Monday, 30 June 2014

நன்மைகளை மறவாதிருப்போம்

'நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும்... உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக' -(உபாகமம் 8:12,13,18).

யூத் வித் எ மிஷன் (YWAM) என்பது வாலிபர்கள் மூலம் சுவிசேஷத்தை அறிவிக்கும் ஒரு மிஷனெரி ஸ்தாபனமாகும். இதன் ஸ்தாபகர் லாரன் கன்னிங்ஹாம் என்ற தேவ மனிதர் உலகெங்கும் சுவிசேஷம் அறிவிக்கவும், தேவையுள்ள இடங்களில் மருத்துவ உதவிகள் மூலம் கிறிஸ்துவின் அன்பை வெளிபபடுத்தவும், புது வழிகளை கையாள ஜெபித்துக் கொண்டிருந்த போது தேவன் கப்பல் ஒன்றை வாங்கும்படி அவரை வழிநடத்தினார்.

இந்த பெரிய திட்டத்தில் ஒவ்வொரு நாளும் தேவனின் அற்புத கரம் இருப்பதை அவர்கள் கண்டனர். அந்த நேரத்தில் மாவோரி என்ற நேர்த்தியான கப்பல் மிகக்குறைந்த விலைக்கு வந்தது. அதற்கான அட்வான்ஸ் தொகை ரூபாய் 40 இலட்சத்தை இங்கிலாந்திலுள்ள ஒரே நபர் காணிக்கையாய் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் பல இலட்சங்கள் வந்து குவிந்தன. முப்பது நாட்களுக்குள் மீதி தொகையை கொடுத்து கப்பலை பெற்றுக் கொள்வதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஒப்பந்தம் முடிய ஒரு வாரம் இருக்கும்போது திடீரென காணிக்கை வருவது நின்றது. பிலிப்பைன்ஸிலுள்ள தொழிலதிபர் ஒருவர் மீதமுள்ள பணம் அனைத்தையும் தான் தருகிறேன் என முன்வந்தார். ஆனால் அந்த பணத்தை அந்த நாட்டிலிருந்து வெளி கொண்டு வர அநேக தடைகள் காணப்பட்டது. இந்த நேரத்தில் லாரன் கண்ணீரோடு தேவ சமுகத்தில் காத்திருந்தபோது ஒரு தரிசனத்தை கண்டார்.

அதில் லாரனும் அவர்களின் ஸ்தாபனத்தின் மற்ற தலைவர்களும்  நின்று கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கி, 'தேவன் கப்பல் வாங்க பணத்தை தந்து விட்டார். கப்பல் நமக்கு கிடைத்து விட்டது' என்று லாரன் கூறவும், அனைவரும் கைகளை அசைத்து ஆர்ப்பரித்து கொண்டாட துவங்கினர்.

அப்பொழுது அந்த அறையின் ஒரு ஓரத்தில் ஒருவர் நிற்கக் கண்டார். லாரன் அவரை நெருங்கி சென்று பார்த்தார். அவர் அழுது கொண்டிருந்தார். இன்னும் நெருங்கி சென்று உற்று பார்த்தபோது, அவர் இருதயம் நொறுங்கியது. அவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துதான். கப்பலை தருகிறவர் அவர், ஆனால் இங்கோ ஊழியத்தலைவர்கள் இயேசுவை மறந்து கப்பலை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்!

இந்ததரிசனத்தை ஊழியர்களிடம் பகிhந்து கொண்டபோது, ஒவ்வொருவருடைய இருதயமும் நொறுக்கப்பட்டு அழுது தேவனிடம் மன்றாடி மன்னிப்பு கேட்டனர். மாவோரி கப்பலை வாங்க முடியாமற் போனாலும் ஒன்பது ஆண்டுகளுக்குப்பின் 'உயிர்தெழுதல்' என்னும் அர்த்தம் கொண்ட 'அனஸ்டாஸிஸ்' என்ற கப்பலை வாங்கி இன்றும் அதில் ஊழியம் செய்து வருகின்றனர்.

'கிடைக்கப்பெற்ற பரிசில் கொடுத்தவரை மறந்து விடாதீர்கள்' என்றார் ஏமி கார்மைக்கேல் அம்மையார். தேவன் நாம் மகிழ்ந்திருக்கும்படியாக, அநேக நன்மைகளை கிருபையாக தருகிறார். பணம், பொருள், வீடு, ஆஸ்தி, வாகனங்கள, ஆவிக்குரிய அனுபவங்கள் என்று அனைத்தையும் தருகிறார். அநேக நேரங்களில் அவற்றை கொடுத்த தேவனை விட கொடுக்கப்பட்ட பொருளின் மேலேயே நம் சிந்தனை நின்று விடுகிறது. அதில் பெருமை கொண்டு அதை நமக்கு கொடுத்த தேவனை மறந்து விடுகிறோம்.

'நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்து வந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,... எச்சரிக்கையாயிருந்து,... உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக' (உபாகமம் 8:12,13,17,18) என்று வசனம் கூறுகிறது.

நம்முடைய தாழ்மையில் நம்மை நினைத்து, நம்மை தெரிந்துக் கொண்டு, நம்மை இம்மட்டும் உயர்த்திய தேவனை மறந்து போவோமானால் அது எத்தனை பயங்கரமாயிருக்கும்! அநேக வேளைகளில் நம்முடைய செயல்களினால் தேவ ஊழியர் லாரனைப் போல நாம் நம் தேவனை புறம்பே தள்ளிவிடுகிறோம். நமக்கு தேவன் கொடுத்த நன்மைகளை முன்பாக வைத்து தேவனை பின்பாக தள்ளிவிடுகிறோம். தேவன் எத்தனையாய் வேதனைப்படுவார்!

நம்மை உயர்த்திய தேவனை நாம் மறந்துபோகாதபடி, நமக்கு கிடைத்த நன்மைகளிலேயே நம் முழு கவனத்தையும் செலுத்தி, தேவனை துக்கப்படுத்தாதபடி நம்மைக் காத்துக் கொள்வோம். ஆவிக்குரிய வரங்களை பெற்றுக் கொண்டவர்கள், தாங்கள் பெற்ற வரத்திலேயே கவனமாயிருந்து, அதிலே மேன்மைப்பாராட்டிக் கொண்டு, அதைக் கொடுத்த தேவனை மறந்து போகாதிருப்போமாக.

உலக மயக்கமும், ஐசுவரியமும் நம்மை நம் தேவனிடமிருந்து பிரிக்காதிருப்பதாக. எல்லாவற்றிலும் எந்த ஆசீர்வாதத்திலும் அதை நமக்கு கொடுத்த தேவனை மகிமைப்படுத்துவோம். கர்த்தர் அதில் பிரியமாயிருப்பார். இன்னும் நம்மை அதிகமாய் ஆசீர்வதிப்பார்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி - அனுதின மன்னா

Saturday, 28 June 2014

இன்றைய வேத வசனம்

பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது.
சங்கீதம் 52:1

Friday, 27 June 2014

புலம்பலின் சுவர்- Western Wall

இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே,  இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். - (மத்தேயு 24:1-2).


இயேசுகிறிஸ்து ஒலிவமலையிலிருந்து சொன்ன இந்த முழு அதிகாரமும் இரண்டாவது மலைபிரசங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வசனங்கள் மிகவும் முக்கியமானவை, ஏனென்றால் நான்கு சுவிசேஷங்களில் மூன்று சுவிசேஷங்களில் இந்த வசனங்கள் எழுதப்பட்டிருக்கிறது.  (மத்தேயு 24, மாற்கு 13,14, லூக்கா 21,22). இந்த வசனங்கள் கர்த்தரின் வாயிலிருந்து வந்த பெரிய (நீளமான) தீர்க்கதரிசன வார்த்தைகள் எனவும் கூறலாம்.

ஓலிவ மலையிலிருந்து நாம் நேராக பார்த்தால் தேவாலயம் வெகு தெளிவாக காணலாம். அப்போதிருந்த தேவாலயம்,  உலக அற்புதங்களில் ஒன்றாக இருந்தது. எல்லா வகையிலும் யூதர்கள் பெருமைபட்டுக் கொள்ளும் வண்ணம்,  அந்த தேவாலய கட்டிடம் சிறந்த கற்களினாலும்,  காணிக்கைளினாலும் அலங்கரிக்கப்பட்டு (லூக்கா 21:5) கெம்பீரமாய் நின்றிருந்தது. அதை பார்த்துதான் இயேசுகிறிஸ்து  'இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'  என்றார். அந்த சமயம்,  சீஷர்களுக்கு அது எப்படி சாத்தியமாகும் என்று யோசித்திருக்கலாம். ரோமர்கள் கி.பி. 70ல் எருசலேமை பிடித்தபோது,  அநேக யூதர்கள் அந்த தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். அப்போது அங்கிருந்த எல்லாவற்றையும் எரித்த ரோமர்கள்,  தேவாலயத்திற்கும் தீ வைத்தனர். தீ பற்றி எரிந்தபோது,  சுத்த தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த அதனுடைய கோபுரத்தின் தங்கம்  உருகி வழிந்தோடியது. அங்கு தஞ்சம் புகுந்திருந்த யூதர்கள் எரிந்து சாம்பலாயினர். தங்கம் உருகி அந்த கட்டிடத்தின் கற்களில் வழிந்திருந்தமையால் ரோம அதிகாரிகள், அந்த தங்கத்தை எடுக்க வேண்டி, ஒரு கல்லையும் வைக்காதபடி தங்கத்தை எடுக்கும்படியாக ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி,  எல்லாவற்றையும் இடித்து போட்டனர். அந்த முழு கட்டடிடமும் இருந்த இடம் தெரியாதபடி இடிக்கப்பட்டு போயிற்று.


இயேசுகிறிஸ்து கூறின தீர்க்கதரிசன வார்த்தையின்படியே தீத்து இராயனால் கி.பி. 70ல் முழு எருசலேமும் தரைமட்டமாக்கப்பட்டது. அதில் இருந்த 16,00,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

மோரியா மலை என்று அல்லது ஆங்கிலத்தில் Temple Mount  என்றழைக்கப்படும் இடத்தில் அமைந்திருந்த அந்த தேவாலயம் ஏரோது அரசனால் கட்டப்பட்டதாகும். சாலொமோன் இராஜா கட்டின தேவாலயம் நேபுகாத்தநேச்சாரினால் இடிக்கப்பட்ட பின்பு, ஏரோது இராஜாவினால் கி.மு. 19-ல் இயேசுகிறிஸ்து இருந்த காலத்தில் இருந்த தேவாலயம் கட்டப்பட்டது. அது இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தின்படி,  கி.பி. 70ல் தீத்து இராயானால் இடிக்கப்பட்டது. இப்போது மீந்திருப்பது, புலம்பலின் சுவர் என அழைக்கப்படும் Western Wall மட்டுமே ஆகும். இது ஆலயத்தின் சுவர் அல்ல, ஆலயத்தை சுற்றியிருந்த சுவராகும்.



இந்த மீதமிருக்கிற புலம்பலின் சுவர் தேவாலயத்தின் ஒரு பகுதி என்பதால்,  யூதர்களுக்கு மிகவும் பரிசுத்தமான இடமாகும். அவர்களுக்கு தேவாலயம் இல்லாததால்,  அவர்கள் இந்த இடத்தில் கூடி தங்கள் வேத புத்தகமாகிய தோராவை வாசிப்பதும், அந்த சுவரின் முன் நின்று முன்னும் பின்னும் ஆடினவர்களாக, தங்கள் ஜெபங்களை ஏறெடுக்கிறார்கள். அவர்கள் இன்னும் மேசியா வர காத்திருக்கிறார்கள். மேசியா வந்து,  தங்கள் தேவாலயம் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய ஜெபமாக இருக்கிறது.

அந்த சுவரின் இடுக்குகளில் ஆயிரக்கணக்கான ஜெப விண்ணப்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. எல்லா நாட்டை சேர்ந்தவர்களும் வந்து அந்த இடத்தில் தங்கள் விண்ணப்பங்களை வைக்கலாம்.

