொன்பதே வயது நிரம்பிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வந்தது. பெரிய இடியைப் போன்று இந்த செய்தி வந்தபோதும், ஈடித் கர்த்தரை விசுவாசிக்கிற சகோதரியாக இருந்தபடியால், அவர்கள் மேல் கோபப்படாமல், பரிதாபப்பட்டார்கள். எப்போதும் தன்னையே சார்ந்து ஜீவிக்கிற தன் கணவன் இப்போது என்ன செய்வார் என்று.

கார்லிடமிருந்து அவர்களுக்கு இரண்டு குழந்தை பிறந்ததாக கடிதம் வந்தது. இந்த சகோதரி அந்த பிள்ளைகளுக்கு பரிசுகள் வாங்கி அனுப்பினார்கள். சிறிது நாட்கள் கழித்து அவர்களுக்கு கடிதம் வந்தது, நுரையீரல் கேன்சரினால் கார்ல் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், பணம் கட்டுவதற்கு இல்லாமல் அவதிப்படுவதாகவும் வந்த செய்தியைக் கேட்டு, பணத்தையும் அனுப்பி வைத்தார்கள்.

சிகிச்சை பலனளிக்காமல் கார்ல் இறந்தப்பின் ஈடித் ஐக்கோவின் இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைப்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கச் சொல்லி ஐக்கோவிற்கு கடிதம் எழுதினார்கள். ஐக்கோவிற்கு கஷ்டமாயிருந்தாலும், பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து, அனுப்பி வைத்தாள். இந்த பிள்ளைகளை கஷ்டப்பட்டு படிக்க வைத்தபோது, ஈடித் தனக்கு வயதாகிக் கொண்டே போவதால், பிள்ளைகளை கவனிப்பதற்கு அவர்களின் தாய் இருந்தால் நலமாக இருக்கும் என்று நினைத்தார்கள். இவர்களின் அற்புதமான மன்னிப்பின் கதையை செய்தித்தாள்கள் வெளியிட்டிருந்தபடியால், அது அரசாங்கம் வரை தெரிவிக்கப்பட்டு, ஜப்பானிலிருந்து அமெரிக்கா வர முடியாதிருந்த ஐக்கோவிற்காக விசேஷித்த முறையில் ஒரு சட்டம் இயற்றப்பட்டு, ஐக்கோ அமெரிக்கா வந்து சேர்ந்தாள்.

விமான நிலையம் வந்து சேர்ந்த ஐக்கோவை 'நீதான் என் திருமண வாழ்வை நாசமடைய வைத்துவிட்டாய். நீ என்னுடைய வாழ்க்கை, என் சுகம், என் சம்பாத்தியம் எல்லாவற்றையும் நாசப்படுத்தி விட்டாய்' என்று கோபப்பட காரணங்கள் இருந்தாலும், எந்தவித கோபமும் கொள்ளாமல், அந்த பெண்ணை கட்டி அணைத்து முத்தமிட்டு, ஏற்றுக் கொண்டார்கள். அந்தப்பெண் அவர்களின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்.

நிபந்தனை அற்ற அன்பின் உதாரணமாக இந்த உண்மை சம்பவம் காணப்படுகிறது. கிறிஸ்து நம்மீது அன்பு வைக்க, நமக்காக ஜீவனை கொடுக்க எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை. தேவன் நம்மை அவருடைய பிள்ளைகளாக ஏற்றுக் கொள்ள எந்த நிபந்தனையையும் வைக்கவில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாமும் எந்த நிபந்தனையும் இல்லாதவர்களாக அவருடைய அன்பை மற்றவர்களுக்கு செலுத்தவேண்டும் என்பது அவருடைய எதிர்ப்பார்ப்பு. அப்படிப்பட்ட கனியை நாம் தரவேண்டும் என்றுதானே அவர் நம்மை ஏற்படுத்தினார்?

