Wednesday, 2 July 2014

பாவியை மன்னித்தார்

இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். யோவான் 8:11

ஒரு நாள் இயேசு கிறிஸ்து தேவாலயத்திலே உபதேசம் பண்ணிக் கொண்டிருக்கையில், விபசாரத்திலே கையும் மெய்யுமாய் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அவரிடம் கொண்டு வந்தார்கள். வேதபாரகரும், பரிசேயரும். மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி அவளை கல்லெறிந்து கொல்ல வேண்டும், நீர் என்ன சொல்லுகிறீர் போதகரே என்று கேட்டார்கள். குற்றப்படுத்துவதற்கு இரண்டு அல்லது 3 சாட்சிகள் தேவை. ஆனால், இங்கே ஒரு கூட்டம் சாட்சி சொல்ல இருக்கிறார்கள். குற்றம் சாட்டுகிறவர்கள் கல்லெறிய வேண்டியது தானே, ஏன் இயேசுவிடம்கொண்டு வருகிறார்கள். 6ம் வசனம் சொல்லுகிறது: இதன் மூலமாக இயேசுவைக் குற்றப்படுத்த வேண்டும் என்று தான் அவர்கள் அப்படிச் செய்தார்கள். இயேசு அவளை மன்னிப்பார் என்று அவர்களுக்கு தெரியும். ஆகவே மோசேயின் நியாயபிரமாணத்தை மீறி விட்டார் என்று அவர்மேல் குற்றம் சாட்டும்படியாகத் தான் அவரிடம் அவர்கள் கொண்டு வந்தார்கள்.

ஆனால் இயேசு மோசேயின் நியாய பிரமாணத்தை மீறவில்லை. கல் எறியுங்கள் என்று சொன்னார், ஆனால் பாவம் செய்யாதவன் முதலாவது கல்லெறி என்றார். ஏனென்றால் பாவத்தின் சம்பளம் மரணம். நீ பாவம் செய்தவன் என்று உன்மனச்சாட்சி உன்னைக் குற்றப்படுத்துமானால் நீயும் மரணத்திற்கு பாத்திரவான் தான். உன்னையும் கொல்ல வேண்டும் என்பதை உணர்த்தவே இயேசு அப்படிச்சொன்னார். கல்லெறிய வந்தவர்கள் ஒவ்வொருவராக கலைந்து செல்ல ஆரம்பித்தார்கள். அந்த கூட்டத்திலேயே அந்த பெண்ணை தண்டிக்க, அந்த முதல் கல்லை எறிய தகுதியானவர் இயேசு தான். ஆனால் அவர் அவளை மன்னித்தார். கிருபையினாலும்,சத்தியத்தினாலும் நிறைந்தவர் மன்னித்தார். அவளோடு பேசினார்: ஒருவரும் உன் மேல் கல் எறியவில்லையா? என்றார். நானும் உன்னை மன்னிக்கிறேன் என்றார். மன்னித்து, அவளது பாவ வாழ்க்கையிலிருந்தும், மரணத்திலிருந்தும் அவளை மீட்டெடுத்தார்.

கிருபை நிறைந்த இயேசு அவளை மன்னித்தார். சத்தியம் நிறைந்த இயேசு சத்தியத்தை சத்தியமாக அவளுக்கு சொல்லி, வாழ்வின் வழியை கற்றுக் கொடுத்தார். 11ம் வசனம் சொல்லுகிறது: போ, இனி பாவம் செய்யாதே என்று இயேசு சொன்னார் (Go now and leave your life of sin). அவளை மன்னித்தது மட்டுமல்ல, பரிசுத்த வாழ்வின் வழியையும் கற்றுக் கொடுத்தார். அந்த விபசார ஸ்திரியின் வாழ்க்கை அன்றோடு மாறியது.அன்று மட்டும் அவள் இயேசு சந்திக்காமல் இருந்திருந்தால், அவள் மரணத்தை சந்தித்திருப்பாள். ஆனால் இயேசு அவள் வாழ்க்கையை மாற்றினார். அவளது பாவ வாழ்க்கை முற்றிலும் மாறினது. பரிசுத்தவாட்டியானாள். இந்த இயேசு உங்கள் பாவங்களையும் மன்னித்து, உங்கள் அக்கிரமங்களை நீக்கி, உங்களை சுத்திகரிப்பதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். இன்று நீங்கள் அவரை கூப்பிட்டால், உங்கள் வாழ்க்கை மாறும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக!

நன்றி- விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:

Post a Comment