Wednesday, 23 July 2014

பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்

“… இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்…” (ஏசா. 43:1).

உங்களை சிருஷ்டித்தவர்தான், உங்களை உருவாக்கும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டார். இரட்சிக்கப்பட்ட ஒவ்வொரு விசுவாசியையும், கர்த்தர் நீதிமானாக, பரிசுத்தவானாக உருவாக்குகிறார். நீங்கள் கிறிஸ்துவின் பூரணத்தை அடைய அழைக்கப்பட்டவர்கள். உங்களை கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவர்களாக நிலைநிறுத்தும்படி, எல்லா ஊழியர்களும் உங்களுக்காக பாடுபடுகிறார்கள்.

உதாரணமாக, உங்களுடைய மகனை மருத்துவக் கல்லூரியில் சேர்க்கிறீர்கள். அவன் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் அங்கே படிக்கவேண்டும். அதன்பிறகு, அனுபவமுள்ள டாக்டர்களின் கீழ், ஓராண்டு உதவியாளராக இருந்து, டாக்டர் தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் மகனை பல பேராசிரியர்கள், பல புத்தகங்கள், பல அனுபவங்கள், பல செய்முறை பயிற்சிகள், டாக்டராக உருவாக்கி விடுகின்றன. பிற்காலத்தில் அவர்கள் சிறந்து விளங்குவார்கள்.
அதுபோல, ஆவிக்குரிய ஜீவியத்தில் உங்களை உருவாக்குவதற்காக, சபையில் ஐந்து வகை ஊழியர்களைக் கர்த்தர் வைத்திருக்கிறார். அப்போஸ்தலர்கள், தீர்க்கதரிசிகள், சுவிசேஷகர்கள்,மேய்ப்பர்கள், போதகர்கள் இணைந்து உங்களை உருவாக்கு கிறார்கள். வேத புத்தகம் உங்களை உருவாக்குகிறது. பரிசுத்த ஆவியானவரும், நீங்கள் பரிசுத்தமுள்ள பாத்திரங்களாக விளங்கும்படி,உங்களை உருவாக்குகிறார்.

நீங்கள் கர்த்தருடைய கரத்திலே, களிமண்ணைப்போல இருக்கிறீர்கள். இந்த களிமண்ணை எந்தப் பாத்திரமாக உருவாக்கலாம் என்பதைக் குறித்து கர்த்தருக்கு திட்டமான ஒரு நோக்கம் உண்டு,சித்தமுண்டு, ஒரு வலுவான செங்கல்லை உருவாக்க வேண்டுமானால், அது அக்கினி சூளையின் வழியாக கடந்து வரவேண்டியது அவசியமாய் இருக்கிறது. அதுபோலவே கர்த்தர் உங்களை அக்கினி அபிஷேகத்தால் நிரப்புகிறார். அப்படியே கர்த்தர், யாக்கோபை, இஸ்ரவேலாய் உருவாக்கினார்.

யார் இந்த யாக்கோபு? யார் இந்த இஸ்ரவேல்? அது நாம் தான். வேதம் சொல்லுகிறது: “உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம் (ரோம. 2:29). பழைய ஏற்பாட்டு இஸ்ரவேலர், கர்த்தரோடு விருத்த சேதனத்தின் மூலம் உடன்படிக்கை செய்தார்கள். நாமோ கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் உடன்படிக்கை செய்திருக்கின்றோம். “யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்!” (எண். 24:5). “கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும்,இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார்” (சங். 135:4). நாம் கர்த்தரால் தெரிந்துகொள்ளப்பட்ட அவருடைய சொந்த ஜனமாய் இருப்பதால் எதைக் குறித்தும் கலங்க வேண்டாம். கர்த்தர் நமக்காய் யூத்தம் செய்வார்.
ஆமென்.. அல்லேலூயா
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக

நன்றி - அன்றன்றுள்ள அப்பம்,

No comments:

Post a Comment