எந்த சூழ்நிலையிலும், எந்த பிரச்சனை நேரத்திலும், எந்த அமைதியற்ற இடத்திலும் நிபந்தனை அற்ற அன்பை வெளிப்படுத்துவோமா? அப்படியான அன்பை நாம் வெளிப்படுத்தும்போது, நம்மை காண்பவர்கள் நம்மில் கிறிஸ்துவை காண்பார்கள். அப்படிப்பட்டதான அன்பில் வளர தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் கிருபை செய்வாராக!

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Monday, 27 October 2014

ஆவியின் கனியோ...!

ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை -(கலாத்தியர் 5:22-23).

வேதத்தில் ஆவியின் கனி என்று ஒருமையில் சொல்லிவிட்டு, அதன்பின் ஒன்பது குணாதிசயங்களைக் குறித்து இந்த வசனம் விவரிக்கிறது. ஒரு கனியில் எப்படி இத்தனை கனிகள் இருக்க முடியும்? ஒரு ஆரஞ்சு சுளைக்குள் சுளைகள் இருப்பதுப் போல ஒரு பழத்திற்குள் இருக்கும் சுளைகளாக இந்த குணாதிசயங்கள் காணப்படுகிறது.

இதை கொடுப்பவர் ஒரே ஆவியானவர். அவர் ஆவிக்குரிய கனியை ஒருபுறமும், ஆவிக்குரிய வரங்களை ஒருபுறமும் கொடுக்கிறார். ஒரு பறவை பறப்பதற்கு எப்படி இரண்டு இறக்கைகள் தேவைப்படுகிறதோ அதுப்போல ஒரு பக்கம், ஆவியின் கனியும், மறுபுறம் ஆவியின் வரங்களும் நாம் கர்த்தருக்குள் வளர, அவரோடு உயர்ந்த அனுபவத்திற்குள் பறப்பதற்கு தேவையாக இருக்கிறது.

சிலருடைய வாழ்க்கையில் இயற்கையாகவே ஆவியின் கனி காணப்படலாம். மற்ற மதத்தினவரிடமும் இதுப் போன்ற கனி காணப்படலாம். ஆனால் ஆவியின் கனி என்பது பரிசுத்த ஆவியானர் நம்மில் ஊற்றப்பட்டு, கனிகளே இல்லாத ஒருவரின் வாழ்வில் இந்த ஒன்பது குணாதிசயங்களையும் வெளிப்படுவதே ஆகும்.

அநேகர் சாட்சி சொல்வதைக் கேட்டிருக்கிறேன். 'நான் வாலிப வயது வரை என் விருப்பம் போல நடந்தேன், ஒரு நாள் கர்த்தர் என்னை சந்தித்தார். அவருடைய பிள்ளையாய் என்னை மாற்றினார். அவர் என்னுள்ளத்தில் வந்தப்பின்பு என்னுடைய சுபாவம் மாறிற்று, கர்த்தருடைய குணாதிசயங்கள் என்னில் நிரம்பி, மற்றவர்களுக்கு அவற்றை வெளிப்படுத்த தேவன் கிருபை செய்தார்' என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆம், ஆவியானவர் நமக்குள் வரும்போது, நம்முடைய மாம்ச சுபாவங்களும், மாம்ச கிரியைகளும் அழிந்து, கர்த்தருடைய சுபாவங்களும், ஆவியானவரின் கிரியைகளும் நமக்குள்ளிருந்து வெளிப்பட ஆரம்பிக்கின்றன. அப்படி வெளிப்படவில்லை என்றால் நம்முடைய இரட்சிப்பு சந்தேகத்திற்குரியதே!

'...நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்' (யோவான் 15:16) என்று இயேசுகிறிஸ்து கூறினாரல்லவா? ஆம் நாம் கனி கொடுக்க வேண்டும் என்றே தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். நம்மிடத்தில் தேவன் வந்து பார்க்கும்போது கனி இல்லாதிருந்தால் நம் நிலை பரிதாபத்திற்குரியதே!

