Thursday, 26 June 2014

மற்றவர்களை காணும் விதம்


இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி?  மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். -  (மத்தேயு  7:4-5).

ஒரு வயதான பெண்மணி,  தன்னுடைய பல்லின் வேதனைக்காக ஒரு பல் டாக்டரிடம் சென்றிருந்தார்கள். அவர்கள் முதல் தடவையாக அந்த வைத்தியரிடம் சென்றிருந்தார்கள். காத்திருக்கும் அறையில் டாக்டரின் அழைப்பிற்காக காத்திருந்தார்கள். அப்போது அங்கு ஒரு பலகையில் அந்த டாக்டரின் பெயரும் அவருடைய பட்டங்களும் எழுதப்பட்டிருந்தன. அந்த வயதான பெண்மணி அமர்ந்திருக்கும்போது, அவர்களுக்கு அந்த பெயரில், ஒரு அழகிய உயரமான வாலிபன் 40 வருடங்களுக்கு முன் தன்னோடு படித்தது ஞாபகத்திற்கு வந்தது. ஒரு வேளை அந்த மாணவனாய் இருக்குமோ என்று அவர்கள் யோசித்து கொண்டே இருக்கும்போது, அவர்களை அழைக்கும் சத்தம் கேட்டது.

உள்ளே சென்ற அந்த மாணவன்தானா என்று பார்த்தபோது, நிச்சயமாய் அந்த மாணவனாக இருக்க முடியாது என்று தீர்மானித்தார்கள். ஏனெனில் அந்த வைத்தியர்,  மிகவும் வயதானவராக,  முடியெல்லாம் கொட்டி,  பாதி மொட்டையாக இருந்ததை பார்த்து,  ஒருபோதும் இந்த வயதான மனிதர் என்னோடு படித்தவராக இருக்க முடியாது என்று நினைத்தவர்களாக, தான் படித்த பள்ளியின் பெயரை சொல்லி, 'இந்த பள்ளிக்கு நீங்கள் சென்றிருக்கிறீர்களா' என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்,  'ஆம் ஆம் நான் அங்கு தான் படித்தேன்'  என்று கூறினார். எந்த வருடம் எனறு கேட்டதற்கு அவர் வருஷத்தை சொன்னார். அப்போது அந்த வயதான பெண்,  சந்தோஷத்தோடு,  'நீர் என்னுடைய வகுப்பில்தான் இருந்தீர்'  என்று கூறினார்கள். அதற்கு அந்த வைத்தியர்,  'அப்படியா?  நீங்கள் எந்த பாடத்தை சொல்லி கொடுத்தீர்கள்'  என்று கேட்டார்.

அநேக முறை நாம் நம் வயதில் இருக்கும் மற்றவரை பார்த்து, எனக்கு இன்னும் அந்த அளவு வயதாகி விடவில்லை என்று நினைத்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்க்கும்போது நாம் நினைக்கிற மாதிரிதான் அவர்களும்  நினைக்கிறார்கள் என்பதை மறந்து போகிறோம். சில குண்டு பேர்வழிகளை பார்க்கும்போது,  ஆஹா நாம் அந்த அளவு குண்டாக இல்லை என்று நினைத்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் நம்மை பார்க்கும்போது,  அப்பா,  இந்த அம்மா எவ்வளவு குண்டு என்று நினைக்கிறார்கள் என்பது நமக்கு தெரிவதில்லை. நம்முடைய சரீர அளவு நமக்கு தெரிவதில்லை.

அதுப்போல நம்முடைய ஆவிக்குரிய வாழ்விலும்,  சிலருடைய வாழ்க்கையை பார்த்து நாம் நல்ல வேளை அந்த அளவு பாவம் செய்யவில்லை என்று நினைத்து கொள்கிறோம். அதுப்போல அவர்களும் தங்கள் வாழ்வில் உள்ள பாவங்களை பார்க்காதபடி, நாம் காண்கிற வண்ணமே காண்கிறார்கள் என்பதை நாம் மறந்து போகிறோம்.

அதைத்தான் இயேசுகிறிஸ்துவும் 'இதோ,  உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்' என்று கூறினார். மற்றவர்கள் செய்கிற தவறுகள் நமக்கு பெரிய காரியமாகவும்,  அது எப்படி அவர்கள் செய்யலாம்,  கடவுள் பயம் இல்லை?  எனறு சொல்கிற நாம் அதையே நாம் செய்ய நேரிடும்போது அது நம்முடைய பெலவீனம் என்று சொல்வது நிச்சயமாக மாய்மாலமான காரியமாகும்.

இன்று நம்முடைய உருவத்தை கண்ணாடியில் பார்க்கும்போது, உண்மையில் நாம் இருக்கும்வண்ணமாகவே ஒத்துக்கொள்வோம். அதுப்போல வேத வசனமாகிய கண்ணாடியில் நம் வாழ்க்கையில் காணப்படும் குற்றங்களை ஒத்து கொண்டு நம்முடைய வாழ்க்கையை இருக்கிற வண்ணமாகவே கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்போம். முதலாவது நாம் நம்மை காண்ணாடியில் பார்க்கிற மாதிரி மற்றவர்களையும் பார்ப்போம். அப்படி இல்லாதபடி,  மற்றவர்களை பூதக்கண்ணாடியிலும் நம்மை சாதாரண கண்ணாடியிலும் பார்க்கும்போது, அநேக வித்தியாசங்கள் தோன்ற தான் செய்யும். எப்போது நம்மை பார்க்கிற மாதிரி மற்றவர்களை பார்க்கிறோமோ அப்போதுதான் நாம் ஆவிக்குரிய வாழ்விலும் உயருவோம்,  முன்னேறுவோம்.

முதலாவது நம் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போட்டுவிட்டு,  பின்பு நம் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்க்கும்படியாய் கர்த்தர்தாமே நம் ஒவ்வொருவருக்கும் உதவி செய்வாராக!

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

No comments:

Post a Comment