Thursday, 21 August 2014

யார் புத்தியுள்ள கண்ணிகைகள்

பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக் கொண்டு மணவாளனுக்கு எதிர்கொண்டு போகப் புறப்பட்ட பத்து கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. அதில், ஐந்து பேர்  புத்தியுள்ளவர்கள் ஐந்து பேர்  புத்தியில்லாதவர்கள் என்று இயேசு கூறிய உவமையை மத்தேயு 25 –ம் அதிகாரத்தில் வாசிக்கின்றோம்.

பத்து கண்ணிகைகள் உவமையில், மணமகன் இயேசு அவரை சந்திக்க ஆயத்ததோடு இருந்த புத்தியுள்ள ஐந்து கண்ணிகைகளை மணமகளோடு கூட திருமண வீடாம் பரலோகத்திற்கு அழைத்து சென்றதாக பார்த்தோம். மேலும் ஆயத்ததோடு இல்லாத புத்தியில்லாத ஐந்து கண்ணிகைகள் கைவிடப்பட்டதையும் வாசிக்கின்றோம்.

தற்போதைய உலகம் முழுக்க முழுக்க இந்த உவமையை அடிப்படையாக கொண்டுதான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா. ஆம் பிரியமானவர்களே, நமக்காய் சிலுவையில் மரித்த இயேசு கிறிஸ்துவானவர் அவருடைய பிள்ளைகள்  புத்தியுள்ளவர்களாக இருக்க விரும்புகின்றார்.

சாத்தானோ, இயேசுவின் பிள்ளைகள் புத்தியில்லாதவர்களாக இருக்க வேண்டுமென விரும்புகின்றான். எப்படி ஒரு குடும்பத்தில் புத்தியுள்ள பிள்ளைகளும், புத்தியில்லாத பிள்ளைகளும் இருக்கின்றார்களோ அதேபோல இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டுள்ள அவரது பிள்ளைகளிலும் புத்தியுள்ளவர்கள் மற்றும் புத்தியில்லாதவர்கள் இருக்கின்றார்கள்.
இந்த உவமையில் இயேசு கிறிஸ்து அறிவுள்ளவர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல்  புத்திசாலி என்ற வார்த்தையை பயன் படுத்தியுள்ளார்.

அறிவாளிக்கும் புத்திசாலிக்கும் ஒரு மிகப்பெரிய  வித்தியாசம் உண்டு. அறிவு என்பது கல்வி அல்லது பலவேறு புத்தகங்களை படிப்பதின் மூலம் பெறுவது. அதாவது வெளி உலகத்திலிருந்து நமக்குள் செல்வது. மாணவர்கள் அநேக புத்தங்களை படித்து அறிவாளிகளாய் திகழுதல் இதற்க்கு உதாரணம். புத்தி என்பது ஒரு மனிதன் தன்னிடம் உள்ள தாலந்துகளின் மூலம் ஒரு வேலையை சிறப்பாக செய்து முடிப்பதற்கு ஒப்பாகும்.

உதாரணத்திற்கு தமிழ்நாட்டிலே அறிவாளியாய் இல்லாதவர்கள் புதிசாலியாய் சாதித்து இருக்கின்றார்கள். கலைஞர் எஸ்.எஸ்.எல்.சி.வரை (பத்தாம் வகுப்பு) படித்து தேர்வில் வெற்றி பெறாதவர். அறிஞர் அண்ணா கூட மூன்றாவது முறை தான் எஸ்.எஸ்.எல்.சி-யில் தேறினார். கணிதத்தில் அண்ணா ரொம்ப வீக்! இவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள் ஆனால் இருவருமே பயங்கரமான புத்திசாலிகள் என்று நாம் அணைவரும் அறிவோம்.

வேதம் சொல்கின்றது புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும் (நீதி 14:6). புத்தியுள்ளவன் தன்னிடம் உள்ள தாலந்துகளை சிறந்த முறையில் செயல்படுத்தி சாதிப்பதால் இவர்கள் அறிவாளிகளை விட மேன்மையானவர்கள் என்று வேதம் சொல்கின்றது. உலகத்தில்கூட அறிவாளிகளை விட புத்திசாலிகளே அதிகமாய் சாதித்துள்ளனர்.


இயேசு கிறிஸ்த்துவும் தனது பிள்ளைகள் புத்தியுள்ளவர்கலாக, சாதனையாளர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றார். எதிலே புத்தியுள்ளவர்களாக இருக்க வேண்டும். வேத வசனம் சொல்கின்றது, “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து,ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள் (I பேதுரு 4:7). அநேக நாடுகளில் கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகின்றார்கள். உயிர் கொல்லி வைரஸ்கள் பரவுகின்றன. நில நடுக்கங்கள் ஏற்படுகின்றன.

யுத்தங்களை செய்திகளில் வாசிக்கின்றோம். ஆம் பிரியமானவர்களே, எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று. மணவாளன் இயேசுவின் வருகை சமீபமாயிற்று. இதை உணர்ந்து ஜாக்கிரதையோடு ஜெபிபவர்கள் புத்தியுள்ளவர்கள்.

மேலும் நாம் தெளிந்த புத்தியைப் பெற, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தில் நிறைந்து ஜெபிக்க வேண்டும். தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். (II தீமோத்தேயு 1:7).

ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் ரகசியவருகையில் எடுத்துக் கொள்ளப்பட்டவர்கள். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப்பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்.

லூக்கா:21.36. விழித்திருந்து ஜெபம்பண்ணாதவர்கள் (அதாவது) தேவனுக்கு முன்பாக நிற்க தகுதி இல்லாத அந்த ஐந்து புத்தி இல்லாதா கன்னிகைகளைப் போல உலகத்தாரோட கை விடப்படுவார்கள். நீங்கள் புத்தியுள்ளவர்களா? ஒரு நாளில் எவ்வளவு நேரம் நீங்கள் ஜெபிகின்றீர்கள் என்று யோசித்தும் நிதானித்தும் பாருங்கள். ஒருவேளை ஜெபத்திலும் வேதவாசிப்பிலும் குறைவுள்ளவர்களாக நீங்கள் காணப்படுவீர்கள் என்று சொன்னால், உடனே ஒரு மணி நேரமாவது ஜெபத்திலும் வேத வாசிப்பிலும் தரித்திருப்பேன் என்று உங்களை அர்ப்பணித்து புத்தியுள்ளவர்களாய் உடனடியாக மாறிவிடுங்கள்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக
ஆமென்..அல்லேலூயா

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:

Post a Comment