சில நேரங்களில் 'என் கணவர் இப்படி இருக்கிறார், என் மனைவி இப்படி இருக்கிறாள், அவளிடத்தில், அவரிடத்தில் என் கனியை காட்டுவது என்பது ஒருபோதும் நடக்காத காரியம்' என்று நாம் நினைக்கிறோம். நாம் அந்த இடத்தில் கனிக் கொடுக்க வேண்டும் என்றே தேவன் நம்மிடத்தில் எதிர்ப்பார்க்கிறார். வேறு சிலர் 'நான் வேலை செய்யும் இடத்தில் உள்ளவர்கள் மிகவும் மோசமானவர்கள். அவர்களுக்கு என் கனியை நான் வெளிப்படுத்த முடியாது. அப்படி வெளிப்படுத்தினாலும் எல்லாமே வீண், அவர்கள் அதை புரிந்துக் கொள்ள மாட்டார்கள்' என்று நினைக்கிறோம். அவர்கள் மத்தியில் நாம் கொடுக்கும் கனியே மிகவும் சிறந்தது. அந்த கனியே பலன் கொடுக்கக்கூடியது.

தேவன் நம்மை ஏற்படுத்தினதின் ஒரு காரணம் நாம் கனிகொடுக்கும்படிககும், அது நிலைத்திருக்கும்படிக்கும் என்று நாம் அறிந்துக் கொண்டோம். அதினால் அது எத்தனை முக்கியமானது என்றும் அறிவோம். ஆகையால் நாளையிலிருந்து ஆவியின் கனியாகிய ஒன்பது பலரச, பரவச சுவைகளால் நிரம்பியிருக்கும் சுளைகளை ஒவ்வொரு நாளும் ஒரு சுளையாக அனுதின மன்னாவில் ருசித்துப் பார்த்து, நம் வாழ்வில் அந்த சுவையான சுளைகள் இருக்கிறதா என்று சோதித்து, கனி கொடுக்கிறவர்களாக நாம் மாறுவோமாக!
ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Saturday, 25 October 2014

இயேசுவோடு தொடர்புடைய வாழ்க்கை - பேதுருவாய் மாறிய சீமோன்

இயேசு சீடர்களின் கால்களை கழுவியத்தின் மூலமாக, சீடர்கள் தாழ்மையை கற்றுகொண்டனர். பின்னர் இயேசு தாம் சிலுவையில் மரிக்க வேண்டிய தருணம் வந்தமையால், "பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன், நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று" என்றார். பேதுரு அவரை நோக்கி: "ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன்" என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: "எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" என்றார்.

பின்னர் இயேசு சீடருடன் கெத்சமனே என்னப்பட்ட இடத்திற்குவந்து, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், "என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள்" என்று சொன்னார். இயேசு வியாகுலப்பட்டு ஜெபிக்கையில் சீடர்கள் தூங்கினார்கள். இயேசு பேதுருவை நோக்கி "சீமோனே, நித்திரை பண்ணுகிறாயா? ஒரு மணி நேரம் நீ விழித்திருக்கக்கூடாதா?" என்றார். எப்பொழுதெல்லாம் பேதுரு தவறு செய்தாரோ அப்பொழுதெல்லாம் இயேசு பேதுருவை "சீமோன்" என்று பழையபெயரை சொல்லி எச்சரித்தார்.

சிறிது நேரத்திற்குள்ளாக காட்டி கொடுக்கும் யூதாஸ் உடன் ஒரு கூட்டம் வந்து இயேசுவைப் பிடித்தனர். பேதுரு தன்னுடைய உரையிலிருந்து கத்தியை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்கரனாகிய மல்கூசின் வலது காதை வெட்டினார். இயேசு அந்த கதை ஒட்டி குணப்படுத்தினார். பேதுரு காட்டிய சிறிது நேர துணிவின் விளைவு அவரை கோழைத்தனத்திற்க்கு வழி காட்டியது. முதலில் பேதுரு இயேசுவை தூரத்தில் பின் தொடர்ந்து பிரதான ஆசாரியன் அரண்மனை முற்றம் வரை சென்றார்.
யோவானைப்போல இயேசுவின் அருகே நிற்க வேண்டியவர், இப்படி வெளிய நின்ற கூடத்தில் ஒருவறாய் குளிர் காய்ந்து கொண்டு இயேசுவையும் மூன்று முறை மறுதலித்து சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினார். உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதார். இயேசுவின் சிலுவை மரணமும், தமது இறுதி மறுதளிப்பும் பேதுருவை மிகவும் பாதித்தது. "அழுகை அழுக்கை கழுவும்" என்பது நல்மொழி. மனம்கசந்து அழுதமையால் அழுக்கு நீங்கி சுத்தமானார் பேதுரு.