புலம்பலின் சுவரில் ஆண்களுக்கென்று பிரத்யேகமாக ஜெபிப்பதற்கு என்று ஒரு பெரிய அறை சுவரை ஒட்டி அமைக்கப்பட்டுளளது. அதில் பெண்கள் செல்வதற்கு அனுமதியில்லை. அங்கு செல்லும் எந்த ஆணும் தங்கள் தலையில் யூதர்கள் அணியும் தொப்பியை அணிந்துதான் செல்ல வேண்டும். பெண்கள் ஜெபிக்க அந்த சுவரிலேயே இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு பக்கம் பெண்கள் ஜெபிக்கிறார்கள். அவர்கள் கைகளில் ஒரு ஜெப புத்தகம் இருக்கிறது. அதை அந்த சுவரின் முன் நின்று முன்னும் பின்னும் ஆடி ஆடி சொல்லி கொண்டிருக்கிறார்கள்.


நாங்கள் அங்கு சென்றிருந்தபோது,  13 வயதான ஆண்மக்களை அங்கு தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்படி அந்த இடமே பெரிய விழா கோலம் பூண்டிருந்தது. ஆனாலும் பெண்கள் (அம்மாமார்), தனியாகதான் நின்று அந்த கொண்டாட்டத்தை பார்க்கவேண்டியிருந்தது.

புலம்பலின் சுவரை ஒட்டி,  பெரிய இடம் ஆயிரக்கணக்கான யூதர்கள் வந்த ஜெபிக்கும்படியாக ஒதுக்கப்பட்டள்ளது. ஆந்த இடத்தின் சுவரில் ஆறு கறுப்பு நிற விளக்குகள் தாவீதின் நடசத்திரத்துடன் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அது என்ன என்று கேட்டபோது, ஹிட்லரின் காலத்தில் அவனால் கொல்லப்பட்ட ஆறு இலட்சம் யூதர்களை நினைவு கூறும்பொருட்டு அந்த விளக்குகள் தொடர்ந்து எரியப்பட்டு வருகின்றது என்று கூறினார்கள்.


மேசியாவின் வருகைக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கும் யூதர்கள் 2000 வருடத்திற்கு முன் கிறிஸ்து வந்து அவர்களுக்காகவும் தமது குற்றமற்ற இரத்தத்தை சிந்தி மரித்தார் என்பதை இன்னும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். 'அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை'  - (யோவான் 1:11). அந்திகிறிஸ்து வந்து, அவர்களுக்கு தேவாலயம் கட்டப்படுவதற்கு உதவி, பின் அந்த தேவாலயத்தில் நானே மேசியா என்று கூறும்போதுதான் யூதர்கள் அறிந்து கொள்வார்கள் இயேசுகிறிஸ்துவே மேசியா என்று. அவர்கள் இரட்சிக்கப்படுவதற்காக நாம் ஜெபிக்க வேண்டும். ஏனெனில் அந்திகிறிஸ்துவின் காலத்தில் அதிகமாய் பாடுபட போகிறவர்கள் யூதர்களும் கிறிஸ்தவர்களுமே! 'எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்,  உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக'  - (சங்கீதம் 122:6).


ஆமென் அல்லேலூயா!

நன்றி அனுதின மன்னா

Thursday, 26 June 2014

மற்றவர்களை காணும் விதம்


இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?  மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். -  (மத்தேயு  7:4-5).

ஒரு வயதான பெண்மணி,  தன்னுடைய பல்லின் வேதனைக்காக ஒரு பல் டாக்டரிடம் சென்றிருந்தார்கள். அவர்கள் முதல் தடவையாக அந்த வைத்தியரிடம் சென்றிருந்தார்கள். காத்திருக்கும் அறையில் டாக்டரின் அழைப்பிற்காக காத்திருந்தார்கள். அப்போது அங்கு ஒரு பலகையில் அந்த டாக்டரின் பெயரும் அவருடைய பட்டங்களும் எழுதப்பட்டிருந்தன. அந்த வயதான பெண்மணி அமர்ந்திருக்கும்போது, அவர்களுக்கு அந்த பெயரில், ஒரு அழகிய உயரமான வாலிபன் 40 வருடங்களுக்கு முன் தன்னோடு படித்தது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு வேளை அந்த மாணவனாய் இருக்குமோ என்று அவர்கள் யோசித்து கொண்டே இருக்கும்போது, அவர்களை அழைக்கும் சத்தம் கேட்டது.

உள்ளே சென்ற அந்த மாணவன்தானா என்று பார்த்தபோது, நிச்சயமாய் அந்த மாணவனாக இருக்க முடியாது என்று தீர்மானித்தார்கள். ஏனெனில் அந்த வைத்தியர்,  மிகவும் வயதானவராக,  முடியெல்லாம் கொட்டி,  பாதி மொட்டையாக இருந்ததை பார்த்து,  ஒருபோதும் இந்த வயதான மனிதர் என்னோடு படித்தவராக இருக்க முடியாது என்று நினைத்தவர்களாக, தான் படித்த பள்ளியின் பெயரை சொல்லி, 'இந்த பள்ளிக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்,  'ஆம் ஆம் நான் அங்கு தான் படித்தேன்'  என்று கூறினார். எந்த வருடம் எனறு கேட்டதற்கு அவர் வருஷத்தை சொன்னார். அப்போது அந்த வயதான பெண்,  சந்தோஷத்தோடு,  'நீர் என்னுடைய வகுப்பில்தான் இருந்தீர்'  என்று கூறினார்கள். அதற்கு அந்த வைத்தியர்,  'அப்படியா?  நீங்கள் எந்த பாடத்தை சொல்லி கொடுத்தீர்கள்'  என்று கேட்டார்.

அநேக முறை நாம் நம் வயதில் இருக்கும் மற்றவரை பார்த்து, எனக்கு இன்னும் அந்த அளவு வயதாகி விடவில்லை என்று நினைத்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்க்கும்போது நாம் நினைக்கிற மாதிரிதான் அவர்களும்  நினைக்கிறார்கள் என்பதை மறந்து போகிறோம். சில குண்டு பேர்வழிகளை பார்க்கும்போது,  ஆஹா நாம் அந்த அளவு குண்டாக இல்லை என்று நினைத்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்க்கும்போது,  அப்பா,  இந்த அம்மா எவ்வளவு குண்டு என்று நினைக்கிறார்கள் என்பது நமக்கு தெரிவதில்லை. நம்முடைய சரீர அளவு நமக்கு தெரிவதில்லை.

அதுப்போல நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும்,  சிலருடைய வாழ்க்கையை பார்த்து நாம் நல்ல வேளை அந்த அளவு பாவம் செய்யவில்லை என்று நினைத்து கொள்கிறோம். அதுப்போல அவர்களும் தங்கள் வாழ்வில் உள்ள பாவங்களை பார்க்காதபடி, நாம் காண்கிற வண்ணமே காண்கிறார்கள் என்பதை நாம் மறந்து போகிறோம்.

அதைத்தான் இயேசுகிறிஸ்துவும் 'இதோ,  உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்' என்று கூறினார். மற்றவர்கள் செய்கிற தவறுகள் நமக்கு பெரிய காரியமாகவும்,  அது எப்படி அவர்கள் செய்யலாம்,  கடவுள் பயம் இல்லை?  எனறு சொல்கிற நாம் அதையே நாம் செய்ய நேரிடும்போது அது நம்முடைய பெலவீனம் என்று சொல்வது நிச்சயமாக மாய்மாலமான காரியமாகும்.

இன்று நம்முடைய உருவத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, உண்மையில் நாம் இருக்கும்வண்ணமாகவே ஒத்துக்கொள்வோம். அதுப்போல வேத வசனமாகிய கண்ணாடியில் நம் வாழ்க்கையில் காணப்படும் குற்றங்களை ஒத்து கொண்டு நம்முடைய வாழ்க்கையை இருக்கிற வண்ணமாகவே கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். முதலாவது நாம் நம்மை காண்ணாடியில் பார்க்கிற மாதிரி மற்றவர்களையும் பார்ப்போம். அப்படி இல்லாதபடி,  மற்றவர்களை பூதக்கண்ணாடியிலும் நம்மை சாதாரண கண்ணாடியிலும் பார்க்கும்போது, அநேக வித்தியாசங்கள் தோன்ற தான் செய்யும். எப்போது நம்மை பார்க்கிற மாதிரி மற்றவர்களை பார்க்கிறோமோ அப்போதுதான் நாம் ஆவிக்குரிய வாழ்விலும் உயருவோம்,  முன்னேறுவோம்.

முதலாவது நம் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போட்டுவிட்டு,  பின்பு நம் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்க்கும்படியாய் கர்த்தர்தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக!

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

Wednesday, 25 June 2014

உம்முடைய சித்தம்

நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். -  (யோவான் - 14:13)

ஐந்து வயது நிரம்பிய சிம்சோன், தன் தாயுடன் தனது பிறந்த நாளுக்காக பொம்மை கடைக்குச் சென்று தனக்கு பிடித்த விளையாட்டுச் சாமான் வாங்கச் சென்றான். அங்கு அநேக பொம்மைகளும் விளையாட்டுச் சாமானங்களும் நிரம்பி இருந்தன. அதில் அவனுக்கு விருப்பமான, கலர்கலர் விளக்குகளுடன் விதவிதமான சத்தங்களுடன் வேகமாய் செல்லும் கார் இருந்தது. அதைக் கண்டவுடன் அவன் தன் தாயிடம் அடம் பிடித்து இந்த கார்தான் எனக்கு வேண்டும் என்று கேட்டு தொந்தரவு செய்தான். தாயும் பார்க்கலாம் என்று கூறி விட்டு பின்பு வீடு திரும்பினார்கள்.

அடுத்த நாள் பிறந்தநாள் பரிசாக அவன் விரும்பிய அதே கார் அவனுக்கு கொடுக்கப்பட்டது. அதைக் கண்ட அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. அப்பொழுது அவன் சகோதரன் 'அட மடையா! இந்த காருக்கே நீ இவ்வளவு சந்தோஷப்படுகிறாயே,  அம்மா உனக்கு இதைவிட பெரிதான  ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்கி கொடுக்க இருந்தார்கள். ஆனால் நீ இதை வாங்க வற்புறுத்தியதால் இதை வாங்கிக் கொடுத்தார்கள்' என்றான். அதைக் கேட்டபோது சிம்சோனின் இருதயம் கனத்தது.

இதைப் போலத்ததான் நாம் தேவனிடம் நமது தேவையை கதறி, கெஞ்சி கேட்டுப் பெற்றுக் கொள்கிறோம். கர்த்தரும் அதைத் தருகிறார். ஆனால் தேவன் ஒருவேளை நாம் கேட்டதைவிட நன்மையானதை கொடுக்கச் சித்தமாயிருந்திருப்பார். ஆனால் நம் ஜெபம் அதை தடை செய்திருக்கும்.  நாம் ஜெபிக்கும்போது 'உம்முடைய சித்தத்தின்படி எங்களுக்கு வாய்க்கச் செய்யும்' ஆண்டவரே என்று அவருடைய சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்கும் போது அவர் நன்மையானவற்றையே நமக்கு தர வல்லவராயிருக்கிறார்.

நம் தேவனுக்கு கொடுக்க முடியாத பெரிய தேவை என்று ஒன்றுமில்லை. ஆகையால் பெரிய காரியங்களுக்காக ஜெபிப்போம் பெரிய பதிலை பெற்றுக் கொள்வோம்.

ஆமென் அல்லேலூயா!

நன்றி: அனுதின மன்னா

Tuesday, 24 June 2014

இரண்டு மனம் வேண்டாம்

இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து,  மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு,  மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது'  - (மத்தேயு - 6:24).

இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற பாடகர் லூசியானோ பவரோட்டி (Luciano Pavarotti) ஒரு முறை சொன்னார், அவருடைய சிறுவயதில் அவருடைய தந்தை ரொட்டி செய்பவராக இருந்தார். அவர் பவரோட்டியை பாடுவதற்கு ஊக்கமளித்தார். நன்கு பாடுவதற்கு 'பாடி பாடி குரல் வளத்தை பெருக்க வேண்டும்'  என்று அவருடைய தந்தை அவருக்கு அறிவுறுத்தி வந்தார். பின்னர்,  Arrigo Pola என்பவரின் கீழ் இருந்து முறையாக பாட்டுபாட கற்று கொண்ட பவரோட்டி, தன் தகப்பனிடம் வந்து,  'நான் பாடல் கற்று கொடுக்கும் ஆசிரியராக வேண்டுமா? அல்லது பாடகனாகவே இருக்க வேண்டுமா'  என்று கேட்டார். அப்போது அவருடைய தந்தை,  'நீ இரண்டு நாற்காலிகளில் அமர வேண்டும் என்று விரும்பினால்,  நீ அவைகனின் நடுவே விழுந்து போவாய், உன் வாழ்க்கையில் வளம் பெற வேண்டுமானால்,  ஒரே ஒரு நாற்காலியில் அமர பார்'   என்று அறிவுரை கூறினார்.

