Sunday, 27 July 2014

என் கரத்தினால் உன்னை மூடுவேன்

“இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்” (யாத். 33:21,22)


மோசேக்கு, கர்த்தர் தன்னுடைய மகிமையைக் காண்பித்தபோது, தமது திரித்துவத்தை வெளிப்படுத்தினார். இங்கே முதலாவது, கன்மலையாகிய தேவனைப் பார்க்கிறோம். இரண்டாவது,கரத்தினால் மூடும் தேவனைப் பார்க்கிறோம். மூன்றாவது, மகிமையோடு கடந்துபோகும் தேவனைப் பார்க்கிறோம். இதன் மூலம் மோசேக்கு கர்த்தர் ஒரு மகிமையின் வெளிப்பாட்டை கொடுக்கச் சித்தமானார். கர்த்தர் எப்போதும் உங்களிடம், “என் மகனே, மகளே, என்னண்டை ஒரு இடம் உண்டு. நீ அங்கே கன்மலையில் நில்லு” என்று அன்போடு அழைக்கிறார்.

பிரச்சனைகள், போராட்டங்களின் மத்தியிலும், கர்த்தரண்டை உங்களுக்கு நிச்சயமாகவே ஒரு இடம் உண்டு. உங்களுக்கு அடைக்கலம் கொடுக்கும், அந்த கன்மலையிலே வெடிப்பு உண்டு. “அந்தக் கன்மலை கிறிஸ்துவே” என்று 1 கொரி.10:4-ல் நாம் வாசிக்கிறோம். அந்தக் கன்மலை ஜீவத்தண்ணீரைப் புறப்படப்பண்ணின ஞானக் கன்மலை. கன்மலையின் வெடிப்பு என்பது கிறிஸ்துவினுடைய காயங் களாகும்.

உங்களை தமக்குள் மறைத்துக் கொள்வதற்காகவே, இயேசு பிளவுண்ட கன்மலையானார். நீங்கள் அவருடைய காயங்களுக்குள் இருந்தால்தான், அவருடைய இரத்தத்தின் புண்ணியத்தின் மூலமாக,தேவனுடைய மகா மகிமையைக் கிட்டிச்சேர முடியும். அவர் உங்களை மிகுந்த அன்போடு, “கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே!” என்று அழைக்கிறார் (உன். 2:14). கிறிஸ்துவுக்குள் மறைந்திருக்கிற தேவபிள்ளைகளை, பிதாவாகிய தேவன் தம்முடைய அன்பின் கரத்தினாலே மூடுகிறார். மோசேக்கு முன்பாக மகிமையோடு கடந்துப் போகிறவர், மகிமையின் ஆவியானவர் (1பேது. 4:14). ஆகவே, மகிமையை காண வாஞ்சிக்கிற தேவபிள்ளைகளுக்கு, பிதாவாகிய தேவனும், குமாரனாகிய தேவனும், பரிசுத்த ஆவியானவரும் இணைந்து, தங்களுடைய மகிமையை விளங்கச் செய்கிறார்கள்.

நான் சிறுவனாய் இருந்த காலத்தில், சூரிய கிரகணத்தின்போது, விளக்கு சிம்னியிலுள்ள கண்ணாடியிலே புகைப்பிடித்து அதன் வழியாக சூரிய கிரகணத்தின் காட்சியை நோக்குவதுண்டு. இப்பொழுதெல்லாம் கூலிங் கிளாஸ் மூலமாக சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். அதுபோலவே,கர்த்தருடைய மகிமையை வெறும் கண்களால் காண முடியாது. கன்மலையின் வெடிப்பிலே உள்ள இயேசுவின் இரத்தத் தின் மூலமாகதான், தேவனுடைய மகிமையின் சாயலைக் காண முடியும். போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; அவருடைய விலா பிளக்கப்பட்டு, உடனே தண்ணீரும் இரத்தமும் புறப்பட்டு வந்தது. ஆம், தேவமகிமையை காண அங்கே உங்களுக்கு ஒரு இடம் உண்டு. நீங்கள் கிறிஸ்துவினுடைய காயங்களை தியானித்து, கல்வாரி அன்புக்குள் புகுந்துக் கொள்ளும்போது, அவர் உங்களுக்கு தம்முடைய மகிமையைக் காண்பிப்பார்.

ஆமென்..அல்லேலூயா
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக

நன்றி - அன்றன்றுள்ள அப்பம், விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

No comments:

Post a Comment