இயேசு உயிர்த்தெழுந்த நாளன்று காலையில், விழுந்து போன ஆவியுள்ள பேதுருவுக்கு ஒரு உற்சாகமான வார்த்தை காத்திருந்தது. ஒரு தேவ தூதன் கல்லறையிலிருந்து, "அவருடைய சீடரிடத்திற்கும், பேதுருவினிடத்திற்கும் போய் சொல்லுங்கள்" என்றான் (மாற்கு 16:6-7). தனிப்பட்ட பேதுருவின் பெயரைக் கூறியதின் மூலம் இயேசு தன்னை மன்னித்தார் என்று உற்சாகம் கொண்டு கல்லறைக்குள் ஓடினார். இயேசு மரணத்தை வென்று உயிர்த்தெழுந்தார் என்பதை உணர்ந்து கொண்டார். பின்னர் சாயங்கால வேளையில் சீடர்களுக்கு காட்சி தந்தார். பின்பு ஒருநாள் ஏழு சீடர்கள் பேதுருவின் தலைமயில் மீன்பிடிக்க கலிலேயா கடலுக்குள் சென்றனர்.

"விடியற்காலமானபோது, இயேசு கலிலேயா கடலின் கரையிலே கரி நெருப்பு போட்டு அப்பதொடும் மீன்களோடும் காத்து நின்றார். அவரை இயேசு என்று, சீடர்கள் தாமதமாகவே அறிந்து கொண்டார்கள். இயேசு, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். அவர்கள் போஜனம்பண்ணின பின்பு, இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்று மூன்று முறை கேட்டார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்" என்றான். இயேசு பேதுருவை நோக்கி: "என் ஆடுகளை மேய்ப்பாயாக" என்று சொல்லி திருசைபையை பேதுருவிடம் இறை ஒப்படைப்பு செய்தார். இவ்வளவு தடுமாற்றம் மற்றும் பின்மாற்றங்களுக்கு பின்பதாக சீமோன் இப்பொழுது பேதுருவாய் (கேபாவாய்) பாறை போன்று திடமுள்ளவராய் மாறியிருந்தார்.

பேதுருவின் வாழ்க்கை வரலாறு நாளைய தினம் தொடரும்..!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Friday, 24 October 2014