'பின்,  அவருடைய அறிவுரையின்படியே நான் ஏழு வருடங்கள் படித்து,  முதன் முதலாக வெளிப்படையாக பாட ஆரம்பித்தேன். அதன்பின் ஆபரா பாடல்களில் பாடுவதற்கு இன்னொரு ஏழு வருடங்கள் ஆனது,  ஆனால் என் தந்தையின் அறிவுரையின்படி நான், ஒரே ஒரு காரியத்தில் மாத்திரம் என் கவனத்தை செலுத்தினதினால்,  நான் தேர்ச்சி பெற்ற பாடகனாக மாறினேன். புத்தகம் எழுதுவதானாலும்,  எதை செய்வதானாலும் முழு முயற்சியுடன் ஈடுபடவேண்டும். எல்லாவற்றையும் விட ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு,  அதிலே முழு கவனத்தையும் செலுத்தி, முதலிடம் பெற வேண்டும்' என்று கூறினார்.

பவரோட்டி கூறியது உலக காரியத்திற்காக என்றாலும்,  ஆவிக்குரிய காரியத்திற்கும் அது பொருந்தும். நாம் உலகமும் வேண்டும் தேவனும் வேண்டும் என்று இரண்டு நாற்காலிகளிலும் உட்கார முயன்றால்,  இரண்டுக்கும் நடுவில் விழுந்து போவோம்.

'இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து,  மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது'  என்ற இயேசுகிறிஸ்து கூறினார்.

நம்மில் அநேகர்,  ஞாயிற்று கிழமைகளில் மட்டும் ஆலயத்திற்கு சென்று வந்துவிட்டு,  பின்னர் வருகிற வழியிலேயே கரி இறைச்சி வாங்கி வந்து,  சமைத்து சாப்பிட்டு விட்டு,  சாயங்காலத்தில் டிவி முன்னால் உட்காருவதுதான்,  எல்லா நிகழ்ச்சியும் முடிந்த பிறகே எழுவது, பின் ஜெபமாவது ஒன்றாவது,  படுத்து தூங்கி,  அடுத்து நாளிலிருந்து,  வேலைக்கும் வீட்டுக்கும் ஒரே ஓட்டம்தான்! இதில் கர்த்தருக்கு எங்கே நேரம்?  யாராவது ஊழியக்காரர் என்ன ஐயா ஜெபிக்கிறீர்களா?  என்று கேட்டால் எங்கே ஐயா,  ஒரே பிஸி என்று சொல்வார்கள். ஆலயத்திற்கு சென்று காணிக்கை போட்டுவிட்டு வந்தால் ஏதோ பெரிய காரியத்தை செய்து விட்டு வந்ததை போன்ற நினைப்பு!  'பூமியும் அதின் நிறைவும் என்னுடையது'  என்ற கர்த்தருக்கு நீங்கள் போடும் காணிக்கை எந்த வகையில் திருப்திபடுத்தும்?  நீங்கள் உங்களையே காணிக்கையாய் தருவதையே கர்த்தர் எதிர்ப்பார்க்கிறார். தேவனுக்கும் உலக பொருளுக்கும்,  உலகத்திற்கும் ஒரு நாளும் ஒரே நேரத்தில் நாம் ஊழியம் செய்ய முடியாது.

நாம் படித்திருக்கும் ஜியாமெட்ரியில்  (Geometry) இரண்டு புள்ளிகளுக்கு இடையில் ஒரே ஒரு கோடு மாத்திரம் தான் வரைய முடியும். ஒரு புள்ளியிலிருந்து அநேக கோடுகளை ஆரம்பிக்கலாம். ஆனால் அது முடியும்போது அது வேறு இடத்தில்தான் முடியும். ஆகவே,  நமக்கும் தேவனுக்கும் இடையில் அல்லது நமக்கும் உலகத்திற்கும் இடையில் ஒரே ஒரு கோடு மாதிரி உறவுதான் இருக்க முடியும். இரண்டுக்கும் இடையில் இருந்தால் விழுந்து போவோம். இந்த கடைசி நாட்களில் தேவனுக்காக காரியங்களை சாதிக்க வேண்டிய நாம் இப்படி இரண்டு பக்கத்திலும் இருந்தால் யாருக்கும் எந்தவித பிரயோஜனமுமில்லை. அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருந்தால் வாந்தி பண்ணிபோடுவேன் என்று கர்த்தர் எச்சரிக்கிறார். கர்த்தர் நம்மை வேண்டாம் என்று சொல்வாரானால்,  நமக்கு எந்த நம்பிக்கையும் இல்லாமல் போகும்.

யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி,  'கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால்,  பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்;  நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ?  நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ?  நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்' - (யோசுவா 24:15).  இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய சொந்த ஜனம் தான். ஆனாலும் அவர்கள் வழிவிலகி வேறே தேவர்களை சேவித்தார்கள். அப்போது தேவனுக்காக யோசுவா வைராக்கியமாய் எழுந்து இந்த வார்ததைகளை அந்த ஜனத்திற்கு சொன்னார். அதுப்போல நாமும் இந்த நாட்களில் கர்த்தரும் வேண்டும், உலகமும் வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள். ஆனால்,  நானும் என் வீட்டாருமோவென்றால்,  கர்த்தரையே சேவிப்போம். ஆமென் அல்லேலூயா!

கர்த்தரை மாத்திரம் சார்ந்து ஜீவிப்போம். உலகமும் அதன் எல்லாமும் ஒரு நாள் அழிந்து போகும். அழிந்து போகின்ற ஒன்றை நாம் சார்ந்து வாழாதபடி அழியாத தேவனை நாம் சார்ந்து கொள்வோம். கர்த்தருக்காக சாதிப்போம். நம் வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்கும்.


ஆமென்..அல்லேலூயா

நன்றி அனுதின மன்னா

Monday, 23 June 2014

அற்பமாய் எண்ணாதிருப்போம்

இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். - (மத்தேயு 18:10).

பொதுவாக நாம் நம்மை விட வயதில்இ படிப்பில்,   குறைந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது. எளிதில் அவர்களை நம்பி எந்த பொறுப்பையும் கொடுப்பதில்லை. இவனுக்கு அல்லது இவளுக்கு என்ன தெரியும்? நேற்று முளைத்த காளான் என்று சொல்லி அவர்களுடைய திறமையைப் பாராமல் எளிதில் அற்பமாய் பேசி விடுகிறோம். ஆனால் வேதம் 'ஒருவரையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்' என்று நம்மை எச்சரிக்கிறது.

ஒரு 18 வயதுக்கூட நிரம்பாத ஒரு மூர்ஹவுஸ் என்ற வாலிபன் உலகப்பிரசித்திப் பெற்ற டி.எல் மூடியின் சிகாகோ நகர ஆலயத்தில் பிரசங்கிக்க விரும்புவதாக கூறினார். மூடியோ அவரை ஏற்றுக் கொள்ள சம்மதியாமல் தட்டிக் கழித்தார். ஆனால் தேவ திட்டத்தின்படி பல மாதங்களுக்குப் பிறகு மூடியின் சபையில் மூர் பிரசங்கித்தார். அநேகர் தங்களது பின்மாற்ற வாழ்விலிருந்து மனம் திரும்பினர். டீ.எல். மூடியும் கண்ணீரோடு அந்த பிரசங்கத்தை கேட்டார். அதன்பிறகு இனி யாரையும் அலட்சியமாய்ப் பார்க்க போவதில்லை என்று முடிவு செய்தார்.

வேதத்திலும் இப்படி சில வாலிபர்கள் அற்பமாய் எண்ணப்பட்டார்கள். யோசேப்பின் சொப்பனமும், அவனது பேச்சும் அவனது சகோதரர்களுக்கு அற்பமாய் காணப்பட்டது. தாவீதும் யுத்தக் களத்திலேயுள்ள தன் சகோதரர்களால் அற்பமாய் பேசப்பட்டான். ஆனால் தேவன் இவர்களைக் கொண்டு பெரிய காரியங்களை செய்தார் என்பது மறுக்க முடியாத உண்மை.

அன்று பரிசேயனும் ஆயக்காரனை அற்பமாக எண்ணினான். நான் இவனைப்போலெல்லாம் இல்லை, நான் கர்த்தருக்கு விசேஷித்தமானவன் என்று மற்றவனை அற்பமாய் எண்ணினான். ஆனால் தேவனின் பார்வைக்கு ஆயக்காரனே விசேஷித்தவனாக தோன்றினான்.

இன்று நம் அலுவலகத்திலோஇ சபையிலோஇ குடும்பத்திலோ பிற அங்கத்தினர்களை நாம் ஒருவேளை அற்பமாய் எண்ணலாம். வெளிப்படையாக நாம் அதை ஒருவேளை சொல்லாமல் இருக்கலாம், ஆனால் நம் செய்கைகளினால், நம் பேச்சினால்இ நம் பார்வையினால் நான் உன்னை விட உயர்ந்தவன்இ உயர்ந்தவள் என்று காட்டிக் கொள்கிறோமா? இது தேவனுடைய பார்வையில் பாவமே!

ஒரு சகோதரன் தன்னோடு வேலை செய்யும் மற்ற சகோதரனை ஆலயத்தில் கண்டால் கண்டுக் கொள்வதில்லை. ஆனால் வேலையிடத்தில் மட்டும் மிகவும் நெருங்கினதுப் போல நடந்துக் கொள்வார். மற்ற சகோதரன் இதனால் மனம் வெறுத்துப் போனார். உள்ளே ஒன்று வெளியே ஒன்று என்று இருந்தால் கர்த்தர் அதை அருவருக்கிறார் என்பதை நாம் அறிய வேண்டும்.

'மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்' (பிலிப்பியர் 2:3) என்றல்லவா வேதம் கூறுகிறது! ஆனால் நாம் எப்படி நடந்துக் கொள்கிறோம்? நம்மிடம் பொறுப்பு கொடுக்கப்பட்டால், என்னை விட்டால் இதை செய்வதற்கு யாருமில்லை என்று நினைக்கிறோமா? தேவனால் கற்களை கொண்டும் பேச வைக்கவும், செய்ய வைக்கவும் முடியும் என்பதை நாம் அறிய வேண்டும்.

நம்மோடு இருக்கும் மற்றவர்களை நம்மிலும் மேன்மையுள்ளவர்களாக எண்ணுவோம். அதுவே கிறிஸ்துவின் சிந்தை. இந்த சிந்தை நம் ஒவ்வொருவருக்கும் இருக்குமானால் நாம் யாரையும் அற்பமாய் எண்ணமாட்டோம். நம் தாய் தகப்பனைமாரை அற்பமாய் எண்ணாதிருப்போம். நம் கூட இருக்கும் சகோதர சகோதரிகளை அற்பமாய் எண்ணாதிருப்போம். சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளை அற்பமாய் எண்ணாதிருப்போம். நம் கூட வேலை செய்யும் மற்றவர்களை அற்பமாய் எண்ணாதிருப்போம். கிறிஸ்துவின் சிந்தையே நம்மில் இருக்கக்கடவது. மற்றவர்களை மேன்மையாய் எண்ணுவோம். அப்போது கர்த்தர் நம்மை உயர்த்துவார்.

ஆமென் அல்லேலூயா!

நன்றி அனுதின மன்னா

Sunday, 22 June 2014

இயேசுவின் கிருபை நமக்கு போதும்

அந்த வார்த்தை (இயேசு) மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார் அவருடைய மகிமையைக் கண்டோம் அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. (யோவா 1:14)

கிருபை என்ற வார்த்தையை எபிரேய பதம் “CHEN” சேன், கிரேக்க பதம் “CHARIS”  காரிஸ், அது ஆங்கிலத்தில் “GRACE” என்றும் தமிழில் கிருபை என்றும் அழைக்கப்படுகிறது. கிருபை என்பது தகுதியற்றவர்கள் மீது தேவன் காண்பிக்கும் அளவில்லாத இரக்கம் ஆகும். பழைய ஏற்பாட்டு நாட்களில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லாமலிருந்தது.ஏனென்றால், எல்லா பாவத்திற்கும்,தவறுக்கும் தண்டனை உண்டு. மன்னிப்புகிடையாது. அறியாமல் தவறு செய்தாலும், அறிந்து செய்தாலும் தண்டனைஉண்டு.இதை தான், கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று பழைய ஏற்பாட்டில்கூறப்பட்டுள்ளது. அதன் அர்த்தம் என்ன? உங்கள் கண்ணைஒருவர் குருடாக்கிவிட்டால், அதற்கு பதிலாக, தண்டனையாக அவர் கண்ணை குருடாக்கி விட வேண்டும்என்பது தான். இங்குமன்னிப்புக்கு இடமே இல்லை.

