Monday, 18 August 2014

வேதத்தை அந்நியமாக எண்ணாதிருப்போம்

கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு. - (எசேக்கியேல் 33:11).

கிரீஸ் நாட்டை ஆண்ட மன்னர்களில் அர்கியஸ் என்ற மன்னரும் ஒருவர். அவர் உலகில் என்னென்ன சிற்றின்பங்கள் உண்டோ அவை எல்லாவற்றையும் அனுபவித்து வாழ்ந்து வந்தவர். நாட்டின் மக்களின் நலனில் சிறிதேனும அக்கரையின்றி, தன் வாழ்வை சிற்றின்பத்திலும், கேளிக்கைளிலும் செலவழித்து வந்தார். அதனால் அவரது அரண்மனையில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சீர்கேடுகள் நிறைந்தது.

இவற்றைக் கண்டு, ஒழுக்கமுள்ளவர்கள் யாரும் சுகமாக வாழ முடியாத நிலைமையினால், இந்த ராஜாவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஒரு கூட்ட மக்கள் கூடி தீர்மானித்தனர்.  அதற்கான சரியான வேளையையும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.

மக்களில் பெரும்பான்மையோர் தனக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதை அறியாத ராஜா, வழக்கம் போல கேளிக்கைகளில் மூழ்கி இருந்தார். ஏதென்ஸ் நகரில் மன்னருக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்தார். மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. உடனே மன்னருக்கு விரோதமான சதித்திட்டத்தைக் குறித்தும், அதிலிருந்த தப்பித்துக் கொள்ளும் வழிவகைகளையும் குறித்து விரிவாக ஒரு கடிதத்தை எழுதி, தனது நம்பகமான உதவியாளர் மூலமாக இராஜாவுக்கு அனுப்பி வைத்தார்.

நண்பரின் உதவியாளர் அரண்மனை வந்தபோது, அன்றும் மன்னர் பெரிய விருந்தில் ஈடுபட்டிருந்தார். மன்னரிடம்,  'ஏதென்ஸ் நாட்டிலுள்ள உமது நண்பர் ஒரு கடிதத்தை கொடுத்தனுப்பியிருக்கிறார். இதை உடனே வாசிக்கும்படியாக உங்களிடம் சொல்லி அனுப்பியிருக்கிறார். ஏதோ அபாயம் வரப்போகிறதாம்' என்று கடிதத்தை அவரிடம் கொடுத்தனர். மன்னரோ, மதுமயக்கத்தில் 'அபாயமா? என் நாட்டிலா?' என்று ஏளனமாக சிரித்து, 'வரும்போது பார்த்துக் கொள்ளலாம்' என்று அந்த கடிதத்தை வாசிக்கவும் இல்லை, அதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவும் இல்லை. அந்தக் கடிதம் தரையில் வீசப்பட்டு, கால்களால் மிதிப்பட்டது.

விருந்தின் உச்சக்கட்டத்தை நெருங்கியபோது, சதிகாரர்கள் உணவு பறிமாறும் பணியாளர்களைப் போல உடையணிந்து, மன்னரின் மீது பாய்ந்து, அதே இடத்தில் குத்தி கொன்றனர். மன்னர் இரத்த வெள்ளத்தில் மிதந்தார். நண்பரின் கடிதம் இரத்தத்தில் நனைந்தது. வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மன்னருக்கு பார்த்துக் கொள்ள நேரம் கூட கிடைக்கவில்லை.

பிரியமானவர்களே, கர்த்தர் நம் மீது கொண்ட அளவற்ற அன்பினால் நமக்கு வேதத்தை எழுதி கொடுத்திருக்கிறார். 'என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்' (ஓசியா 8:12) என்று கர்த்தர் நம்மைக் குறித்து சொல்லாதபடி, அந்த அற்புத வேதத்தை எடுத்து வாசிப்போம்.

வேதத்தில் நாம் எப்படி வாழ வேண்டும் என்று அநேக ஆலோசனைகள் சொல்லப்பட்டிருக்கிறது. 'பாவம் செய்கிற ஆத்துமா சாகும்' என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. பாவத்திலிருந்த விடுதலையாகும் வழிகள் சொல்லப்பட்டிருக்கிறது. கடைசி காலத்தில் நடைபெற இருக்கும் சம்பவங்கள், ஏற்படப் போகும் அழிவுகள், அதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் வழி என்று எல்லாமே எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை நமக்கு சொந்தமாக எடுத்துக் கொள்ளாமல், வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று கவலையற்று இருந்து விட்டால் அந்த நாள் வரும்போது, அந்த இராஜாவைப் போல எச்சரிப்புக் கொடுக்கப்பட்டும், அதைக் குறித்து பயமில்லாமல், தன்னிச்சையாக வாழ்ந்து, கெட்டதுப்போல காரியங்கள் நேரிடலாம்.

'கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு' என்ற வார்த்தைகளின்படி, நம்முடைய பொல்லாத வழிகளை விட்டு, திரும்பி, கர்த்தரைப்பற்றிக் கொள்வோம். கர்த்தர் நமக்கு எழுதிக் கொடுத்திருக்கிற மகத்துவமான வேதத்தை வாசித்து, வரும் அழிவுக்கு தப்பித்துக் கொள்வோம்.

ஆமென் அல்லேலூயா!
நன்றி- அனுதின மன்னா

No comments:

Post a Comment