காலை நேரம் இன்ப ஜெப தியானமே

அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை  எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். - (சங்கீதம் 143:8).
.
அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அமெரிகாவின் 16ஆவது ஜனாதிபதியாக இருந்தவர் இவர். அந்நாட்களில் ஒரு நாள் அதிகாலையில் மூத்த அரசு அலுவலர்கள் அவரை பார்த்து ஒரு முக்கியமான காரியத்தில் அவருடைய ஆலோசனையை பெறும்படி சென்றிருந்தார்கள். அவரது அறையின் அருகில் சென்ற போது அவர் யாருடனோ பேசி கொண்டிருந்தது போல் பேச்சு குரல் கேட்டது, ஆகவே இவரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் அவர் வரும் வரை பக்கத்து அறையில் காத்திருந்தனர்.
.
வெகு நேரம் கழித்து ஆபிரகாம் லிங்கன் வெளியே வந்தார். 'ஐயா நாங்கள் காலை 5 மணிக்கே வந்து விட்டோம். நீங்கள் யாருடனோ பேசி கொணடிருந்தீர்கள். ஆகவே காத்திருந்தோம்' என்றனர். 'வேறு யாருமல்ல, நான் ஆண்டவரோடு பேசி கொண்டிருந்தேன்' என்று ஆபிரகாம் சொன்னவுடன் அவாகளுக்கொல்லாம் பெரிய ஆச்சரியம்! அவர்களது வியப்பை கண்ட ஆபிரகாம் சிறிது விளக்கம் அளித்தார்.  'நான் சிறு பையனாக இருககும் போது காடுகளில் விறகு வெட்டி ஜீவனம் செய்து வந்தேன். என் பாட்டி தான் என்னை பராமரித்து வந்தார்கள். அவர்கள் எனக்கொரு வேதத்தை கொடுத்து ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் எழுந்தவுடன் அதை தியானிக்க வேண்டும் என்றும், ஆண்டவருடன் மாத்திரமே முதலில் பேச வேண்டும் என்றும் கூறினார்கள். அந்த பாடத்தை இன்னும் விட்டு விடாமல், முதலில் ஆண்டவருடன் நான் பேசுகிறேன்' என்றார்.
.
நாம் முதலில் யாரோடு பேசுகிறோம்? அன்றைய செய்தி தாளுடனா? அல்லது தொலைகாட்சி பெட்டியுடனா, அல்லது மற்றவர்களுடனா? யாருடன் முதலில் பேசுவீர்கள்? அதிகாலையில் எழும்பும் பழக்கம் உண்டா? தொலைபேசி அழைப்போ, அல்லது யாரோ எழுப்பிதான் நீங்கள் எழுவதுண்டா? இவர்கள் உங்களை எழுப்புவதற்கு முனபே தேவனோடு உறவாடி, அவருடைய பிரசன்னத்தில் மகிழ்ந்திருப்பீர்களானால் தூங்கி வழிந்த முகத்தோடு அல்ல, புன்சிரிப்போடு எழுந்தரிப்பீர்கள். யாரையும் புன்சிரிப்போடு சந்திப்பீர்கள். அந்த நாளின் எல்லா காரியங்களிலும் நிதானத்தோடு யோசித்து செயல்படுவீர்கள். அன்று வரும் பிரச்சனைகளினால் பதற்றப்பட்டு உங்க்ள சமாதானத்த இழக்க மாட்டீர்கள். கர்த்தரை நம்பி அவர் பொறுப்பில் விட்டு விடுவீர்கள்.
.
ஆம், அதிகாலை நேரத்தை அன்பருடன் செலவிடுவது ஒரு இன்பமான வேளை. 'என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது. என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும் படிக்கும், அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன்' (நீதிமொழிக்ள 8:17-21). இந்த இடத்தில் இயேசுகிறிஸ்துவைப்பற்றி கூறப்பபட்டுள்ளது. அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள் என்றுஇயேசுகிறஸ்து கூறுகிறார். அப்படி அவரை அதிகாலையில் தேடி கண்டடையும்போது, அவர்களை ஆசீர்வாதத்தின் ஊற்றுகளாக தேவன் மாற்றுகிறார். ஐசுவரியமும் கனமும், நிலையான பொருளும், நீதியும் அவர் நமக்கு கொடுத்து, நம்முடைய களஞ்சியங்களை நிரப்பி, நீதியின் பாதைகளில் நம்மை நடத்துகிறார்.
.
உலக மனிதர்கள் யாருடனும் பேசும் முன்பே உலகை படைத்த தேவனுடன் பேசுவது எத்தனை பாக்கியம்! அந்த நாளை அவருடைய பொற் பாதத்தில் சமர்ப்பித்து, அந்த நாளுக்குரிய கிருபைகளை பெற்று கொண்டு ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்க தேவன் தாமே நம் ஒவ்வொருக்கும் கிருபை தருவாராக!
 ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Wednesday, 22 October 2014