இயேசு என்றைக்கு இந்த உலகத்தில் உதித்தாரோ, அன்று தான் கிருபை வெளிப்பட்டது. இயேசு கிறிஸ்து கிருபையும், சத்தியமும் நிறைந்தவராக இந்த உலகத்தில் வந்தார். அவர் நியாயாதிபதியாக வரவில்லை,மாறாக கிருபை நிறைந்தவராக வந்தார். சத்தியம் நிறைந்தவராக வந்தார். பல்வேறு காரியங்களை செய்தார். இயேசுவைப்போலமாற விரும்புகிற நாம் கிருபையும், சத்தியமும் நிறைந்த இயேசு தன்வாழ்நாட்களில் என்ன செய்தார் என்பதை அறிந்துகொண்டோமானால், நாம் அப்படியேநடந்து தேவனின் திட்டத்தை நிறைவேற்றலாம். அந்த கிருபையின் மூலமாகமன்னிப்பு நமக்கு கிடைக்கிறது. அது தான்புதிய ஏற்பாடாகிய கிருபையின் காலத்தின் தொடக்கம். இயேசு முழுவதுமாககிருபைநிறைந்தவராக இருந்தார். அவரது பார்வை அது கிருபை. ஆகவே தான்,வேதனை படுகிறவர்களை கண்ட போது மனதுருகினார். அவரது பேச்சு அது கிருபை (லூக். 4:22). அவரது செயல்களெல்லாம் கிருபை நிறைந்ததாகவே காணப்பட்டது.

ஆகவே தான் தாவீது சொல்கிறார், “ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன் (சங்கீதம்  86:15) என்று. அந்த மனவுருக்கம் நிறைந்த கிருபையின் தெய்வம் இயேசு. இந்த நாளில் உங்களையும் கூட தமது கிருபையின் கண்களால் தான் பார்த்துகொண்டிருகின்றார். உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகளை மாற்ற அவருடைய கிருபை போதுமானதாக உள்ளது. 

ஆமென்..அல்லேலூயா
 

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Saturday, 21 June 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.
சங்கீதம் 85:12

Friday, 20 June 2014

காலமோ செல்லுதே

ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்து கொள்ளப்பார்த்து, நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். - (எபேசியர் - 5: 15,16)

887-ம் வருடம் இம்மானுவேல் நெஞ்சர் (Immanuel Nenjer) என்பவர் தன் பணியாளிடம் 20 டாலரை கொடுத்து, காய்கறி வாங்கி வர சொன்னார். அந்த பணியாள் அப்படியே போய் வாங்கிவிட்டு, அந்த 20 டாலர் பணத்தை, கடையில் வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்த போது, அதை வாங்கிய பெண்ணின் கைகளில் அந்த பணத்திலிருந்து மை (Ink) கைகளில் பட்டது. உடனே அந்த பெண்ணிற்கு தோன்றிற்று, இந்த ஆள் கள்ளநோட்டு அடிக்கிறாரா என்று. ஆனால் அந்த பெண்ணிற்கு இம்மானுவேலை வெகு நாட்களாக தெரியும், ஆகவே மிச்ச காசை கொடுத்து விட்டு,  திரும்ப அந்த நோட்டை பார்த்தபோது, அதிலிருந்த மை கரைந்தது தெரிய வந்தது. உடனே போலீசுக்கு சொல்லி, அவர்கள் இம்மானுவேலின் வீட்டை பரிசோதித்தபோது, வீட்டின் மேல் அட்டிகையில், அவர் கள்ள நோட்டு உருவாக்குவது தெரிய வந்தது. அந்த மனிதர் ஒரு அற்புதமான ஓவியர். அவர் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் 16,000 டாலருக்குமேல் விற்பனை ஆனது. அப்படியிருக்கும்போது, அவர் இந்த 20 ரூபாய் நோட்டை கள்ள நோட்டாக வரைந்து விற்றது எத்தனை முட்டாள்தனம்! இதில் என்ன ஒரு காரியம் என்றால், அவர் 20 டாலர் நோட்டை வரைவதற்கும், அந்த 16,000 டாலர் படத்தை வரைவதற்கும் எடுத்து கொள்ளும் நேரம் ஒன்றுதான்.

ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கு பதில் அவர் கள்ளநோட்டை வரைந்து, தன்நேரத்தை வீணடித்தது எத்தனை முட்டாள்தனம்! எத்தனை ஞானமற்ற செயல்!

நாமும் கூட அநேக வேளைகளில் அப்படிதான் இருக்கிறோம். கடந்த நாளில் நீங்கள் உங்கள் நேரத்தை எப்படி செலவழித்தீர்கள் என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள். எத்தனை முறை தேவையில்லாத காரியத்திற்காக நம் நேரத்தை வீணாக செலவழித்திருக்கிறோம் என்று பார்த்தால் நிச்சயமாக நாம் எல்லாரும் குற்றவாளிகளாக தான் இருப்போம்.

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நாளில் 1,440 நிமிடங்கள் கர்த்தர் கிருபையாக கொடுத்திருக்கிறார். ஒருவருக்கும் கூடுதலும் இல்லை, குறைச்சலும் இல்லை. இஸ்ரவேலருக்கு வனாந்தரத்தில் மன்னா கொடுக்கப்பட்டபோது, அதை அடுத்த நாளுக்காக எப்படி வைக்கமுடியாதோ, அதைப் போல நாமும் இந்த நாளிலிருந்து கொஞ்ச நேரத்தை எடுத்து, அடுத்த நாளுக்காக வைக்க முடியாது. அன்றன்று கொடுக்கிற நேரத்தை அன்றன்றே நாம் செலவு செய்ய வேண்டும். ஆனால் அதை எப்படி செலவு செய்கிறோம் என்பது நம்முடைய கைகளில்தான் இருக்கிறது.

போன நேரத்தை நாம் திரும்ப பெற முடியுமா?  ஆகையால் நமக்கு கொடுக்கப்பட்ட அருமையான நேரத்தை ஞானமாக மகிழ்ச்சியாக வெற்றியாக செலவழிப்போம். உங்களுக்கு தெரியுமா?

ஒரு வருடத்தின் அருமையை அறிந்து கொள்ள ஒரு வருடம் பள்ளியில் தோல்வியுற்ற மாணவனிடம் கேட்க வேண்டும்.

ஒரு மாதத்தின் அருமையை அறிந்து கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே பிள்ளையை பெற்றெடுத்த தாயிடம் கேட்க வேண்டும்.

ஒரு வாரத்தின் அருமையை அறிந்து கொள்ள ஒரு வாரப் பத்திரிக்கையின்  ஆசிரியரிடம் கேட்க வேண்டும்.

ஒரு நிமிடத்தின் அருமையை அறிந்து கொள்ள தனது வேலை நேர ரயிலை தவறவிட்ட மனிதனிடம் கேட்க வேண்டும்.

ஒரு நொடியின் அருமையை அறிந்து கொள்ள தனது காரின் பெரிய விபத்தை தவிர்த்த மனிதனிடம் கேட்க வேண்டும்.

ஒரு வாழ்நாளின் அருமையை அறிந்து கொள்ள மறுமையில் வெறுங்கையாய் தேவனிடம் கணக்கு ஒப்புக் கொடுக்கும்போது அறிந்து கொள்வோம்.

ஒருவருக்காகவும் நேரம் காத்திருப்பதில்லை. ஆகையால் ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக செலவழிப்போம். ஆத்துமாக்களை கர்த்தரிடம் சேர்ப்போம். இயேசுகிறிஸ்து சீக்கிரம் வருகிறார்.

ஆமென் அல்லேலூயா!

நன்றி அனுதின மன்னா

Thursday, 19 June 2014

விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும்

இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். - (மாற்கு 9:23).

ஸ்மித்விகிள்ஸ்வொர்த் என்னும் தேவ ஊழியர், தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்பட்டவர். ஒரு நாள் அவர், இரண்டு கால்களையும் இழந்த ஒரு செல்வந்தரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றிருந்தார். விருந்து மேஜையில் இருவரும் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது ஊழியர் கூறினார், 'சகோதரனே தேவன் உங்களுக்கு மறுபடியும் கால்களைக் கொடுக்க விரும்புகிறார்' என்று. அதைக் கேட்ட செல்வந்தர் நம்பிக்கையற்றவராக 'எனக்குத்தான் இரண்டு கால்களும் இல்லையே இனிக் காலகள் எப்படி வளரப் போகிறது' என்றார். ஊழியர், 'தேவன் யாவற்றையும் செய்ய வல்லவர்' என்றார். அவரது மனதில் விசுவாசம் துளிர்த்தது. ஆவியானவர் செல்வந்தரிடம் 'இன்றே கடைக்குப் போய் உன கால்களுக்கு காலணிகளை வாங்கிக் கொள்' என்றார்.

செல்வந்தர் கடைக்குப்  போய் ஒரு ஜோடி காலணிகளைக் கேட்டார். கடைக்காரர் மேலும், கீழும் பார்த்தார். 'உங்களுக்குத்தான் கால்கள் இல்லையே எந்த அளவில் காலணி கொடுக்க வேண்டும்' என்றார். அவர் ஏழாம் நம்பர் காலணியை வாங்கி, வீட்டிற்கு வந்து தனது முடமான கால்களில் போட்டுப் பார்த்தார். அப்பொழுது பரிசுத்த ஆவியானவரின் வல்லமை அந்த அறையை நிரப்பிற்று. ஒரு நொடியில் மளமளவென்று கால்கள் வளர்;ந்தன. அதில் ஆச்சரியம் என்னவென்றால், அவர் வாங்கி வந்து ஏழாம் நம்பர் அளவில்தானே அவர் கால்கள் வளர்ந்தன. மகிழ்ச்சி தாங்க முடியாமல் துள்ளி குதித்தார். கர்த்தருக்கு நன்றி செலுத்தினார்.

'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது' (எபிரேயர் 11:1) என்று வேதம் கூறுகிறது. ஆபிரகாமின் விசுவாசமும் அப்படியே இருந்தது. சாத்தியமில்லாத சூழ்நிலையிலும் விசுவாசிக்க இயலாத நேரத்திலும் தனக்கொரு பிள்ளை பிறப்பான் என்று விசுவாசித்தார்.

இன்றும் உங்களை அழுத்துகிற பிரச்சனையின் மத்தியில் தேவனை விசுவாசிக்க இயலாத சூழ்நிலையில் இருக்கும் சகோதரனே, சகோதரியே, நானிருக்கும் இந்த வியாதியில், பிரச்சனையில் எந்த அற்புதமுமே நடக்க முடியாது, என்னை விடுவிக்க யாராலும் முடியாது நான் வாழ்வதை விட சாவது மேல் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ? என் பிரச்சனைக்கு முடிவே இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களோ?

இன்று அற்புதங்களை செய்யும் நம் தேவனை விசுவாசியுங்கள். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும், நீங்கள் கலங்கி கொண்டிருக்;கிற காரியத்தில் அற்புதங்கள் செய்து உங்களை விடுவிப்பது தேவனுக்கு இலேசான காரியம்.

நம் வியாதியின் மத்தியிலும், பிரச்சனைகளின் மத்தியிலும் அவற்றில் நாம் கஷ்டப்பட வேண்டும் என்று நம் தேவன் விரும்புவதில்லை. அவற்றை மாற்ற வல்லவர் அவரே என்ற விசுவாசம் நம் உள்ளத்தில் வரும்போது, இயற்க்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அற்புதம் செய்து, தேவன் நம்மை மகிழ்ச்சிக்குள்ளாக்குவார். கர்த்தர் அற்புதம் செய்யும்போது, மற்றவர்கள் வியப்புக்குள்ளாகி, இந்தக் காரியம் எப்படி நடந்தது என்று ஆச்சரியப்படும் வண்ணம், கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார். 


ஆமென்.... அல்லேலூயா...!

