Friday, 27 June 2014

புலம்பலின் சுவர்- Western Wall

இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே,  இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். - (மத்தேயு 24:1-2).


இயேசுகிறிஸ்து ஒலிவமலையிலிருந்து சொன்ன இந்த முழு அதிகாரமும் இரண்டாவது மலைபிரசங்கம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வசனங்கள் மிகவும் முக்கியமானவை, ஏனென்றால் நான்கு சுவிசேஷங்களில் மூன்று சுவிசேஷங்களில் இந்த வசனங்கள் எழுதப்பட்டிருக்கிறது.  (மத்தேயு 24, மாற்கு 13,14, லூக்கா 21,22). இந்த வசனங்கள் கர்த்தரின் வாயிலிருந்து வந்த பெரிய (நீளமான) தீர்க்கதரிசன வார்த்தைகள் எனவும் கூறலாம்.

ஓலிவ மலையிலிருந்து நாம் நேராக பார்த்தால் தேவாலயம் வெகு தெளிவாக காணலாம். அப்போதிருந்த தேவாலயம்,  உலக அற்புதங்களில் ஒன்றாக இருந்தது. எல்லா வகையிலும் யூதர்கள் பெருமைபட்டுக் கொள்ளும் வண்ணம்,  அந்த தேவாலய கட்டிடம் சிறந்த கற்களினாலும்,  காணிக்கைளினாலும் அலங்கரிக்கப்பட்டு (லூக்கா 21:5) கெம்பீரமாய் நின்றிருந்தது. அதை பார்த்துதான் இயேசுகிறிஸ்து  'இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்'  என்றார். அந்த சமயம்,  சீஷர்களுக்கு அது எப்படி சாத்தியமாகும் என்று யோசித்திருக்கலாம். ரோமர்கள் கி.பி. 70ல் எருசலேமை பிடித்தபோது,  அநேக யூதர்கள் அந்த தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். அப்போது அங்கிருந்த எல்லாவற்றையும் எரித்த ரோமர்கள்,  தேவாலயத்திற்கும் தீ வைத்தனர். தீ பற்றி எரிந்தபோது,  சுத்த தங்கத்தினால் செய்யப்பட்டிருந்த அதனுடைய கோபுரத்தின் தங்கம்  உருகி வழிந்தோடியது. அங்கு தஞ்சம் புகுந்திருந்த யூதர்கள் எரிந்து சாம்பலாயினர். தங்கம் உருகி அந்த கட்டிடத்தின் கற்களில் வழிந்திருந்தமையால் ரோம அதிகாரிகள், அந்த தங்கத்தை எடுக்க வேண்டி, ஒரு கல்லையும் வைக்காதபடி தங்கத்தை எடுக்கும்படியாக ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி,  எல்லாவற்றையும் இடித்து போட்டனர். அந்த முழு கட்டடிடமும் இருந்த இடம் தெரியாதபடி இடிக்கப்பட்டு போயிற்று.


இயேசுகிறிஸ்து கூறின தீர்க்கதரிசன வார்த்தையின்படியே தீத்து இராயனால் கி.பி. 70ல் முழு எருசலேமும் தரைமட்டமாக்கப்பட்டது. அதில் இருந்த 16,00,000 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

மோரியா மலை என்று அல்லது ஆங்கிலத்தில் Temple Mount  என்றழைக்கப்படும் இடத்தில் அமைந்திருந்த அந்த தேவாலயம் ஏரோது அரசனால் கட்டப்பட்டதாகும். சாலொமோன் இராஜா கட்டின தேவாலயம் நேபுகாத்தநேச்சாரினால் இடிக்கப்பட்ட பின்பு, ஏரோது இராஜாவினால் கி.மு. 19-ல் இயேசுகிறிஸ்து இருந்த காலத்தில் இருந்த தேவாலயம் கட்டப்பட்டது. அது இயேசுகிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தின்படி,  கி.பி. 70ல் தீத்து இராயானால் இடிக்கப்பட்டது. இப்போது மீந்திருப்பது, புலம்பலின் சுவர் என அழைக்கப்படும் Western Wall மட்டுமே ஆகும். இது ஆலயத்தின் சுவர் அல்ல, ஆலயத்தை சுற்றியிருந்த சுவராகும்.