நீ வா.. நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன்

எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார். அப்போஸ்தலர் 7:34

சென்ற மாதத்தில் வெள்ளக்கோயில் பகுதியில் இருக்கும் காங்கயம் என்ற கிராமத்திற்கு இயேசுவின் அன்பை சொல்லும் படியாய் குழுவாக சென்றிருந்தோம். வயதான பாட்டி ஒருவரிடம் இயேசுவின் அன்பை சொல்லும் பொழுது அவர் தனது உடலில் இருக்கும் பெலவீனங்களை என்னிடம் கூறினார். உங்களுக்காக நான் ஜெபிக்கட்டும்மா என்று நான் கேட்டேன். உடனே அவர் ஜெபம் என்றால் என்ன என்று கேட்டார்கள். அப்பொழுது நான் சொன்னேன் கடவுளிடம் வேண்டுவது என்று சொன்னேன். சற்று கலக்கம் அடைந்த அந்த பாட்டி அதற்க்கு காசு எதுவும் கொடுக்க வேண்டுமா? என்று கேட்டார்கள். அதேல்லாம தேவையில்லை என்று சொல்லி அவருக்காக ஜெபித்துவிட்டு வந்தேன். இயேசு என்றால் ஒரு தெய்வம் என்பதை மட்டும் தான் அநேக கிராம மக்கள் அறிந்திருகின்றாகள். அவர்கள் இன்றளவும் எகிப்து எனும் பாவ உலகத்தில் சிக்கி, உபத்திரவங்கள் மத்தியில் பெருமூச்சோடு வாழ்கின்றாகள். அவர்களை விடுவிக்கும் படி இயேசு ஆவலுடன் இருகின்றார். நீங்கள் பிறருக்கு இயேசுவை அறிவித்து அவர்களை விடுவிக்க முன்வந்தால், முதலாவது உங்களுடைய வாழ்க்கையில் பூரண விடுதலை கிடைக்கும். நீங்கள் அநேக நாட்கள் ஜெபித்தும் விடுதலை இன்றி தவிகின்றீர்களா? நீங்கள் விடுதலை பெறுவதோடு மட்டுமன்றி நீங்கள் அநேகரை விடுவிக்கப் போகின்றீர்கள்.

"சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுகிறார் என்றார்" (ஆகாய் 2:23). ஊழியம் என்றால் அழிகின்ற ஆத்துமாக்களுக்காக பாரத்தோடு ஜெபித்து வேதத்தில் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் அன்பை பிறருக்கு சொல்வது ஆகும். இதை செய்வதற்கு உங்கள் உள்ளத்தில் அழிகின்ற மக்களைக் குறித்த பாரம் இருந்தால் போதும். நீங்கள் கண்ணீரோடு ஜெபிக்க தொடங்குவீர்கள். பின்னர் கர்த்தர் தாம் விடுவிக்க சித்தம் கொண்டுள்ள மக்களை உங்களிடம் கொண்டு வருவார். இயேசுவே அநேக மக்களை மீட்கும் படியாக ஊழியம் செய்திருக்கின்றார் (மாற்கு 10:45) என்றால் நாமும் அவ்வாறு ஊழியம் செய்ய வேண்டியது எவ்வளவு நிச்சயம்.

ஆமான் என்ற வஞ்சகன் தீட்டிய சதித்திட்டத்தால் யூத இனமே அழியும் நிலை வந்தது. எஸ்தரிடம் மொர்தெகாய் எச்சரிக்கின்றார், 'நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே" (எஸ்தர் 4:14). ஒருவேளை நீங்கள் இராஜ மேன்மை கிடைத்தது என்று சந்தோஷமாக மற்றவர்களை மறந்து ஜீவித்தால், யூதருக்கு இரட்சிப்பு வேறு இடத்திலிருந்து கர்த்தர் அனுப்புவார். அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்களே? ஒரு வினாடி சித்திக்க கூடாதா? அன்றைக்கு எஸ்தர் தன் ஜீவன் போனாலும் பரவாயில்லை என்று மக்களுக்காக ஜெபித்து செயல்பட்டபடியால், ஆமானின் சதி திட்டத்திலிருந்து யூத ஜனங்களுக்கு விடுதலை கிடைத்தது.