நன்றி- அனுதின மன்னா

Wednesday, 18 June 2014

ஆரோக்கியம் தந்து காயங்களை ஆற்றுகிறார்

அவர்கள் உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவன் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 30 : 17

தம் ஜனங்களாக தேவன் நம்மை நேசிக்கும்போது தேவன் தரும் ஆசீர்வாதங்களில் ஒன்று ஆரோக்கியம்
தந்து காயங்களை ஆற்றுவது.  இஸ்ரவேல் ஜனங்களை தேவன் மீட்டுக்கொண்டபின்பு மாரா என்ற இடத்திற்கு வந்தபோது கசப்பான தண்ணீர் கிடைத்ததின் நிமித்தம் முறுமுறுத்தார்கள்.  தேவன் அதை மதுரமாக மாற்றினார்.  தேவ ஜனங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை தந்தார். நானே உன் பரியாரியான கர்த்தர் என்றார்.  (யாத் 15 : 26)   நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன் என்று தன் ஜனங்களுக்கு தேவன் வாக்குபண்ணுகிறார். வேதம் சொல்லுகிறது.  தேவன் தாமே தம் ஜனங்களின் மீது வைத்த அன்பினால் தம்முடைய ஒரே பேரான குமாரனை சிலுவையில் பலியாக தந்து அன்பு கூர்ந்தார்.

ஏசாயா 53 : 4,5 சொல்லுகிறது.  “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களை சுமந்தார். நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.  நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.  நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது்.  அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்”.  தேவன் நம்மை தம் ஜனங்களாக மாற்றும்போது அவர் நமக்கு தெய்வீக சுகத்தை கட்டளையிடுகிறார்.

ஆனால் அவர்  ஜனங்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? யாத் 15 : 26-ல் வாசித்து பாருங்கள் “நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை கவனமாக கேட்டு அவர் பார்வைக்கு செம்மையானவைகளை செய்து அவர் கட்டளைகளுக்கு செவிகொடுத்து அவருடைய நியமங்கள் யாவையும் கைகொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்”.  நாமும் அவருடைய சொந்த ஜனங்களாய், அவர் நம் தேவனாக இருப்பதால் அவருக்கு கீழ்படிவோம்.  “வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” யாத் 23 :  25 வாக்கை சுதந்தரித்துக்கொள்வோம்.

ஜெபம்: நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று  எனக்காக சிலுவையில் ஜீவன் தந்த அன்பு தெய்வமே.. இயேசுவே..எனது வாழ்வின் காயங்களை ஆற்றி ஆரோக்கியம் வரப்பன்னும். நான் உமது சத்தத்தை கவனமாக கேட்டு உமது  பார்வைக்கு செம்மையானவைகளை செய்ய என்னை அர்பணிகின்றேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் நல்ல பிதாவே.

ஆமேன்.  கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக...!

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

இன்றைய வேத வசனம்

நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
உபாகமம் 28:6

Tuesday, 17 June 2014

நன்றி உள்ளம் நிறைவுடன்

அவருடைய கிருபையினிமித்தமும்,  மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.    - (சங்கீதம் 107:8).

இரண்டு நண்பர்கள் ஒருவரையொருவர் நெடு நாட்களுக்கு பிறகு சந்தித்தனர். ஒருவர் கண்களில் கண்ணீர் ததும்பி நின்றது. மற்றவர் அவரை பார்த்து,   'ஏன் என்ன ஆயிற்று'  என்று கேட்டார். அப்போது மற்றவர்,  'உனக்கு தெரியுமா,  மூன்று வாரத்திற்கு முன் என்னுடைய மாமா இறந்தார். அவர் எனக்கு 4,00,000 இலட்சம் என் பேரில் எழுதிவிட்டு போனார்' என்று கூறினார். அப்போது மற்றவர், 'சந்தோஷமான செய்திதானே'  என்றபோது, அவர்,  'இன்னும் கேள், இரண்டு வாரத்திற்கு முன்,  எனக்கே தெரியாத ஒரு உறவினர் என்பேரில் 8,00,000 எழுதிவிட்டு இறந்து போயிருக்கிறார்' என்றதும், 'அடேயப்பா, இன்னும் ஏன் சோகமாய் இருக்கிறாய்'  என்றதற்கு, அவர் 'இந்த வாரம் யாரும் மரித்து என்பேரில் எதையும் எழுதி வைக்கவில்லையே' என்று கூறினார்.


தொடர்ந்து ஒருவருக்கு இலவசமாக ஏதாவது கிடைத்து வந்து,  அது ஒரு முறை கிடைக்கவில்லை என்றால் இந்த மாதிரிதான் நடக்கும். ஓரு நண்பர் சொன்னார்,  'ஒரு மனிதனின் குணத்தை அறிய வேண்டுமென்றால் அவனுக்கு மாதாமாதம் குறிப்பிட்ட பணத்தை கொடுத்து,  பின் நிறுத்தி பார்'  என்று கூறினார். ஆம், அவர் சொன்னது சரிதான்,  ஒரு முறை நிறுத்தியவுடன்,  எத்தனை கோபம்,  எத்தனை முக வேறுபாடுகள்! என்னவோ நாம் கொடுக்கும் அந்த பணம் அவர்களுக்கு நாம் கொடுக்கவேண்டிய பாக்கி என்பது போல நடந்து கொள்ள தொடங்கினார்கள்.

அதைப்போலத்தான்,  கர்த்தர் நமக்கு கொடுக்கிற எல்லா ஆசீர்வாதங்களும்,  அதை பெற்று கொள்ளுகிற நாம் அவருக்கு நன்றியாக ஜீவிக்க வேண்டும்.  நாம் தங்கியிருக்கிற நல்ல வீடு, தினமும் குளிக்கும் நல்ல சுடத்தண்ணீர்,  குடிக்கிற நல்ல தண்ணீர், சுவாசிக்கிற சுத்தமான காற்று இவைகளை எல்லாம் அனுபவிக்கிற நாம் அதை கொடுக்கிற தேவனுக்கு நன்றி செலுத்துகிறோமா? தேவன் நமக்கு கிருபையாய் தருகிற இவை எல்லாவற்றையும் அனுபவிக்கிற நாம் அவருக்கு நன்றியாய் இருக்கிறோமா? ஒரு நாள் தண்ணீர் வரவில்லை என்றால் எத்தனை கஷ்டங்கள், எத்தனை முறுமுறுப்புகள்! மின்சாரம் கொஞ்சநேரம் தடைபடும்போது நமக்கு எத்தனை புழுக்கம்,  எத்தனை அசௌகரியங்கள்! இவையெல்லாம் நமக்கு கண்டிப்பாக கிடைக்க வே;ணடிய காரியங்கள் என்று நாம் எடுத்து கொள்கிறோம். ஆனால் அதையெல்லாம் நமக்கு கொடுக்கிற நம் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோமா?

'..நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும்,  நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும்,  நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும்,  நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால்,  நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும்,  நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு' (உபாகமம் 6:10-12)  என்று தேவன் நம்மை எச்சரிக்கிறார். நாம் வசிக்கிற பட்டணங்கள் எத்தனை வசதியானவை,  கிராமங்களில் மருத்துவ வசதி மிகவும் குறைவு,  மின்சார வசதி மிகவும் குறைவு, நாம் பழங்களை நட்டு,  உற்பத்தி செய்து சாப்பிடுவதில்லை, ஆனாலும் நாம் அருமையான பழ வகைகளை உண்கிறோம். வெளிநாட்டில் இருப்பவர்கள், விதவிதமான நாடுகளிலிருந்து வரும் பழவகைகளை உண்ணும் பாக்கியம்! திருப்தியாய் சாப்பிடுகிறோமே அது தேவனுடைய கிருபையல்லவா! பட்டினியாய் மடிகிற மக்கள் எத்தனைப்பேர்!

அவருடைய கிருபையினிமித்தமும்,  மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக என்று சங்கீதக்காரன் நமக்கு கூறுகிறார். அவர் தினமும் நமக்கு கொடுக்கும் அருமையான கிருபைளை நினைத்து அவரை துதிப்போமா! அவர் செய்கிற அதிசயங்களினிமித்தம் அவரை துதிப்போமா?  இந்த நாளில் இந்த காரியங்கள் நமக்கு தான் சொந்தம் என்று நினைப்பதைவிட தேவன் நமக்கு கிருபையாய் கொடுக்கிற காரியங்கள் என்று நினைத்து அவரை முழு இருதயத்தோடு துதிப்போமா?
ஆமென்....அல்லேலூயா!

நன்றி- அனுதின மன்னா

Sunday, 15 June 2014

ஆரோக்கியம் தந்து காயங்களை ஆற்றுகிறார்

அவர்கள் உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவன் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 30 : 17

தம் ஜனங்களாக தேவன் நம்மை நேசிக்கும்போது தேவன் தரும் ஆசீர்வாதங்களில் ஒன்று ஆரோக்கியம்
தந்து காயங்களை ஆற்றுவது.  இஸ்ரவேல் ஜனங்களை தேவன் மீட்டுக்கொண்டபின்பு மாரா என்ற இடத்திற்கு வந்தபோது கசப்பான தண்ணீர் கிடைத்ததின் நிமித்தம் முறுமுறுத்தார்கள்.  தேவன் அதை மதுரமாக மாற்றினார்.  தேவ ஜனங்களுக்கு ஒரு வாக்குத்தத்தத்தை தந்தார். நானே உன் பரியாரியான கர்த்தர் என்றார்.  (யாத் 15 : 26)   நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன் என்று தன் ஜனங்களுக்கு தேவன் வாக்குபண்ணுகிறார். வேதம் சொல்லுகிறது.  தேவன் தாமே தம் ஜனங்களின் மீது வைத்த அன்பினால் தம்முடைய ஒரே பேரான குமாரனை சிலுவையில் பலியாக தந்து அன்பு கூர்ந்தார்.

ஏசாயா 53 : 4,5 சொல்லுகிறது.  “மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களை சுமந்தார். நாமோ அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம்.  நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்.  நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது்.  அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்”.  தேவன் நம்மை தம் ஜனங்களாக மாற்றும்போது அவர் நமக்கு தெய்வீக சுகத்தை கட்டளையிடுகிறார்.

ஆனால் அவர்  ஜனங்களாகிய நாம் செய்ய வேண்டியது என்ன? யாத் 15 : 26-ல் வாசித்து பாருங்கள் “நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை கவனமாக கேட்டு அவர் பார்வைக்கு செம்மையானவைகளை செய்து அவர் கட்டளைகளுக்கு செவிகொடுத்து அவருடைய நியமங்கள் யாவையும் கைகொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்”.  நாமும் அவருடைய சொந்த ஜனங்களாய், அவர் நம் தேவனாக இருப்பதால் அவருக்கு கீழ்படிவோம்.  “வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்” யாத் 23 :  25 வாக்கை சுதந்தரித்துக்கொள்வோம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.
நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Saturday, 14 June 2014

கட்டுகளை அறுக்கும் கர்த்தர்

அந்நாளில் நான் உன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.  அந்நியர் இனி அவனை அடிமை கொள்வதில்லை.  எரேமியா 30 :  8

தேவன் நம்முடைய ஜனங்களாய் நம்மை ஏற்றுக்கொள்வது எவ்வளவு பெரிதான ஆசீர்வாதமாக உள்ளது.  முதலாவது தேவன் தம் ஜனங்கள் மீதுள்ள கட்டுகளை அறுக்கிறார்.  நம்மை தேவன் தம்முடைய ஜனங்களாய் மாற்ற முதலாவது அவர் நம் மீதுள்ள கட்டுகளை அறுக்கிறார்.  இஸ்ரவேல் ஜனங்களை மீட்டு கானான் தேசத்தை கொடுக்கிறார்.  வல்லமையுள்ள தேவன் இறங்கி வந்து ஓரேப் பர்வதத்தில் மோசேயை சந்தித்தபோது மோசேயிடம் முதலாவது நான் எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டுக்கொள்வேன் என்று வாக்குரைத்தார்.   அதன்படி பஸ்கா ஆட்டுக்குட்டியானது அடிக்கப்பட்ட அந்த இரவில் மாபெரும் இரட்சிப்பை கட்டளையிட்டார்.  புதிய ஏற்பாட்டில் தேவன் நம்மை பாவங்கள், சாபங்கள் ஆகிய கட்டுகளிலிருந்து விடுவிக்க தம்முடைய ஒரே பேரான குமாரன் இயேசு கிறிஸ்துவை பழுதற்ற ஆட்டுக்குட்டியாக    நமக்காக தந்தார்.