இந்த மீதமிருக்கிற புலம்பலின் சுவர் தேவாலயத்தின் ஒரு பகுதி என்பதால்,  யூதர்களுக்கு மிகவும் பரிசுத்தமான இடமாகும். அவர்களுக்கு தேவாலயம் இல்லாததால்,  அவர்கள் இந்த இடத்தில் கூடி தங்கள் வேத புத்தகமாகிய தோராவை வாசிப்பதும், அந்த சுவரின் முன் நின்று முன்னும் பின்னும் ஆடினவர்களாக, தங்கள் ஜெபங்களை ஏறெடுக்கிறார்கள். அவர்கள் இன்னும் மேசியா வர காத்திருக்கிறார்கள். மேசியா வந்து,  தங்கள் தேவாலயம் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பதே அவர்களுடைய ஜெபமாக இருக்கிறது.

அந்த சுவரின் இடுக்குகளில் ஆயிரக்கணக்கான ஜெப விண்ணப்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. எல்லா நாட்டை சேர்ந்தவர்களும் வந்து அந்த இடத்தில் தங்கள் விண்ணப்பங்களை வைக்கலாம்.

புலம்பலின் சுவரில் ஆண்களுக்கென்று பிரத்யேகமாக ஜெபிப்பதற்கு என்று ஒரு பெரிய அறை சுவரை ஒட்டி அமைக்கப்பட்டுளளது. அதில் பெண்கள் செல்வதற்கு அனுமதியில்லை. அங்கு செல்லும் எந்த ஆணும் தங்கள் தலையில் யூதர்கள் அணியும் தொப்பியை அணிந்துதான் செல்ல வேண்டும். பெண்கள் ஜெபிக்க அந்த சுவரிலேயே இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு பக்கம் பெண்கள் ஜெபிக்கிறார்கள். அவர்கள் கைகளில் ஒரு ஜெப புத்தகம் இருக்கிறது. அதை அந்த சுவரின் முன் நின்று முன்னும் பின்னும் ஆடி ஆடி சொல்லி கொண்டிருக்கிறார்கள்.


நாங்கள் அங்கு சென்றிருந்தபோது,  13 வயதான ஆண்மக்களை அங்கு தேவனுக்கு ஒப்புக்கொடுக்கும்படி அந்த இடமே பெரிய விழா கோலம் பூண்டிருந்தது. ஆனாலும் பெண்கள் (அம்மாமார்), தனியாகதான் நின்று அந்த கொண்டாட்டத்தை பார்க்கவேண்டியிருந்தது.

புலம்பலின் சுவரை ஒட்டி,  பெரிய இடம் ஆயிரக்கணக்கான யூதர்கள் வந்த ஜெபிக்கும்படியாக ஒதுக்கப்பட்டள்ளது. ஆந்த இடத்தின் சுவரில் ஆறு கறுப்பு நிற விளக்குகள் தாவீதின் நடசத்திரத்துடன் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அது என்ன என்று கேட்டபோது, ஹிட்லரின் காலத்தில் அவனால் கொல்லப்பட்ட ஆறு இலட்சம் யூதர்களை நினைவு கூறும்பொருட்டு அந்த விளக்குகள் தொடர்ந்து எரியப்பட்டு வருகின்றது என்று கூறினார்கள்.


மேசியாவின் வருகைக்கு எதிர்பார்த்து கொண்டிருக்கும் யூதர்கள் 2000 வருடத்திற்கு முன் கிறிஸ்து வந்து அவர்களுக்காகவும் தமது குற்றமற்ற இரத்தத்தை சிந்தி மரித்தார் என்பதை இன்னும் அறியாதவர்களாகவே இருக்கிறார்கள். 'அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை'  - (யோவான் 1:11). அந்திகிறிஸ்து வந்து, அவர்களுக்கு தேவாலயம் கட்டப்படுவதற்கு உதவி, பின் அந்த தேவாலயத்தில் நானே மேசியா என்று கூறும்போதுதான் யூதர்கள் அறிந்து கொள்வார்கள் இயேசுகிறிஸ்துவே மேசியா என்று. அவர்கள் இரட்சிக்கப்படுவதற்காக நாம் ஜெபிக்க வேண்டும். ஏனெனில் அந்திகிறிஸ்துவின் காலத்தில் அதிகமாய் பாடுபட போகிறவர்கள் யூதர்களும் கிறிஸ்தவர்களுமே! 'எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்,  உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக'  - (சங்கீதம் 122:6).


ஆமென் அல்லேலூயா!

நன்றி அனுதின மன்னா

No comments:

Post a Comment