இயேசுவும் மக்களின் உபத்திரவத்தை பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்குகின்றார்; ஆகையால், நீ வா நான் உன்னை அனுப்புவேன் (அப் 7:34) என்று இயேசு உங்களை அவருடைய பணியை செய்யும் படியாக அழைகின்றார். நீங்கள் அழைப்பை ஏற்று அழிகின்ற மக்களுக்காக பாரத்தோடு ஜெபித்து, இயேசுவின் அன்பை சொல்ல உங்களை அர்ப்பணித்தால், நீங்கள் இயேசுவின் கையிலே முத்திரை மோதிரமாக மாறுவீர்கள். ராஜாவின் கையிலே இருக்கும் முத்திரை மோதிரம் சகல அதிகாரத்திற்கும் வல்லமைக்கும் உரியது. அதே போல கர்த்தர் உங்களை மாற்றப் போகின்றார். நீங்கள் வசிக்கின்ற இடத்தில், குடும்பத்தில், சசமுதாயத்தில் இயேசுவுக்காக சாட்சியாக வாழ்ந்து, அவரை அறிவிக்கும்போது அழிந்து போகும் மக்கள் பாதுக்காக்கப்படுவார்கள். ஜெபித்து அர்ப்பணிபீர்களா?

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Thursday, 16 October 2014

கிறிஸ்த்துவின் அன்பிலே நிலைத்திருத்தல்






நமது தனிப்பட்ட ஜெபத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஏழு ஜெபகுறிப்புகளை குறித்து தியானித்து வருகின்றோம் (எபேசியர் 3: 15-19). முதல் மூன்று ஜெப விண்ணப்பங்களாகிய "உள்ளான மனுஷனில் வல்லமையாய் பலப்படுதல்", "கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருத்தல்", மற்றும் "நீங்கள் கிறிஸ்த்துவின் அன்பிலே வேரூன்ருவதைக்" குறித்து தியானித்தோம். இன்றைக்கு "நீங்கள் கிறிஸ்த்துவின் அன்பிலே நிலையாக நிற்க வேண்டும்" என்ற நான்காவது ஜெப விண்ணப்பத்தைக் குறித்து தியானிக்கலாம். ஒரு மரம் உருவாக விதையும், அது நிலைத்து நிற்க வேரும் மிகவும் அவசியம். வேத வசனம் விதையாகவும், நாம் இயேசுவின் மீது வைக்கும் அன்பு ஆணிவேர் போன்றும் இருகின்றது.

விதை:

இயேசு கூறிய உவமைகளில் மிகவும் முக்கியமானதாக காணப்படுவது மத்தேயு 13:23-ல் "நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும், முப்பதாகவும் பலன் தருவான்." என்ற உவமை. அட்டவது வசனத்தை கேட்டு அதன்படி வாழ தன்னை அர்ப்பணிக்கிற ஒவ்வொரு மனிதனும் நல்ல நிலத்தில் விழுந்த விதைக்கு ஒப்பாக இருக்கின்றான் என்று கூறுகிறார். அப்படியானால் வசனத்தை கேட்கின்ற, படிகின்ற ஒவ்வொரும் விதைக்கு ஒப்பானவர்கள்.

செடி:

நிலத்தில் விதைக்கப்பட்டுள்ள விதையானது எப்போது தன்மீது தண்ணீர் படும் நான் எப்பொழுது எனக்கு மேலிருக்கும் தடைகளை கடந்து செடியாய் மாறுவேன் என்று நிலத்திற்குள் ஏங்கிக்கொண்டிருக்கும். ஏசாயா 27:3-ல் கர்த்தர் சொல்கிறார் "கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்." தண்ணீர் என்பது பரிசுத்த ஆவியானவர் நம்மேல் அசைவாடுவதை குறிக்கின்றது. வசனத்தை கேட்டு விதையாக மாறிய நாம் பரிசுத்த ஆவியானவர் நம்மேல் பொழியும்படி தாகத்தோடு அவரிடம் கேட்க்க வேண்டும். தாகமுள்ளவன் மேல் தண்ணீரை ஊற்றுகிறவரல்லவா நம் கர்த்தர். அவ்வாறு அவர் நம்மேல் அவருடைய ஆவியை பொழியும் பொழுது விதையாக இருந்த நாம் செடியாக வளருகின்றோம்.