அதன் மூலமாக நாமெல்லாரையும் தம்முடைய சொந்த ஜனமாக ஏற்றுக்கொண்டார்.  அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். (யோவா 1 : 12)  நாம் முதலாவது நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு, சொந்த இரட்சகராக இயேசுவை ஏற்றுக்கொள்ளும் போதுதான் நாம் அவர் ஜனங்களாக மாறுகிறோம்.

கிறிஸ்தவ குடும்பத்தில் பிறப்பதால், ஒழுங்காக ஆலயத்திற்கு போவதினால் மடடும் அல்ல இயேசுவை நாம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது அவர் நம்மீது உள்ள பாவத்தின் கட்டுகளை சாபத்தின் கட்டுகளை அறுத்து இனி நம்மை ஒருவரும் அடிமை என்று கூறாதபடி நம்மை தம் சொந்த ஜனமாக ஏற்றுக்கொள்கிறார்.  ஆம் சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கட்டுகள் அறுக்கப்பட்டு அவர் ஜனங்களாய் இருப்பது எத்தனை மகிழ்ச்சி.

ஜெபம்: நான் உன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று வாக்கு உரைத்த சர்வ வல்ல தேவனாம் பிதாவே இயேசுவே பரிசுத்த ஆவியானவரே, இந்த நாளிலும் கூட எனது நிழலின் மறைவிலே என்னை பின் தொடர்ந்து வருகின்ற பாவ நுகத்திலிருந்து என்னை விடுவித்தருளும். நீர் என்னை உம்முடைய மகனாய் மகளாய் தெரிந்து கொண்டமைக்காக நன்றி. நீர் விரும்பும் மகனாக மகளாக வாழ என்னை அர்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிகின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்
 


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Friday, 13 June 2014

இன்றைய வேத வசனம்

நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.
ஏசாயா 38. 5

உலகத்தின் ஞானம்

ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ, அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். அந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. - (1கொரிந்தியர் 1:24-25).

மென்சா என்னும் குழுவில் அதிக அறிவுள்ளவர்களே சேர்த்து கொள்ளப்படுவார்கள். அவர்களுடைய I.Q. 140 க்கு மேல் இருக்கும். சமீபத்தில் அந்த குழுவை சேர்ந்தவர்கள் ஒரு கூட்டத்தை ஆயத்தப்படுத்தி இருந்தார்கள். அவர்களில் சிலர்,  கூட்டம் முடிந்தபிறகு சாப்பிடுவதற்கு பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு அவர்கள், உப்பு இருந்த பாட்டிலில் மிளகு பொடியும், மிளகுபொடி  இருந்த பாட்டிலில் உப்பும் இருந்ததை கண்டார்கள். இவர்கள்தான் அறிவாளிகளாச்சே,  என்ன செய்வது என்று யோசித்து,  யோசித்து,  கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி,  ஒரு பேப்பர் டவலில் உப்பை கொட்டி, அதை மாற்றுவது என்று முடிவெடுத்தார்கள். அப்போது அந்த வழியாக வந்த பணிப்பெண்ணிடம், இப்படி பாட்டில்கள் மாறி இருக்கிறது என்று கூறினார்கள். அப்போது அந்த பணிப்பெண்,  'ஐயோ சாரி! மன்னியுங்கள்' என்று சொல்லி விட்டு, மிளகு பொடியில் இருந்த மூடியை எடுத்து, உப்பு பாட்டிலிலும், உப்பில் இருந்த மூடியை எடுத்து மிளகு பொடி பாட்டிலிலும் மாற்றி வைத்து விட்டு போனாள். அங்கிருந்த அறிவாளிகள் அசடு வழிந்தார்கள்.

உலகத்தின் ஞானமும் அப்படிதான் இருக்கிறது. இன்று மனிதன் சொல்கிறான், சந்திரனில் காலடி எடுத்து வைத்து விட்டோம், எங்கள் சாட்டிலைட் மார்ஸை சுற்றி வந்து போட்டோ எடுத்து வருகிறது,  எங்கள் கம்பியூட்டரினால் செய்ய முடியாத காரியம் எதுவுமில்லை என்று தம்பட்டம் அடித்து கொள்கிறான். இத்தனை செய்கிற நாம், உலகத்தில் காணப்படும் பிரச்சனைகளுக்கு ஏதாவது தீர்வு கண்டு பிடித்திருக்கிறோமா?  Global Warming - யை தடுப்பதற்கு முயற்சிகள் எடுப்பதும்,  Climate Summit  கூட்டி சேர்ப்பதும்,  தேசங்களில் சமாதானம் ஏற்படுத்த பேச்சு வார்த்தைகள் நடத்துவதும் மனிதனின் மிகப்பெரிய பிரச்சனைகளுக்கு தீர்வாகாது. உலகின் ஞானிகள் என்று சொல்லுகிறவர்கள், பிரச்சனைகளின் மூலக்காரணமான தேவனை விட்டு பிரிந்து இருப்பதைக் குறித்து அறியாதவர்களாக, அறிந்தும் அதை கண்டும் காணாதவர்களாக கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இன்று கிறிஸ்தவ நாடுகள் என்று சொல்லிக் கொள்கிற மேலை நாடுகளின்  நிலைமை மிகவும் மோசமானது. தேவனை தேடாதபடி,  தங்கள் வாழ்க்கையில் கிறிஸ்து என்றால் யார் என்று கேட்கிறவர்களாக பெயர் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலைமை. தேவன் அருவருக்கிற அத்தனை அக்கிரமங்களையும் அளவுக்கு மீறி செய்து கொண்டிருக்கிற நாடுகள்! தேவ காரியங்களை குறித்து எச்சரித்து கொண்டிருக்கிற தேவ ஊழியர்கள் ஒரு புறமிருக்க, பாவத்தை தண்ணீரை போல குடித்து கொண்டிருக்கிற மக்கள். தேவ கோபம் இறங்குவதற்கு முன், அந்த மக்கள் மனம் திரும்ப மாட்டார்களா என்று ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கிற தேவன், 'என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி,  என் முகத்தைத் தேடி,  தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால்,  அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து,  அவர்கள் தேசத்துக்கு ஷேமத்தைக்கொடுப்பேன்' - (2நாளாகமம் -7:14) என்று தேவன் வாக்கு பண்ணியிருக்க, அவருடைய நாமத்தை தரித்திருக்கிற அவருடைய மக்களோ, தங்கள் தேசத்தின் ஷேமத்தை குறித்து கவலையற்றவர்களாக கர்த்தருடைய முகத்தை தேடாதபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 'கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து,  நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்;  நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்;  நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார்' (1நாளாகமம் 28:9ம் வசனத்தின் பின்பாகம்) என்று உறுதியாக எச்சரித்திருக்க, அவர்கள் தேவனை விட்டுவிட்டபடியினால்,  அவரும் அவர்களை கைவிடும் நிலைமையை அவர்களே ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த தேசங்களில் வாழும் உண்மையான கிறிஸ்தவ ஜனம் கர்த்தரை நோக்கி திறப்பின் வாசலில் நின்று கர்த்தரிடத்தில் அந்த நாடுகளுக்காக நின்று கதற வேண்டும். தேவன் உங்களை அந்த தேசத்திற்கு கொண்டு சென்ற நோக்கம் ஒருவேளை அதுவாக இருக்கலாமே!

தேவனை பற்றி கொள்ளாதவரை தேசத்தில் சமாதானம் ஒருநாளும் வராது. பிரச்சனைகளுக்கு தீர்வு ஒருநாளும் ஏற்படாது. ஆயிரம் முறை நாடுகளை சேர்த்து வைத்து, திட்டங்களை தீட்டினாலும,; சமாதான பேச்சு வார்த்தைகளை பேசினாலும் சமாதானம் ஒரு நாளும் ஏற்படாது. தங்களை தாழ்த்தி,  ஜெபம் பண்ணி,  தங்கள் பொல்லாத வழிகளைவிட்டு திரும்பினால்,  தேவன் அவர்களுடைய ஜெபத்தை கேட்டு,  அவர்கள் தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பார். இல்லாவிட்டால் எதிர்மறை காரியங்களே ஏற்படும். இந்த கடைசி நாட்களில் கர்த்தரை பற்றி கொள்வோம். அவரே நமது பிரச்சனைகளுக்கு பதில். அவரே சமாதான காரணர், அவரே நம் தேசத்திற்கு ஷேமத்தை கொடுப்பவர். ஆமென் அல்லேலூயா!


நன்றி- அனுதின மன்னா

Thursday, 12 June 2014

இன்றைய வேத வசனம்

உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.
மத்தேயு 6:21

Wednesday, 11 June 2014

அவர் மேல் விழுந்த ஆக்கினை

நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். - (ஏசாயா 53:5-6).





ஜோ என்பவர், கவர்னரின் தனிப்பட்ட ஆலோசகராக இருந்தார். கவர்னர் தன்னுடைய எல்லா காரியத்திலும் அவருடைய ஆலோசனையை கேட்காமல் ஒன்றையும் செய்ய மாட்டார். கவர்னரின் சிறந்த நண்பராக ஜோ இருந்தார். ஒரு நாள் திடீரென்று ஜோ தன் நித்திரையில் மரித்து போனார்.

அவர் மரித்த செய்தியை கேட்டவுடனே, அநேகர் கவர்னரிடம் வந்து,  தங்களுக்கு அந்த பதவியை தரும்படி வேண்டிக்கொண்டனர். ஆனால் யாருக்கும் அந்த பதவியை கவர்னர் தரவில்லை. அவர் சொன்னார், 'இந்த மனிதர்களால் அந்த மனிதரின் உடலை அடக்கம் பண்ணுகிற வரைக்கூட காத்திருக்க முடியவில்லை. அதற்குள் தங்களுக்கு அந்த பதவி வேண்டும் என்று கேட்கிறார்களே'  என்று வேதனைப்பட்டார்.

கல்லறையில் அவரை அடக்கம் பண்ணிவிட்டு, வரும் வழியில் ஒரு மனிதர் அவரிடம் ஓடி வந்து, 'ஐயா, ஜோ இருந்த இடத்திற்கு நான் வருவதற்கு ஏதாவது வழி உண்டா?' என்று கேட்டார். உடனே கவர்னர், 'ஓ இருக்கிறதே, சீக்கிரம் போங்கள், அந்த கல்லறை வெட்டியான், அந்த குழியை சீக்கிரம் மூடப் போகிறான்'  என்று கூறினார்.
.
நம்மை சுற்றி இருக்கிற மக்கள் அநேகர், 'அவள் அல்லது அவன் இருக்கிற இடத்தில் நான் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்' என்று எத்தனையோ முறை சொல்வதை கேட்டிருக்கிறோம். ஆனால் மரிக்கும் ஒருவரின் அல்லது மரித்த ஒருவரின் இடத்தில் நாம் இருப்பதை விரும்பமாட்டோம். இங்குதான் தேவனின் அன்பு நம்மிடத்தில் வெளிப்படுகிறது. நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிதுளூ நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார் (ரோமர் 5:7-8).

பாவத்தில் மரித்த நம்மை, நம் பாவத்தினிமித்தம் நாம் படவேண்டிய பாடுகளை கிறிஸ்து நமக்காக பட்டு, நாம் இருக்கவேண்டிய இடத்தில் அவர் நமக்காக மரித்ததினாலே தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். அல்லேலூயா!

நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

மட்டுமல்ல, இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். (குமாரனாகிய) அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது (கொலோசெயர்1:13-14).

நரகாக்கினையிலிருந்து நம்மை மீட்டு, நாம் அனுபவிக்க வேண்டிய பாடுகளை தாம் சுமந்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை இரட்சித்து மீட்ட அன்பின் குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். அந்த பரிசுத்தமுள்ள தேவனுக்கு நன்றியாக நாம் என்றென்றும் ஜீவிப்போமா?

ஆமென்...அல்லேலூயா..