மரம்:

விதையானது தற்போது தனக்கு மேலிருந்த மணல்போன்ற தடைகளை எல்லாம் தகர்த்து செடியாய் வளர்ந்து விட்டது. தற்பொழுது இந்த செடிக்கு அநேக வகைகளில் ஆபத்து நேரிடும். நிலத்தில் நடந்து செல்பவர்களோ அல்லது அந்த வழியில் செல்லும் ஆடு, மாடு போன்ற மிருகங்களோ செடியினை மிதிக்ககூடும். ஏதாவது பறவைகள் கொத்தி அழிக்ககூடும். அல்லது பலவித பூச்சிகளினால் பாதிப்பு ஏற்ப்படும். இந்த சமயத்தில் செடியானது, தோட்டத்து எஜமான் தன்னை பாதுகாப்பார் என்று சொல்லி அவரையே முழுமையாக நம்பி வாழுகின்றது. தோட்டத்து எஜமான் ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வார். இப்படியாக செடியானது மரமாக வளருகின்றது. வசனத்தை கேட்டு விதையாகிய நாம், பரிசுத்த ஆவியானவரின் பொழிதலினால் செடியாக மாறி, கர்த்த்தர் இரவும் பகலும் நம்மை காத்தபடியால் மரமாகின்றோம்.

கனியுள்ள மரம்:

விதையாக இருந்த நம்மை செடியாக மாற்றி, இரவும் பகலும் கண்ணின் மணி போல காத்து, நம்மை மரமாக மாற்றிய இயேசு நம்மிடத்தில் இருந்து ஆவியின் கனிகளான "அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்" (கலாத்தியர் 5:22-23)போன்ற கனிகளை எதிர்பார்கின்றார். நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும் (மத்தேயு 7:18-20) என்று நம்மை எச்சரிக்கவும் செய்கின்றார். மரம் என்றைக்கும் தனது கனியை தானே சாப்பிடுவதில்லை. அதின் கனிகள் பிறருக்கு பயனுள்ளதாகவே இருக்கின்றது. ஆவியின் கனி அன்பு என்றவுடன் நாம் அன்பாக இருந்து கிறிஸ்துவின் அன்பை சுவைப்பது அல்ல. கிறிஸ்துவின் பிறருக்கு சொல்ல வேண்டும். அதுபோல தான் ஒன்பது கனிகளையும் நாம் சுவைத்து இன்பமாய் வாழ்வதற்கு அல்ல. அதை கிறிஸ்துவை அறியாத ஜனங்களுக்கு கொடுத்து, கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவதர்க்கே.

ஒரு நிமிடம் நம்மை நாமே நிதானித்து பார்ப்போம். நாம் ஒருவேளை வேதத்தை மட்டும் வாசிப்பவர்களாக இருந்தால் விதையாகவே உள்ளோம். சபை ஆராதனைளும், மற்றும் சிறப்பு கூட்டங்களில் மட்டும் ஆவியில் நிறைபவர்களாக இருந்தால் நாம் செடியாக இருக்கின்றோம். அனுதினமும் வேதம் வாசித்து, எல்லா காவலோடும் இருதயத்தை காத்து, ஆவியில் நிறைந்து ஜெபித்தால் நாம் மரமாக உள்ளோம். அனுதினமும் வேதம் வாசித்து, ஆவியில் நிறைந்து ஜெபிப்பதோடு அல்லாமல் நாம் ருசித்த கிறிஸ்த்துவின் அன்பை பிறருக்கு சொல்லும் பொழுது நாம் நமது கனியை பிறருக்கு கொடுப்பவர்களாக உள்ளோம். இயேசு கிறிஸ்து "இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன் என்றார். மறுநாள் காலையிலே சீஷர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள் (மாற்கு 11:13-20). அத்திமரம் யூதர்களின் அரசியல் மேன்மையை குறிகின்றது. நீங்கள் கனி கொடுக்கும் மரமாக வாழவில்லை என்றால் இயேசுவை அப்பா என்று கூப்பிடும் மேன்மையான இடத்தில் இருந்து தள்ளப்படுவீர்கள். நீங்கள் வேத வசனத்தை ஏற்றுக்கொண்டு கனிகொடுக்கும் பொழுது, கண்ணீரும் கவலையும் மாறி உங்கள் வாழ்க்கை செழிப்புள்ளதாக மாறும்.



கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்