நன்றி- அனுதின மன்னா

இன்றைய வேத வசனம்

உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்.
I பேதுரு 1.15

Tuesday, 10 June 2014

கர்த்தரே நமக்கு முன்பாக போகிறவர்

கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். ஏசாயா 52: 1

கர்த்தரே நமக்கு முன்பாக போகிறவர்.  தேவ ஜனங்களாக ஆட்டுமந்தையை நடத்தி செல்லும் நல்ல மேய்ப்பன், பிரதான மேய்ப்பன் அவர்.  அநேக வேளையில் மாநகரங்களில் அரசியல் தலைவர்கள் செல்லும்போது அனைத்து வாகனங்கள் போவது நிறுத்தப்பட்டு தலைவர்களின் வாகனங்கள் முன்னும், பின்னும் விலையேறப்பெற்ற பாதுகாவலர்களின்  பாதுகாப்புடன் செல்லும்.  அதுபோல தான் நம்முடைய தேவன் தம்முடைய ஜனங்களுக்கு முன்பாக செல்லுவார்.  முழு இஸ்ரவேல் ஜனங்களை தேவன் அப்படித்தான் நடத்தி சென்றார்.  தம் தாசனாகிய மேசேயை பார்த்து என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும்.  நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் (யாத் 34 : 14) என்றார்.  யோசுவாவுக்கு தேவன் தந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை அவர் அப்படியே நிறைவேற்றினார்.

இதோ, சர்வபூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது.  (யோசுவா 3 :  11)  யோர்தான் நதி தேவ ஜனங்களுக்கு குறுக்காக இருந்தபோது தேவனுடைய மகிமை விளங்கும் உடன்படிக்கைபெட்டி அதாவது தேவனே முன்பாக கடந்துசெல்கிறார்.  யோர்தானில் வெள்ளம் இருபுறமும் குவியலாய் நின்றது.  தேவஜனங்கள் உலர்ந்த தரைவழியாக கடந்து போகிறார்கள்.  அடுத்ததாக எரிகோ கோட்டை முன்பாக யோசுவாவும் தேவ ஜனங்களும் நிற்கிறார்கள்.  எரிகோவை பிடிக்க முடியாதபடி வாக்குத்தத்த கானான் தேசத்தில் நுழையவிடாதபடி கோட்டை நிற்பதை கண்டார்கள்.  எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது. ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை.  (யோசுவா 6 :1)  ஆனால் அங்கும் தேவன் சொல்லியபடி அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள். (யோசு 6 : 6) தேவனுடைய மகிமை முன்பாக சென்றது.  எக்காளங்களை ஊதுகையில் ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்.  எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்துவிழுந்தது. (யோசு 6 : 20)

எனக்கன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையிலும் கர்த்தர் தாமே உங்களுக்கு முன்பாக செல்வார்.   இதை வாசிக்கும்போதே உங்கள் முன்பாக காணப்படும் யோர்தான் நதிகள், எரிகோ கோட்டைகளை உடைத்து தேவன்தாமே வழிகளை உண்டுபண்ணுவார்.  உங்களை நடத்திச் செல்வார்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

நன்றி : விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Monday, 9 June 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
நியாயாதிபதிகள் 6.12

ஒரே இருதயமும் ஒரே மனமும்

அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது, அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். - (அப்போஸ்தலர் 4:31-32).
.
நாம் எல்லோரும் வெட்டுக்கிளிகளை பார்த்திருக்கிறோம். அது தனியாக தாவி தாவி வரும்போது அதனால் யாரும் பயப்படுவதில்லை. அதில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் அதுவே ஒரு முழு படையாக வரும்போதுஇ வழியில் காணப்படும் எந்தவிதமான பச்சையான இலைகளையும் விட்டுவைக்காமல், முழு பயிர்களையும் மேய்ந்து போடும்.
.
வெட்டுக்கிளிகள் ஒன்றாக இணைந்து செயலாற்றும் தன்மை கொண்டவை. தனியாக அவை எவற்றை செய்ய முடியாதோ அவற்றை அவைகள் கூட்டமாக இருக்கும்போது செய்து முடித்துவிடும். பூமியில் சிறியவைகளாயிருந்தும்இ மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு என்று நீதிமொழிகளில் ஆகூர் என்னும் ஞானி, அதில்  வெட்டுக்கிளிகளைக் குறித்து,  ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகள், அவை மகா ஞானமுள்ளவைகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
.
இந்த மிகச்சிறிய உயிரினமான வெட்டுக்கிளிகளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் உண்டு. கிறிஸ்துவின் விசுவாசிகள், தாங்கள் தனியாக இருந்து செய்யும் காரியங்களைவிட ஒரு குழுவாக, ஒரே மனதாக ஜெபித்து கர்த்தருக்கென்று உழைக்கும் போதுஇ அரிய பெரிய காரியங்களை செய்யலாம், பெரிய சேனையாக எழும்பி, கர்த்தர் தமது சபையை கொண்டு செய்ய இருக்கும் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.
.
இன்று சபைகளில் ஒருமனம் இல்லாதபடியால்,  சத்துரு வெற்றி எடுத்து கொண்டு இருக்கிறான். சபையின் ஊழியங்களில் அனைவரும் ஈடுபட வேண்டும். இரவு ஜெப கூட்டம் என்றால், அதற்கு வருகிறவர்கள், சபை ஆராதனைக்கு வருகிறவர்களில் பாதிகூட இருக்க மாட்டார்கள். ஒருமுறை இரவு ஜெபகூட்டத்தை தமிழ்நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்களில் முக்கியமானவரான மறைதிரு. சகோதரன் ஜீவானந்தம் அவர்கள் ஒரு இரவு ஜெப கூட்டத்திற்கு வரும்போது,  அது அளவுக்கதிகமான ஆசீர்வாதத்தை கொண்டுவரும். அப்படி ஒவ்வொரு ஜெபக் கூட்டமும் உங்கள் வாழ்வில் நீங்கள் எண்ணி பார்க்காத அளவு ஆசீர்வாதங்களை கொண்டு வரும் என்று கூறினார். நாம் நினைக்கிறோம்,  கர்த்தருக்காக நாம் தியாகமாக இரவு முழுவதும் கண்விழித்து ஜெபிக்க போகிறோம் என்று. ஆனால் கர்த்தர் அதையே நமக்கு ஆசீர்வாதமாக மாற்றுகிறார். சபையாக சுவிசேஷ ஊழியங்களுக்கு செல்லும்போது யார் யார் வீட்டில் இருக்கிறார்களோ, அத்தனைபேரும் ஒருமனமாய் ஊழியத்திற்கு செல்ல வேண்டும். ஒருமனமாய் எல்லா ஊழியங்களிலும் பங்கு பெற வேண்டும்.
.
ஒரு மனமாய் நாம் ஜெபிக்கும்போது,  உலகத்தையே அசைக்க முடியும். ஆதி திருச்சபை ஆரம்ப காலத்தில்  விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாயிருந்தார்கள். அவர்கள் ஜெபம்பண்ணினபோது,  அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது என்று பார்க்கிறோம்.
.
இன்று நம்மிடையே நிலவுகின்ற சிறுசிறு மனவருத்தங்கள், சிறுசிறு காரியங்கள் நம் சபையின் மூலமாக வர இருக்கின்ற பெரிய எழுப்புதலுக்கு தடையாக இல்லாதபடி ஒருவரையொருவர் மன்னித்து, சபையாக ஒருமனப்படுவோம். சத்துருவுக்கு எதிர்த்து நிற்போம். தேசத்தை கிறிஸ்துவுக்கு சொந்தமாக்குவோம். இந்த கடைசி நாட்களில் ஒருமனமாய் ஒரே இருதயமாய் கர்த்தர் சபையை தெரிந்து கொண்ட நோக்கத்தை நிறைவேற்றுவோம். தேசத்தை அசைப்போம். சேனையாக எழும்பிடுவோம். தேசத்தை கலக்கிடுவோம்.

ஆமென்.. அல்லேலூயா

நன்றி- அனுதின மன்னா

Sunday, 8 June 2014

இன்றைய வேத வசனம்

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.
யாக்கோபு 1:22

மன்னியாதிருத்தல் விளைவிக்கும் பேரிழப்பு!

"அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்." மத்தேயு:18:22.

கர்த்தராகிய இயேசு பேதுருவினிடத்தில் அவன் தன் சகோதரனை ஏழெழுபது தரம் மன்னிக்க வேண்டுமென்று சொல்லுகிறார். 'எழுபது' என்பது நம்முடைய ஜீவிய காலம் முழுவதையும் குறிக்கிறது. "எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம்" சங்:90:10 என நாம் வாசிக்கிறோம். 'ஏழு' பூரணத்தைக் குறிக்கும் ஒரு இலக்கமாகும். ஆகவே 'ஏழெழுபது தரம் மன்னித்தல்' என்பது, நாம் நம்முடைய ஜீவிய காலம் முழுவதும் மற்றவர்களை பூரணமாக மன்னித்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே பொருள்படும்.

நமக்கு விரோதமாகத் தப்பிதம் செய்தவர்களை மன்னியாதிருக்கும் ஒரு ஆவியை நம்மில் பேணி வளர்ப்பதினால் நாம் செலுத்த வேண்டியதாயிருக்கும் கடும் கிரயத்தைப் பற்றிச் சற்றாகிலும் நாம் உணர்வுள்ளவர்களாயிருந்தால், நாம் ஒருக்காலும் அதற்கு இடமளிக்கவே மாட்டோம். அவசியமற்ற, சொல்லொண்ணாத் துன்பங்களை அது நமக்கும் மற்றவர்களுக்கும் வருவிக்கிறது. அது சம்மந்தமாகக் கர்த்தராகிய இயேசு மத்தேயு:18:21-35 - இல் உரைத்திருக்கும் உவமை, நம் மனக்கண்களைப் பிரகாசிப்பிப்பதாய் இருக்கிறது. மத்தேயு:18:21-35 - இல் குறிப்பிடப்பட்டுள்ள 'ராஜா' கிறிஸ்துவையும், 'ஊழியக்காரர்கள்' நம்மையும் குறிக்கின்றது. அந்த ராஜா 10,000 தாலந்துகள் கடன்பட்டிருந்தவனை மன்னித்து விட்டான். நம்மை மன்னிக்கும்படியாகக் கர்த்தராகிய இயேசு கல்வாரிச் சிலவையில் செலுத்திய கிரயம் இதைப் பார்க்கிலும் மிகவும் அதிகமானதாகும். ஆனால் நம்முடைய பாவக் கடனிலிருந்து நாம் விடுதலை பெற்றிருப்பினும், மற்றவர்களை மன்னித்து நேசிக்கும் கடனிலிருந்து நாம் விடுபடவில்லை - நாம் பிறரை மன்னித்து நேசிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

"எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படி செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே (IIகொரி. 2:10-11)." "சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு" என்பது 'சாத்தான் அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நம்மை மேற்கொள்ளாதபடிக்கு' என்ற அர்த்தத்தில் கூறப்பட்டுள்ளது. அநேகரும் சாத்தானின் தந்திரங்களை அறியாதவர்களாயிருப்பதினாலேயே மற்றவர்களை மன்னிக்க மறுத்துவிடுகிறார்கள். 'பிசாசனவன் எப்போதும் என்னைப் பின்தொடருகிறான்' என்று சிலர் முறையிடுகிறார்கள். உங்கள் ஜீவியத்திலுள்ள பிறரை மன்னிக்க முடியாத ஆவியை அல்லது அறிக்கை செய்யப்படாத மறைவான பாவத்தைக் கண்டுபிடித்து விட்டுவிடுங்கள்; பிசாசனவன் உங்களைப் பின்தொடருவதை விட்டுவிடுவான்!! நாம் நம்முடைய ஜீவியத்தைத் தேவனோடு சரியான நிலையில் காத்துக்கொள்ளும்போது, யாதொரு பிசாசின் வல்லமைக்கும் நம் மேல் எவ்வித அதிகாரமுமிராது.


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

நன்றி: விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Friday, 6 June 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்.
நீதி 18.10

கிறிஸ்துவைப் போன்று மன்னித்தல்

"போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய (கிறிஸ்துவினுடைய) விலாவில் குத்தினான். உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது." யோவான் 19:34.

இந்த வேதவாக்கியம், மன்னித்தல் பற்றியதான ஆழமான ஆவிக்குரிய சத்தியங்கள் நிறைந்த ஒன்றாகும். போர்ச்சேவகன் நம் கர்த்தரை அவருடைய விலாவிலே உருவக்குத்தினபோது, உண்மையில் அது அவருடைய இருதயத்திற்குள் ஊடுருவி பாய்ந்தது! உடனே அவருடைய இருதயத்திலிருந்து இரத்தமும் தண்ணீரும் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. அந்த ரோமப் போர்ச்சேவகன் கிறிஸ்துவின் இருதயத்தை உருவக்குத்தினதுபோல, சில வேளைகளில் சிலர் நம்முடைய இருதயத்தை உருவக்குத்தக்கூடும் - ஈட்டிகளினால் அல்ல, தங்கள் நாவினாலே! அவர்கள் நம்மைப் புறக்கணித்து, அசட்டை பண்ணி, பரியாசம் செய்து, அல்லது நம்மைக் குறித்து எல்லாவிதமான தீமையான மொழிகளையும் பொய்யாகப் பேசக்கூடும். ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், இவை எல்லாவற்றிற்கும் நம்முடைய பிரதிக்கிரியை எவ்வாறிருக்கிறது என்பதே.

நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் இருதயம் குத்தப்பட்டபோது உண்டான பிரதிக்கிரியை என்னவாயிருந்தது? "உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது." கர்த்தராகிய இயேசுவின் இரத்தம் 'மன்னிப்பைக்' குறிக்கிறது. "இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது"(எபேசியர்.1:7). நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்முடைய இருதயத்தை உருவக்குத்தும்போது, நம்முடைய இருதயத்திலிருந்து அவர்களுக்கு 'மன்னிப்பு' புறப்பட்டு வர வேண்டும். தண்ணீர் அநேக காரியங்களைக் குறிக்கிறது. அவைகளில் ஒன்று 'தெய்வீக அன்பு' ஆகும். பரிசுத்த ஆவியினாலே நம்முடைய இருதயங்களில் ஊற்றப்படும் தேவ அன்பை 'ஜீவத் தண்ணீர்கள்' என்று கர்த்தராகிய இயேசு குறிப்பிட்டிருக்கிறார். (யோவான் 7:38,39; ரோமர் 5:5). நாம் 'உருவக்குத்தப்படும்'போது, நம்மை அவ்விதம் குத்துகிறவர்களுக்கு மன்னிப்பையும், தெய்வீக அன்பையும் வழங்க வேண்டும்.

சிலர் தங்களுக்கு விரோதமாகக் குற்றம் செய்தவர்களைச் சில வருடங்களுக்குப் பின்னர் மன்னிக்கப் பிரயாசப்படுகிறார்கள். ஆனால் "உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது" என்றே திருவசனம் சொல்லுகிறது. நாம் உடனடியாக மன்னித்து, நேரடியாக நிபந்தனையற்ற தெய்வீக அன்பை (agape) வழங்கக் கற்றுக்கொள்ள வேண்டும். போர்ச்சேவகன் கிறிஸ்துவை உருவக்குத்தியபோது இரத்தமும் தண்ணீரும் எங்கிருந்து புறப்பட்டது வந்தது? அவருடைய இருதயத்திலிருந்து! 'நான் உன்னை மன்னிக்கிறேன், உன்னை நேசிக்கிறேன்' என்று சில வேளைகளில் நாம் நம்முடைய வாயினாலே சொல்லலாம். ஆனால் மன்னித்தலும் அன்பும் நம்முடைய இருதயத்திலிருந்து புறப்பட்டது வர வேண்டும். இதுவே எல்லா வித்தியாசத்தையும் உண்டுபண்ணுகிறது; இதுவே கிறிஸ்துவைப் போன்று மன்னித்தலகும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.


நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Thursday, 5 June 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய்.
சங்கீதம் 128.5

Wednesday, 4 June 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார், அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
II தீமோ 4.18

இரக்கம் பாராட்டுவோம்!

அவருடைய இரக்கங்கள் மகா பெரியது-(2 சாமுவேல் 24:14).

இயேசு கிறிஸ்துவையும், இரக்கத்தையும் தனியாக பிரித்துவிட முடியாது. வியாதியஸ்தர்களை கண்டபோது தாம் மிகவும் களைப்பாயிருந்தபோதிலும், அவர்கள் மேல் மனதுருகி, அவர்கள் மேல் கைகளை வைத்தார் என்று வாசிக்கிறோம். பாவத்தில், வியாதியில் மூழ்கி தவிப்போருக்கு கிறிஸ்துவைப் போல ஆறுதல் அளித்து, நம்பிக்கை கொடுத்து, தேற்ற வேண்டிய கடமை கிறிஸ்துவை பின்பற்றுகிற நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. இரக்கம் பாராட்டுதல் என்றால் என்ன என்பதைக் குறித்த சில உண்மை சம்பவங்களை காண்போம்.

மேற்கு மிச்சிகன் மாநிலத்தில் பதினைந்து வயது சிறுவன் ஒருவன் புற்று நோயால் பாதிக்கப்பட்டான். கீமோ தெரப்பி என்னும் சிகிச்சை பெற்ற சிறுவனுக்கு தாங்கொண்ணா வேதனை.

ஒரு வேதாகம மாநாட்டில் செய்தி கொடுக்க வந்திருந்து ஜேக் வைர்ட்ஜன் என்பவர் மிகவும் வித்தியாசமான சரீர பாதிப்புடைய ஒருவருடன் உணவருந்த சென்றார். அந்த பாதிப்புடைய நபர், வாயில் வைக்கும் உணவை மெல்ல முடியாததினால் வாயிலிருந்து கொஞ்ச கொஞ்சமாக உணவு கீழே விழுந்து கொண்டே இருக்கும். ஆகவே தன் கழுத்தில் செயதிதாளைக் கட்டி வைத்துக் கொண்டு சாப்பிடுவார். யாரும் அவர் அருகில் அமர்ந்து சாப்பிட விரும்ப மாட்டார்கள். இவ்வாறு தனித்து விடப்பட்ட அவருடன் ஜேக் உணவருந்தி ஆறுதல் அளித்தார். இது ஒரு தனி நபர் மீது இரக்கம் காட்டும் செயலாகும்.

எலியட் என்பவர் காலை தோறும் வேதத்தை தியானிக்கும் பழக்கமுடையவர். அந்நேரத்தில் குப்பையை அகற்றும் நபரை பார்க்க நேரிட்டால் தனது தியானத்தை நிறுத்திவிட்டு, வெளியே சென்று இன்முகத்தோடு அவரை விசாரித்து, உற்சாகப்படுத்துவார். அந்த குப்பை அகற்றும் தொழிலாளிக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி, தன்னையும் ஒருவர் மதித்து பேசுகிறாரே என்று! சிறு காரியமாயிருந்தாலும் அது ஒருவரை திடப்படுத்துகிறது என்றால் அதை செய்ய தயங்கலாமா? இதுவும் இரக்கத்தின் விளைவுதானே!
.
பால் என்பவர் ஹோட்டல் ஒன்றிற்கு சென்றிருந்தபோது அருகில் அமாந்திருந்த பிரட்டி என்பவருக்கு நற்செய்தியை அறிவித்தார். அவர் விரைவிலேயே கர்த்தரை ஏற்றுக் கொண்டார். சில காலம் கழித்து பிரட்டி புற்று நோயால் பாதிக்கப்பட்டவராக, ஒரு சிறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பால் அவரை நாள்தோறும் சென்று சந்திப்பார். அவரது தேவைகள் அனைத்தையும் செய்து முடிப்பார். அவர் மரணமடையப் போகும் இரவில் அவரருகே வேத வசனங்களை கூறிக்கொண்டே இருந்தார். இதுவும் இரக்கும் பாராட்டுதலே!

பிரியமானவர்களே, இரக்கம் பாராட்டுதல் என்ற உடன் நீங்கள் வேறு ஏதோ பெரிய பெரிய காரியங்களை நினைத்து ஐயோ அப்படி செய்ய என்னிடம் அதிக பணமில்லையே என்று எண்ண வேண்டாம். சிறு சிறு காரியங்களை நமது உறவினர்களல்லாதவர்களுக்கு தியாகத்தோடு செய்யும் காரியங்கள் தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது.

வீட்டிலேயே அடைபட்டு கிடக்கும் வயதானவர்களோடு பேசி நலம் விசாரிப்பது, நோய்வாய்ப்பட்டவர்களையும், காயமடைந்தவர்ளையும் சென்று விசாரிப்பது, படுக்கையில் இருப்பவர்களுக்கு உணவு சமைத்து கொண்டு செல்வது, உடல் ஊனமுற்றவர்கள், தனிமையில் வாடுபவர்களை கரிசனையோடு விசாரிப்பது போன்ற செயல்களை நாம் செய்ய முடியும்தானே!

நம்முடைய தேவன் நம் மேல் வைத்த இரக்கத்தினாலே நாம் நிர்மூலமாகாமல் இருக்கிறோம். ஏனெனில் அவருடைய இரக்கங்களுக்கு முடிவே இல்லை (புலம்பல் 3:22). நாமும் மற்றவர்களிடம் இரக்கத்தை வெளிப்படுத்துவோம். நம்மால் இயன்றதை மற்றவர்களுக்கு செய்வோம். கர்த்தர் அதில் பிரியமாயிருப்பார்.
னென்றால் அவனுடைய  தலையிலிருந்த முடி எல்லாம் கொட்டி விட்டது. நோயின் முடிவு என்னவாகும் என்று அறியாத நிலையில், கிட்டத்தட்ட வழுக்கை தலையோடு பள்ளிக்கு சென்றால் வெட்கமாயிருக்குமே என்று தயங்கினான். ஆனால் பள்ளிக்கு அவன் சென்ற போது அவனுக்கு மிகப்பெரிய வியப்பு காத்திருந்தது. அவனுடைய வகுப்பில் பலர் மொட்டையடித்து வந்திருந்தனர். அவன் மீது அன்புகொண்ட சிறுவர்கள் புதிய முறையில் தங்களது இரக்கத்தை காட்டினர். நண்பர்களின் அச்செயல் அந்த சிறுவனின் மன வேதனையை குறைத்தது.
ஆமென் அல்லேலூயா!

நன்றி: அனுதின மன்னா

Tuesday, 3 June 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.
ஏசாயா 26.4

Monday, 2 June 2014

இன்றைய வேத வசனம்

ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
சங்கீதம் 103:6

கைகளை தட்டி கர்த்தரை துதிப்போம்

ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. (அல்லேலூயா.) சங்கீதம் 150 : 5-6

நம்மில் அநேகர் ஆலயத்திற்கு சென்று கைகளை தட்டி ஆராதிக்கின்றோம். நாம் ஏன் கைகளை தட்டி ஆராதிக்கின்றோம். கைகளை தட்டுவதே ஒரு தனி குஷி தான் என்று நினைகின்றீர்களா?. மருத்துவ ஆய்வின் படி கைகளை தட்டினால் ஆரோக்கியமாக இருக்கலாம். சரி, கைகளை தட்டுவதால் கிடைக்கும் உடல்நல பயன்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கைகளை தட்டினால் நரம்புகள் சீராக செயல்படும். இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல் போன்ற உறுப்புகளுடன் நரம்புகள் இணைய இது பெரிதும் உதவும். கைகளை தட்டுவதால், இதய நோய்கள் மற்றும் ஆஸ்துமா சம்பந்த பிரச்சனைகளுக்கு பெரிய தீர்வு கிடைக்கும். கைகளை தட்டினால் மன அமைதி கிட்டும். மேலும் இது உங்கள் உடலில் உள்ள இரத்தத்தின் வெள்ளையணுக்களை திடப்படுத்துவதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் எவ்வகையான நோய்களில் இருந்தும் உங்கள் உடலை இது பாதுகாக்கும்.




கைகளை தட்டுவதால், குழந்தைகளின் ஆற்றல் திறனை அதிகரித்து அவர்களின் கல்வி சார்ந்த செயல் திறனை மேம்படுத்தும். அதனால் அவர்களின் கையெழுத்து அழகாகும், சிறப்பாக எழுத வரும், எழுத்துப்பிழையும் குறையும். கைகளை தட்டும் போது இரத்த ஓட்டம் ஊக்குவிக்கப்படும். அதனால் தமனி மற்றும் அசுத்த இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகள் அனைத்தும் நீங்கும். இதில் கெட்ட கொலஸ்ட்ரால் நீங்குவதும் அடங்கும்.

கைகளை தட்டுவதால் பல நன்மைகளை நாம் பெற்றுக்கொள்ளலாம். இஸ்ரயேல் மக்களின் பண்டிகை நாட்களின் ஆராதனையில் துவக்கமாக “ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக" என்ற இந்த 150வது சங்கீதத்தை பாடுவார்களாம். நாமும் கைகளை தட்டி கரத்தரை துதித்து பாடுவோம். நோய்களை விரட்டுவோம்.



கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக.

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

Sunday, 1 June 2014

இன்றைய வேத வசனம்

கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள்.
சங்கீதம் 105.4